சகுனியின் தாயம்



‘‘சந்தனக் கடத்தல் வீரப்பனைத்தான் கொன்னுட்டாங்களே? இது யாரு புதுசா தங்கப்பன்?’’ பெரியவரைப் பார்த்து தேன்மொழி கேட்டாள். ‘‘வீரப்பனோட கூட்டத்தை சேர்ந்தவன். பார்க்க அச்சு அசலா அவனை மாதிரியே மீசையோட இருப்பான். தடைபட்டுப் போன கடத்தலை இப்ப தங்கப்பன்தான் நடத்தறான். இவன் கூட சில தமிழ்த் தேசியவாதிகளும், புரட்சிகர அமைப்பைச் சேர்ந்தவங்களும் இணைஞ்சிருக்காங்க...’’

‘‘அதாவது இளவரசன், திவ்யா இருக்கிற குழுவைச் சேர்ந்தவங்க... இல்லையா?’’
‘‘ஆமா...’’‘‘கடத்தல்காரனோட கை கோர்த்தா எப்படி புரட்சி வரும்?’’
தேன்மொழி இப்படிக் கேட்டதும் ரங்கராஜனும், கதிரும் பக்கென்று சிரித்துவிட்டார்கள்.
தேநீரை பருகிக் கொண்டிருந்த பெரியவர் தமிழரசன் அவர்கள் இருவரையும் உற்றுப் பார்த்தார். புன்னகைப்பதை நிறுத்திவிட்டு இருவரும் தலைகுனிந்தார்கள்.

‘‘எதுக்கு சிரிச்சீங்க?’’ பெரியவர் குரலை உயர்த்தவில்லை. ஆனாலும் அது இடியாக இறங்கியதை தேன்மொழி உணர்ந்தாள்.
‘‘தவறுதான் தோழர். பகிரங்கமா மன்னிப்பு கேட்டுக்கறோம்...’’ ரங்கராஜனும் கதிரும் ஒரே நேரத்தில் வாய் திறந்தார்கள்.
‘‘எங்களை சுயபரிசீலனை செஞ்சுக்கறோம். குட்டி முதலாளித்துவ பண்புலேந்து இன்னமும் நாங்க விடுபடலை. அமைப்பின் வழிகாட்டுதலோட, அதுலேந்து கூடிய சீக்கிரத்துல வெளியே வர பாடுபடுகிறோம்...’’

‘‘சம்பிரதாயத்துக்காக இப்படிச் சொல்லக் கூடாது...’’‘‘இல்லை தோழர். உணர்ந்து தான் சொல்றோம்...’’ ரங்கராஜன் முணுமுணுத்தான்.‘‘பார்த்தா அப்படித் தெரியலை. அடிக்கடி இதே தவறைத்தான் செய்யறீங்க. மத்த அமைப்புகளை கிண்டல் பண்ணவோ கேலி செய்யவோ நாம கட்சி நடத்தலை. சிதறியிருந்தாலும், வேற வேற பெயர்கள்ல இயங்கினாலும் எல்லாருமே நக்சல்பாரிகள்தான். புரட்சிக்காக போராடறவங்கதான்.

என்ன... அதற்கான வழிமுறைகளும் செயல் திட்டங்களும் வேற வேற. தனி நபர் சாகசவாதம் என்னிக்குமே பயன் தராது. இது நம்ம வழிமுறை இல்லை. இதுதான் மார்க்சிய - லெனினியத்தோட விஞ்ஞானபூர்வமான அணுகுமுறை. அதன்அடிப்படைலதான் நாம மக்கள் திரளைக் கட்டி போராடறோம். இளவரசனும், திவ்யாவும் இருக்கிற குழுவைச் சேர்ந்தவங்க ஆயுதப் புரட்சில நம்பிக்கை வச்சிருக்காங்க. இது தவறுன்னு சுட்டிக் காட்டலாம். கடுமையா விமர்சிக்கலாம். சுயபரிசீலனை செய்யச் சொல்லி வற்புறுத்தலாம்.

ஆனா, கொச்சைப்படுத்தக் கூடாது. அது பூர்ஷ்வாத்தனம்...’’
‘‘புரியுது தோழர்...’’ என்றபடி மற்றவர்கள் குடித்து முடித்த தேநீர் கோப்பைகளை கழுவுவதற்காக கதிர் உள்ளே எடுத்துச் சென்றான்.‘‘தோழர் தேன்மொழி... இப்ப நீங்க கேட்டதுக்கு பதில் சொல்றேன். கடத்தல்காரனோட சேர்ந்தா புரட்சி வராது. இது இணைஞ்சவங்களுக்கும் தெரியும். ஆனா, காடு தங்கப்பன் கட்டுப்பாட்டுல இருக்கு. அது ரகசிய ஆயுதப்பயிற்சிக்கு
உதவும்...’’

