பழங்குடிகளுக்காக வாழ்க்கையை அர்ப்பணித்த தம்பதி!



‘‘எவ்வளவோ வளர்ச்சிகளைக் கடந்தாச்சு. ஆனா இந்த வளர்ச்சி யோட சிறுதுளி கூட இந்த மண்ணோட பூர்வகுடிகளுக்குப் போய்ச் சேரல. பிரசவ மரணம், சிசு மரணம், ஊட்டச்சத்து இல்லாம மரணம்னு நாகரிக சமூகம் வெட்கித் தலைகுனியும் அளவுக்கு அவங்க வாழ்க்கையை மரணமும் நோயும் கவ்வியிருக்கு.

 எல்லாத் தரப்பாலும் கைவிடப்பட்டு, நம்பிக்கையிழந்து வாழுற அவங்களுக்கு, நாம படிச்ச படிப்பை சமர்ப்பிக்க முடிவு பண்ணித்தான் நானும் லலிதாவும் 27 வருஷம் முன்னாடி இந்த கிராமத்துக்கு வந்தோம்...’’ - லேசாக மலையாளம் மணக்கும் மருத்துவர் ரெஜி எம்.ஜார்ஜின் தமிழ் ஈர்க்கிறது. மலர மலர சிரித்துப் பேசுகிற அவரது இயல்பு மனதுக்கு நெருக்கமாகிறது.  

பிணத்துக்கும் வைத்தியம் செய்து பணம் பறிக்கும் அளவுக்கு மருத்துவம் மலினமாகி விட்ட சூழலில், ஏதுமற்ற பழங்குடி மக்களுக்காக தங்களை அர்ப்பணித்திருக்கிறார்கள் ஜார்ஜும், அவருடைய காதல் மனைவி லலிதாவும். தர்மபுரி, சேலம், விழுப்புரம், திருவண்ணாமலை, நாமக்கல் மாவட்டங்களில் வசிக்கும் பல்லாயிரம் பழங்குடி மக்கள் இந்த தம்பதியை கடவுளாகவே கருதுகிறார்கள்.

தர்மபுரி மாவட்டம் அரூரில் இருந்து கோட்டப்பட்டி வழியாக வாழப்பாடி செல்லும் சாலையில், அடர் வனத்துக்கு நடுவில் இருக்கிறது சிட்டிலிங்.

யானைகளும், காட்டெருமைகளும், செந்நாய்களும் சுதந்திரமாக உலவித் திரியும் வியப்பும், விபரீதமுமான இந்த நிலப்பரப்பில்தான் செயல்படுகிறது ‘ட்ரைபல் ஹாஸ்பிட்டல்’. மருத்துவருக்குரிய எந்த ‘உயர்’ அடையாளமும் இன்றி டிரவுசரும், டி-ஷர்ட்டுமாக வளைய வருகிறார் ஜார்ஜ். 24 மணி நேரமும் அவசர சிகிச்சை, 30 படுக்கைகள் கொண்ட சிறப்பு சிகிச்சைப் பிரிவு, அறுவை சிகிச்சை அரங்கு, மருந்தகம் என பரவிக் கிடக்கிற இதன் வெளிகளில் நம்பிக்கை தொனிக்க நிரம்பியிருக்கிறார்கள் மக்கள்.

‘‘நானும் லலிதாவும் ஆலப்புழா மருத்துவக் கல்லூரியில படிச்சோம். ரெண்டு பேருமே வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவங்கதான்! ஆனா, மற்ற மாணவர்களைப் போலில்லாம எங்களுக்கு மருத்துவம் சார்ந்து சில வேறுபட்ட கனவுகள் இருந்துச்சு. அந்த கனவுகள்தான் எங்களை ஒரு புள்ளியில இணைச்சுச்சு.

ரெண்டு பேருமே நிறைய புத்தகங்கள் வாசிப்போம். விவாதிப்போம். காந்திஜியும் விவேகானந்தரும் எங்களுக்கு சில கொள்கைகளை வகுத்துக் கொடுத்தாங்க. ‘மருத்துவத்தை வச்சு காசு பண்ணக் கூடாது; யாருக்கு மருத்துவம் கிடைக்கலையோ, அந்த மக்களைத் தேடிப் போய் சிகிச்சை கொடுக்கணும்’ என படிக்கும் காலத்திலேயே முடிவு செஞ்சுட்டோம்.

எங்க காதலையும், கனவையும் பெரியவங்க ஆசீர்வதிச்சாங்க. ரெண்டு பேரும் காந்தி கிராமம் வந்து கஸ்தூரிபா மருத்துவமனையில இணைஞ்சோம். எங்க கற்பனையில இருந்த வறுமை ரொம்ப மேலோட்டமானது. அதற்கும் கீழே நிறையப் பேர் வாழ்ந்துக்கிட்டிருக்காங்கன்னு அங்கே புரிஞ்சுச்சு. அப்படியான மக்களைச் சந்தித்து அவங்க பிரச்னைகளைப் புரிஞ்சுக்கிறதுக்காக பெட்டி, படுக்கையை கட்டிக்கிட்டு கிளம்புனேன். 1 வருடம் இந்தியா முழுக்க சுத்தினேன்.

