கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு எப்போது தீரும்?



தலையில் காலி சிலிண்டரை சுமந்து கொண்டு சாலையை மறிக்கிறார்கள் மக்கள். ஏஜென்சிகளில் தினமும் மல்லுக்கட்டல்கள். ஆர்டர் செய்து 60 நாட்களாகியும் கேஸ் சிலிண்டர் வந்தபாடில்லை. 2 மாதங்களாக பல வீடுகளில் அடுப்பே எரியவில்லை. திடீரென தாக்கியுள்ள தட்டுப்பாட்டால் நிலைகுலைந்து நிற்கிறார்கள் தமிழகத்து இல்லத்தரசிகள்.

கேஸ் சிலிண்டர் ஆர்டர் செய்தால் அதிகபட்சம் 48 மணி நேரத்துக்குள் டோர் டெலிவரி செய்யப்பட வேண்டும். எக்காலத்திலும் இந்த விதியை டிஸ்ட்ரிபியூட்டர்கள் கடைப்பிடித்ததில்லை. தட்டுத்தடுமாறி வந்து சேர குறைந்தது ஒரு வாரமாவது ஆகும். அதுவும் இல்லை இப்போது. ஏஜென்சிக்கு போன் செய்தால் தேய்ந்து போன ரெக்கார்டு மாதிரி ''இரண்டு நாட்களில் வந்துவிடும்’’ என்று மாதக்கணக்கில் ஒரே பதிலைச் சொல்கிறார்கள்.

இந்தியா முழுவதும் சுமார் 34 கோடி குடும்பங்கள் கேஸ் சிலிண்டர் பயன்படுத்துகின்றன. சமையல் எரிவாயு நுகர்வில் இந்திய அளவில் தமிழகமே முதன்மை வகிக்கிறது. இந்தியன் ஆயில், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள் டிஸ்ட்ரிபியூட்டர்கள் மூலம் கேஸ் சிலிண்டர்களை வினியோகிக்கின்றன.

இவற்றில் இந்தியன் ஆயில் நிறுவனமே 50 சதவீதத்துக்கு மேல் சிலிண்டர் சப்ளை செய்கிறது. தமிழகத்தில் 1 கோடியே 4 லட்சம் பேர் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் கேஸ் சிலிண்டரான இண்டேனை பயன்படுத்துகிறார்கள். சென்னையில் மட்டும் 12 லட்சத்து 62 ஆயிரம் பேர். இதில் 50% பேர் இரண்டு சிலிண்டர் பயன்படுத்துகிறார்கள். இந்நிறுவனத்தின் வாடிக்கையாளர்களே இப்போது தட்டுப்பாட்டால் தவிக்கிறார்கள். 

‘‘எல்லாப் பகுதிகளிலுமே தட்டுப்பாடு நிலவுகிறது. என்ன காரணம் என்று தெரிவிக்க டிஸ்ட்ரிபியூட்டர்கள் மறுக்கிறார்கள். சென்னை ஆழ்வார்பேட்டையில் ஒரு பெண், புக் செய்து 2 மாதங்கள் காத்திருந்தும் சிலிண்டர் கிடைக்கவில்லை. போலீஸில் அவர் புகார் செய்ய, போலீஸார் தலையிட்டு சிலிண்டரை வாங்கிக் கொடுத்துள்ளனர்.

 அதிகாரிகளிடம் கேட்டால், ‘சப்ளையில் எந்தப் பிரச்னையும் இல்லை, நாங்கள் சரியாகவே டிஸ்ட்ரிபியூட்டர்களுக்கு அனுப்புகிறோம்’ என்கிறார்கள். பிறகு எங்கே தப்பு நடக்கிறது? அரசு இதில் தீவிர கவனம் செலுத்த வேண்டும்...’’ என்கிறார் ‘கன்ஸ்யூமர் அசோசியேஷன் ஆஃப் இந்தியா’ அமைப்பின் நிறுவனர் தேசிகன்.

ஏன் இந்த தட்டுப்பாடு? இண்டேன் கேஸ் டிஸ்ட்ரிபியூட்டர் அசோசியேஷன் தலைவர் கேப்டன் ஜெகதீசனிடம் பேசினோம். ‘‘5 ஆண்டுகளுக்கு ஒருமுறை சிலிண்டர்களின் பாதுகாப்புத் தன்மையை உறுதி செய்வதற்காக சோதனைகள் நடத்தப்படுவது வழக்கம். அந்த நேரத்தில் சற்று தட்டுப்பாடு ஏற்படலாம். கடந்த ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் இந்த சோதனைப் பணிகள் தொடங்கின. அதனால்  சிலிண்டர் சப்ளை பாதிக்கப்பட்டது. இச்சூழலில் 1.80 லட்சம் புதிய சிலிண்டர்கள் வாங்க முடிவு செய்து ஆந்திரா, டேராடூன் பகுதிகளில் ஆர்டர் செய்யப்பட்டது.

தற்போது அந்த சிலிண்டர்கள் வந்து விட்டன. சென்னை மண்டலத்துக்கு 90 ஆயிரம் சிலிண்டர்களும், தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு 90 ஆயிரம் சிலிண்டர்களும் அனுப்பப்பட்டு வருகின்றன. இடையில், மலேசியாவில் இருந்து கேஸ் அனுப்புவதில் சிறிய தடங்கல் இருந்தது. அதுவும் இப்போது சரியாகி விட்டது. ஆயினும் உடனடியாக நிலை சரியாகி விடாது. தீபாவளிக்குள் சப்ளை சீராகி விடும்...’’ என்கிறார் அவர்.

- வெ.நீலகண்டன்