‘‘ம்...’’‘‘ஆனா, ஆயுதப் பயிற்சிக்காக மட்டும் அவங்க தங்கப்பனோட இணையலை...’’ ‘‘வேற எதுக்காக தோழர் அவனோட கைகோர்த்திருக்காங்க...’’ ரங்கராஜன் அவரைப் பார்த்தான்.

‘‘தங்கப்பன் மூலமா ஸ்காட் வில்லியம்ஸை கடத்தினாத்தான் மீடியாவுல செய்தி வரும். ஸ்காட் வில்லியம்ஸ் யாரு... எந்த நோக்கத்துக்காக அவன் இந்தியாவுக்கு வந்திருக்கான்... என்ன செய்துட்டு இருக்கான்னு எல்லா உண்மைகளும் வெட்ட வெளிச்சமாகும். இதன் மூலமா மக்கள் ‘ரெட் மார்க்கெட்’ பத்தி தெரிஞ்சுப்பாங்க... அதுக்கு எதிரா போராடுவாங்கன்னு இணைஞ்சவங்க நினைக்கிறாங்க...’’

‘‘ஆனா, ஸ்காட் வில்லியம்ஸ் கடத்தப்பட்ட நியூஸே வரலையே...’’ தேன்மொழி செய்தித்தாளை பிரித்தாள். ‘‘இதுல என்ன எழுதியிருக்குன்னு பாருங்க. ‘சந்தனக் கடத்தல் தங்கப்பனை பிடித்தே தீருவோம் - முன்னாள் காவல்துறை அதிகாரியான வால்டர் ஏகாம்பரம் சூளுரை...’ இவ்வளவுத்தானே இருக்கு?’’ ‘‘இதுதான் தோழர், ஆட்சியாளர்களோட தந்திரம். அதனாலதான் ‘செய்திகளிலிருந்து உண்மைகளைக் கண்டறிவது’ங்கிறதை மார்க்சிய - லெனினியம் தன்னோட பால பாடமா கொண்டிருக்கு...’’
‘‘இதெல்லாம் சரிதான் தோழர். ஆனா..?’’

‘‘சொல்லுங்க...’’‘‘எதிர்பார்த்த செய்தி வரலை. இப்ப இளவரசன் - திவ்யாவோட அமைப்பைச் சேர்ந்தவங்க என்ன செய்வாங்க?’’
‘‘அவங்களுக்கு தெரிஞ்ச பத்திரிகைக்காரங்க மூலமா ஸ்காட் வில்லியம்ஸ் பத்தின நிஜத்தைக் கசிய விடுவாங்க...’’
‘‘அது பலன் தருமா?’’

‘‘தராது. ஏன்னா, அதிகாரிகளுக்கு சார்பான செய்தியாளர்கள், ‘ஸ்காட் வில்லியம்ஸ் எப்படிப்பட்ட நல்லவர் தெரியுமா... சோற்றுக்கே வழியில்லாத குடும்பத்திலிருந்து வந்தவர் தன் உழைப்பால் முன்னேறியிருக்கிறார்... ஏழைகள் மீது பேரன்பும் பெரும் கருணையும் கொண்டவர். அதற்கு உதாரணம் ஆப்ரிக்காவில் நடந்த இந்தச் சம்பவம்...’ அப்படீன்னு உருக்கமா எழுதுவாங்க. ‘ஏழைகளுக்கு குறைந்த செலவில் மருத்துவம் பார்க்கவே எங்கள் கிளையை தமிழகத்தில் தொடங்க நினைத்தோம்’னு ‘மெடிகோ’ நிறுவனம் அறிக்கை வெளியிடும்.

மாவட்டத்துக்கு ஒரு புற்றுநோயாளியை தேர்ந்தெடுத்து இலவசமா சிகிச்சை தருவாங்க... அந்த நியூஸை கொட்டை எழுத்துல வெளியிட வைப்பாங்க. கல்லீரல் பாதிக்கப்பட்ட ஒரு ஏழைத் தொழிலாளிக்கு மாற்றுக் கல்லீரல் பொருத்தி ‘இதுதான் நாங்க செய்ய நினைச்சது’ன்னு அறிவிப்பாங்க... அந்தத் தொழிலாளியோட பிள்ளைகளுக்கு இலவசக் கல்வி கிடைக்க ஏற்பாடு செய்வாங்க...’’
‘‘இப்படியெல்லாம் நடக்கும்னு தங்கப்பனோட சேர்ந்து ஸ்காட் வில்லியம்ஸை கடத்தினவங்களுக்கு தெரியாதா?’’