மகாராஷ்டிராவில உள்ள பாபா ஆம்தே மருத்துவமனைக்குப் போயிருந்தப்போ, கரடியால கடிக்கப்பட்ட ஒரு பழங்குடி இளைஞனை சந்திச்சேன். 20 கிலோமீட்டர் வலியை சுமந்துக்கிட்டு ரத்தம் சொட்டச் சொட்ட நடந்து வந்திருக்கார். பதறிப் போயிட்டேன். அந்த தருணத்திலேயே எங்க இலக்கு பழங்குடிகள்தான்னு முடிவு பண்ணிட்டேன். தமிழகத்துல பல பகுதிகள்ல ஆய்வு செஞ்சோம். இந்தப் பகுதியைச் சுற்றியிருக்கிற கிராமங்களோட நிலை மிகவும் மோசமா இருந்துச்சு.

நானும் லலிதாவும் 4 மாசம் இங்க தங்கி, மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தினோம். அவங்களே இந்த இடத்துல சின்னதா குடிசை கட்டிக் கொடுத்தாங்க. ஓ.பி, ஆபரேஷன் தியேட்டர் எல்லாமே அதுதான். அப்படி சிறு குடிசையில ஒற்றை விளக்கு வெளிச்சத்துல தொடங்கப்பட்டதுதான் இந்த மருத்துவமனை. நல்ல மனம் படைத்த நண்பர்கள், அரசு உதவிகள் மூலம் இன்னைக்கு வளர்ந்து நிற்குது...’’ - உற்சாகமாகப் பேசுகிறார் ஜார்ஜ்.

ஓ.பி, ஆபரேஷன் தியேட்டர், உள் நோயாளிகள் பிரிவு என சக்கரம் கட்டிச் சுற்றுகிறார் லலிதா. ‘‘நாங்க வந்தப்போ இந்த கிராமத்தில எந்த வசதியும் இல்லை. மழைக் காலங்கள்ல ஆறு ஊரைச் சுத்தி நிக்கும். எந்தப் பக்கமும் போக முடியாது. ஏதாவது அவசரம்னா, 50 கிலோ மீட்டர் தள்ளியிருக்கிற அரூர் மருத்துவமனைக்குத்தான் போகணும். வீட்டிலதான் பிரசவம் நடக்கும். வலி வந்தவுடனே வீட்டுக்கு வெளியில குப்பையோட குப்பையா கொண்டுவந்து போட்டு பிரசவம் பாப்பாங்க.

100 குழந்தை பிறந்தா, 14 குழந்தைகள் இறந்துடும். கர்ப்பிணிகள் இறப்பு விகிதமும் அதிகம். வெறும் சிகிச்சை மட்டும் இந்த மக்களுக்குப் போதாது. சுகாதார விழிப்புணர்வு, பொருளாதார மேம்பாடுன்னு பல தளங்கள்ல வேலை செய்யணும்னு புரிஞ்சுக்கிட்டோம். இங்கிருந்தே பெண்களை தேர்வு செஞ்சு, பயிற்சியும் உதவித்தொகையும் கொடுத்து செவிலியர்களா ஆக்கினோம். எல்லா கிராமங்கள்லயும் ஃபீல்டு கிளினிக் ஆரம்பிச்சோம். மருத்துவர்களே கிராமங்களை நாடிப் போய் சிகிச்சை கொடுப்பாங்க. இந்த தொடர் செயல்பாடுகளால குழந்தைகள் இறப்பு விகிதம் நூற்றுக்கு இரண்டா குறைஞ்சிருக்கு. சுகாதார விழிப்புணர்வும் பெருகியிருக்கு...’’ என்கிறார் லலிதா.

இப்போது 4 மருத்துவர்கள், 22 செவிலியர்கள் முழுநேரமாக பணிபுரிகிறார்கள். 33 மருத்துவ உதவியாளர்கள் கிராமங்களில் வேலை செய்கிறார்கள். தமிழக அரசின் ‘ஹெல்த் சிஸ்டம் ப்ராஜெக்ட்’ உதவியுடன் பழங்குடி மக்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படுகிறது. பிற மக்களுக்கு மருந்துக்கும், சிகிச்சைக்கும் சிறிய அளவில் கட்டணம் வசூலிக்கிறார்கள்.

பழங்குடி மக்களின் பண்பாடு குலையாமல் அவர்களின் வாழ்விடங்களை அடிப்படையாகக் கொண்ட பல்வேறு தொழில்களைப் பயிற்றுவித்து பொருளாதார மேம்பாட்டுக்கும் வழிகாட்டியிருக்கிறார்கள். காட்டுப் பொருட்களை மதிப்பூட்டி விற்கிறார்கள். சிறுதானியத்தில் பிஸ்கெட் தயாரிக்கிறார்கள்.

உடைகளில் எம்ப்ராய்டரி செய்கிறார்கள். 500 ஏக்கருக்கு மேல் இயற்கை வேளாண்மை செய்யத் தூண்டியிருக்கிறார்கள். இந்த தம்பதிக்கு இரு பிள்ளைகள். மூத்தவர் ஹர்ஜ் மருத்துவம் படிக்கிறார். இளையவர் அபே வரலாறு படிக்கிறார். மருத்துவத்தை வச்சு காசு பண்ணக் கூடாது; யாருக்கு மருத்துவம் கிடைக்கலையோ, அந்த மக்களைத் தேடிப் போய் சிகிச்சை கொடுக்கணும்!

வெ.நீலகண்டன்
படங்கள்: சி.சங்கர்