யோகா



‘‘ஹலோ, ஸ்ருதி..?’’
‘‘ஸ்ருதிதான் பேசறேன். நீங்க..?’’

‘‘நான் மலர். ஆறு மாசத்துக்கு முன்னாடி யோகா கிளாஸ்ல ஒரே பேட்ச். ஞாபகம் இருக்கா?’’
‘‘ஆங்... ஞாபகம் இருக்கு. சொல்லுங்க! எப்படி இருக்கீங்க?’’

‘‘நல்லா இருக்கேன். ஒண்ணுமில்ல ஸ்ருதி. கிளாஸ் முடிஞ்சு முதல் ரெண்டு மாசம் வரை ஒழுங்கா யோகாவும் தியானமும் வீட்டுல பிராக்டீஸ் பண்ணினேன். அதுக்கப்புறம் நேரமே கிடைக்கல. நீங்க எப்படின்னு கேக்கலாம்னுதான் போன் பண்ணினேன்.’’

‘‘ஓ... அப்படியா? இந்த ஆறு மாசமா ஒருநாள் விடாம தினமும் யோகா செஞ்சிட்டுதான் இருக்கேன் மலர். நீங்களும் இனிமேலாவது விடாம செய்யுங்களேன்’’ - பிறகான நலம் விசாரிப்புகளுடன் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதை கவனித்துக் கொண்டிருந்தார் ஸ்ருதி யின் கணவர் ராகவன். ‘‘கிளாஸ் போன ஒரு மாசத்தோட யோகாவ மூட்டை கட்டி வச்சவ நீ. இப்படி அண்டப் புளுகு புளுகுறே..?’’ என்றார்.

‘‘உண்மையை நான் சொல்லியிருந்தா நம்மள மாதிரிதான் எல்லாரும்னு அதோட யோகாவை சாதாரணமா விட்டுருவாங்க. ஆனா, இப்ப... நானும் கண்டிப்பா செய்யப் போறேன்னு மனசார வாக்குக் கொடுத்திருக்காங்க. ஏதோ, என் பொய்யால அவங்களாவது ஆரோக்கியமா இருந்தா சரிதான்!’’ - பெருமூச்சோடு சொன்னாள் ஸ்ருதி.