‘‘தெரியும். அதையும் மீறி இந்தச் செயல்ல இறங்கியிருக்காங்கன்னா அதுக்கு பின்னாடி வேறொரு காரணம் இருக்கும்...’’‘‘அது என்ன தோழர்?’’ கையைத் துடைத்தபடி கதிர் வந்தான்.‘‘இது தொடர்பான இன்னொரு கேள்வி தோழர்...’’ ரங்கராஜன் இடையில் புகுந்தான். ‘‘‘தன்னோட இறுதிக் காலத்துல வீரப்பன் மொத்தமா காட்டை காட்டிக் கொடுத்துட்டான். இப்ப அந்தக் காட்டோட எல்லா பகுதிகளும் போலீஸுக்குத் தெரியும்’னு நாமளே முன்னாடி பேசியிருக்கோம். அப்படிப் பார்த்தா வால்டர் ஏகாம்பரத்தால சுலபமா ஸ்காட் வில்லியம்ஸை கண்ணும் காதும் வைச்சா மாதிரி மீட்டுட முடியுமே? ஆனாலும் அவர் ஏன் செய்தியாளர்கள் முன்னாடி இப்படி பேட்டி கொடுக்கணும்?’’

இருவரையும் மாறி மாறிப் பார்த்த தமிழரசன், ‘‘நீங்க கேட்ட கேள்விகளுக்கு இவங்க கிட்ட பதில் இருக்குன்னு நினைக்கறேன்...’’ என்றபடி தன் பார்வையை தேன்மொழி பக்கம் திருப்பினார்.
‘‘நானா?’’‘‘ஆமா. மனசுல பட்டதை அப்படியே சொல்லுங்க...’’சங்கடத்துடன் நெளிந்த தேன்மொழி, ‘‘இது பதிலான்னு தெரியாது. ஆனா, நடந்தது, நடக்கறது எல்லாமே நாடகம்னு தோணுது...’’ என்றாள்.‘‘புரியலையே...’’ ரங்கராஜன் புருவத்தை உயர்த்தினான்.‘‘எப்படி பாபர் மசூதியை முன் வச்சு சைலன்ட்டா உலகமயமாக்கலை அமல்படுத்தினாங்களோ... அப்படி இந்த தங்கப்பன் வேட்டையை காரணமா காட்டி வேற ஏதோ செய்யப் போறாங்கன்னு நினைக்கறேன்.

அதாவது நாம பேசற, இப்ப நடந்துக்கிட்டு இருக்கிற எதுவுமே உண்மையில்லை. இதுக்குப் பின்னாடி வேற ஏதோ இருக்கு. ஒருவேளை அந்தக் காடுகள்ல இருக்கிற கனிமங்கள், மூலிகைகள் கூட காரணமா இருக்கலாம். தவிர...’’ பெரியவர் அமைதியாக இருக்க, ரங்கராஜனும் கதிரும் அதிர்ச்சியுடன் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள். அதைக் கவனித்தபடியே தேன்மொழி தொடர்ந்தாள்.
‘‘வால்டர் ஏகாம்பரத்தோட உள் கையா தங்கப்பன் இருக்கவும் சான்ஸ் இருக்கு. ஏன்னா, வீரப்பன் சுடப்பட்டப்ப அவன் காட்டுல இல்ல...’’
‘‘வேறெங்க இருந்தான்?’’ கதிர் படபடத்தான்.

‘‘மருத்துவமனைல. அப்ப அவன் கூட நானும் இருந்தேன். யாருக்கும் தெரியாதபடி அவனுக்கு சிகிச்சை அளிக்கச் சொன்னது வால்டர் ஏகாம் பரம்தான்...’’ அதே நேரம் -சத்தியமங்கலம் காட்டுக்குள் வால்டர் ஏகாம்பரம் தலைமையிலான அதிரடிப் படை நுழைவதை தங்கப்பன் மலையுச்சியில் நின்றபடி கவனித்துக் கொண்டிருந்தான். அவன் கைகளில் இருந்த துப்பாக்கியின் முனை, ஓரிடத்தை குறி பார்த்தது. அந்த இடத்தில் முழங்கை அளவுக்கு கொம்புகளைக் கொண்ட ஓர் ஆடு, ஆளுயரத்துக்கு நின்றிருந்தது. ‘‘அந்த இடையனும் இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருக்கிறான்...’’ எரியும் சிதையைப் பார்த்தபடி சார்வாகனர் சொன்னார்.

‘‘அப்படித்தான் கிருஷ்ணன் இருந்தாக வேண்டும். அப்போதுதானே பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் யுத்தம் நிகழும்போது அர்ஜுனனுக்கு உபதேசம் செய்ய முடியும்?’’ என்றபடி கண்களை மூடினார் வயதான சார்வாகனர்.‘‘உருவாக இருக்கும் கீதாசாரத்தை சொல்கிறீர்களா?’’‘‘ஆம்...’’
‘‘அதற்கும் சகுனியின் தந்தை சுபாலனுக்கும் தொடர்பிருக்கிறதா?’’

‘‘நிறைய. ‘தாய் மாமன் என்பது தாய்க்கு சமமான உறவல்லவா? அப்படி இருக்கும்போது அக்காவின் புதல்வர்களை நானே அழிக்கலாமா? அது தர்மமா?’ என சகுனி கேட்டதற்கு சுபாலன் சொன்ன மறுமொழியைத்தான் கிருஷ்ணன் வழக்கம் போல் தனது கூற்றாக வருங்காலத்தில் சொல்லப் போகிறான்...’’
‘‘அது என்ன பதில் என்று நான் அறியலாமா?’’

‘‘தாராளமாக. சகுனி அப்படிக் கேட்டதும், சுபாலன் உடனடியாக எதுவும் சொல்லவில்லை. மைந்தனை அருகில் அழைத்து தன் மடியில் அமர வைத்தார். அவன் தலையைக் கோதினார்...’’ என்றபடி அன்று நடந்ததை அந்த வயதான சார்வாகனர் அசை போடத் தொடங்கினார். அவர் முன் விரிந்த காட்சியில் சுபாலனின் வலது கை விஸ்வரூபம் எடுத்திருந்தது.
அதில் ஆறு விரல்கள் இருந்ததை அப்போதுதான் கவனித்தார்...

‘‘நீங்க சொல்றது நிஜமா?’’ சூனியக்கார பாட்டி அதிர்ந்தாள். ‘‘அது எப்படி சாத்தியம்? முழங்கை அளவுக்கு கொம்புள்ள ஆட்டுக்குத்தான் மகேஷ் சாப விமோசனம் கொடுத்துட்டானே... அப்புறம் அது எப்படி வரும்?’’‘‘இதோ இப்படித்தான்...’’ என்றபடி மந்திரவாதி தாத்தா, மாயக் கண்ணாடியை காட்டினார்.
‘‘மாஸ்டர்...’’

‘‘கத்தாத. நிதானமா யோசி. ஆடு எப்ப தேவதையா மாறிச்சு? மகேஷ் கால் பட்டதும். அப்ப கூட இருந்தது யாரு?’’
சூனியக்கார பாட்டி திருதிருவென விழித்தாள்.‘‘முட்டாள். விக்கிரமாதித்த மகாராஜா முன்னாடி...’’
‘‘ஆமா...’’

‘‘என்ன ஆமா... ஊமான்னு... அதுக்குப் பிறகு நீ அந்த தேவதையை தேடிப் போனே இல்லையா?’’
‘‘போனேன். கரன்ட் கம்பிகளுக்கு மத்தில அவளை சிறை வைச்சேன்...’’
‘‘உறுதியா தெரியுமா?’’

‘‘மாஸ்டர்! என்னையே சந்தேகப்படறீங்களா?’’ படபடத்த சூனியக்கார பாட்டி தன் வலக்கையை காற்றில் கடிகாரம் சுற்றுவது போல் வட்டமிட்டாள். அடுத்த நொடி அங்கு ஒரு காட்சி தோன்றியது. மின்சாரக் கம்பிகளுக்கு இடையில் தப்பிக்க முடியாமல் தேவதை அழுது கொண்டிருந்தாள்.
‘‘இப்ப என்ன சொல்றீங்க?’’

‘‘இப்பத்தான் தெளிவா சொல்றேன்... இது சாப விமோசனம் ஆன தேவதை இல்லை...’’
‘‘மா...ஸ்...ட...ர்..?’’
‘‘ஆத்திரத்துல எல்லாத்தையும் தப்புத் தப்பா செய்துடற... நீ சிறை வைச்சிருக்கிற தேவதையோட வலது கையை பாரு...’’
பார்த்தாள்.

‘‘ஒண்ணும் புரியலையா?’’
‘‘இல்லை மாஸ்டர்...’’
‘‘சரியா போச்சுப் போ. அவளுக்கு மொத்தம் எத்தனை விரல்கள்?’’
‘‘அஞ்சு...’’

‘‘சரி. இப்ப மாயக் கண்ணாடியை பாரு...’’ என்றபடி தன் முன்னால் இருந்த கண்ணாடி பக்கம் சூனியக்கார பாட்டியை வரவழைத்தார். ‘‘மகேஷோட பேசிட்டு இருக்கிற தேவதையோட வலது கைல எத்தனை விரல்கள் இருக்கு?’’
‘‘ஆ...று...’’

‘‘இதுதான் விஷயம். உண்மையான தேவதையோட வலது கைல ஆறு விரல்கள் இருக்கும்...’’
‘‘அப்படீன்னா நான் சிறை வைச்சது?’’

‘‘தேவதையோட தங்கச்சி. ரெண்டு பேரும் இரட்டைப் பிறவிங்க. இந்த உருவ ஒற்றுமையை பயன்படுத்தி விக்கிரமாதித்த மகாராஜா உன்னை நல்லா ஏமாத்தியிருக்கார்.’’
‘‘அப்படீன்னா, கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி மகேஷ் முன்னாடி தேவதை உருவத்துல நான் நின்னப்ப என்னை ஏன் விக்கிரமாதித்த மகாராஜா தடுக்கலை? தப்பான திசைல அவனை அனுப்பி அஞ்சு தலை நாகத்துகிட்ட சிக்க வைக்கப் பார்த்தேனே... அதையும் ஏன் பொருட்படுத்தலை?’’
‘‘அதுக்கான காரணம் அப்ப எனக்கும் தெரியலை...’’

‘‘இப்ப தெரிஞ்சுடுச்சா மாஸ்டர்?’’
‘‘ஆம்’’ என்றபடி மந்திரவாதி தாத்தா சொன்னார். கேட்ட சூனியக்கார பாட்டி மயங்கி விழுந்தாள். மாயக்கண்ணாடி யில் தெரிந்த மகேஷோ கடகடவென்று சிரித்தபடி வேறொரு உருவமாக மாறினான்.
அந்தத் தோற்றம்...

பார்த்துக் கொண்டிருந்த ஸ்பைடர் மேனுக்கும் ஹாரி பார்ட்டரும் ஹார்ட் அட்டாக்கே வந்து விட்டது.
காரணம்...

எந்த நாகத்தை இரண்டாகக் கிழித்துக் கொன்றிருந்தானோ, அந்தப் பாம்பாகவே - ஐந்து தலை நாகமாகவே - அப்போது அவன் உருமாறியிருந்தான். அத்துடன் அந்த ஐந்துத் தலைகள் வழியாக விஷத்தைக் கக்கவும் செய்தான். அந்த விஷங்கள் அனைத்தையும் ஒன்று திரட்டி ‘ஃபுட்’பால்’ சைஸுக்கு ஒரு பந்து போல தேவதை மாற்றினாள். பொன்னிறத்தில் காட்சி தந்த அந்தப் பந்தை தன் கரங்களில் ஏந்தி ஓரிடத்தைக் குறி பார்த்து வீசி எறிந்தாள்.

அந்த இடம்..மந்திரவாதி தாத்தா பதுங்கியிருந்த வௌவால் கோட்டை. ‘‘சீ  ன சக்கரவர்த்தி இருக்கிறாரா? யவன ராணி வந்திருக்கிறேன் என்று சொல்...’’
கட்டளைத் தொனியில் கம்பீரமாக ஆணை பிறப்பித்த யவன ராணியின் வலது கையில் ஐந்து விரல்கள் மட்டுமே இருந்தன.

‘‘டாக்டர் ஏன் அவரைக் கேட்காம எதுவும் சாப்பிடக்கூடாதுன்னு சொல்றாரு..?’’
‘‘உங்க இஷ்டத்துக்கு சாப்பிட்டு உடம்பு குணமாயிட்டா என்ன பண்றது... அதான்!’’

‘‘அவரு போலி பல் டாக்டர்னு எப்படிச் சொல்றீங்க..?’’
‘‘தங்கப்பல் கட்டறதுக்கு செய்கூலி, சேதாரம், வாட் வரி எல்லாம் போடுறாரே...’’

‘‘டாக்டர் ரொம்ப நேரமா கூகுள்ல என்ன தேடிக்கிட்டு இருக்காரு..?’’
‘‘புதுசா வியாதி ஏதாவது வந்திருக்கான்னு சர்ச் பண்ணிப் பார்க்கிறாரு!’’
- பி.பாலாஜி கணேஷ், கோவிலாம்பூண்டி.

(தொடரும்)

கே.என்.சிவராமன்