கவலை மருந்து... காமெடி விருந்து!



‘‘க்ளைமேட் அருமையா இருக்குல்ல!’’ - குளிர்காற்றில் ஆடும் கோயில் தீபமாய் பிரகாசிக்கும் விழிகளுடன் விஜயலட்சுமி கேட்டால், ‘‘ஆமாங்க!’’ என்பதைத் தவிர வேறென்ன சொல்ல! தாவணியில் அழகு ஆத்திச்சூடி... சுடிதாரில் புதுக்கவிதை...

வேணாங்க.... பேசாமல் அவரிடமே பேசிடுவோம்!‘‘என் நல்ல நேரம், இப்போ என் படங்கள் ரொம்ப நல்லா வந்திட்டிருக்கு. ‘ஆடாம ஜெயிச்சோமடா’ ஆரம்பிச்ச நிமிஷத்திலிருந்து சுவாரஸ்யம்தான். ‘ஃபீல் குட் மூவி’ன்னு சொல்வாங்களே... அந்த ரகம்! பாபி சிம்ஹா, கருணா, பாலாஜின்னு பெரிய சிரிப்பு ரவுண்ட் இருக்கு. ‘ஜிகர்தண்டா’வில் அநியாயத்துக்கு பயமுறுத்தின சிம்ஹா, இதில் காமெடியில் பின்றார். கருணா, கேட்கவே வேணாம். சரசரன்னு மேலே போய்க்கிட்டு இருக்கார்’’ - சித்திரமாகப் பேசுகிறார் விஜி.

‘‘உங்க கேரக்டர் என்ன?’’

‘‘சமீப காலத்தில் எனக்கு கிடைச்சிருக்கிற நல்ல கேரக்டர் இது. பாண்டி பஜாரில் தள்ளுவண்டி இட்லி கடை வச்சிருக்கிற பொண்ணு. சொந்தமா ஒரு பாத்ரூம் வச்சிருக்கிற வீடு இருக்கிறவனைத்தான் கல்யாணம் கட்டிக்கணும்னு ஆசை ஆசையாக காத்துக்கிட்டிருக்கிற பொண்ணு. இரண்டு பாட்டுக்கு வந்தோம்னு நின்னுட்டுப் போயிடுற கேரக்டர் கிடையாது. எவ்வளவோ படங்களை ஹீரோயினுக்கு முக்கியத்துவம் இல்லைன்னு தயங்கி மறுத்திருக்கேன்.

ஆனால், டைரக்டர் பத்ரி வந்து கதை சொல்லத் தொடங்கின நாலாவது நிமிஷத்திலிருந்து சிரிக்கத் தொடங்கி அவர் முடிக்கிற வரைக்கும் நிறுத்தவேயில்லை. எவ்வளவோ கவலைகளை சுமந்துக்கிட்டு மக்கள் திரியுறாங்க. தியேட்டருக்கு வந்தால் மனசு லேசாகி சிரிச்சுக்கிட்டு, கொஞ்சம் சிந்திச்சுட்டும் போகணும். அதற்கு முழு வாய்ப்பு தருகிற படம் இது!’’

‘‘கருணாகரனோடு டூயட் வேற இருக்கு..?’’

‘‘ஆனால், அதில் கூட காமெடி பின்னணி இருக்கும். நான் அவரோட காதலுக்கு நிறைய கண்டிஷன் போடுவேன். நாங்க எங்கே பாட்டுப் பாடினாலும் எங்களைச் சுத்தி ஏஞ்சல்கள் இருப்பாங்க. பீச்ல பேசிட்டு இருந்தாலும் பக்கத்தில் துணை மாதிரி இருப்பாங்க. தூங்கும்போது கூட எங்களுக்கு காவல் ஏஞ்சல்ஸ்தான். இதில் அச்சு அசல் மெட்ராஸ் கேர்ள்.

அப்படியே மெட்ராஸ் பாஷை பேசுறேன். அதுக்காக, புரிஞ்சுக்க முடியாத மொழியில் இருக்காது. ஆனாலும், காமெடி நிச்சயம் நிறைய. அழ வச்சிடலாம், ஆனால் சிரிக்க வைக்கிறதுதான் ஆகப் பெரிய காரியம். எனக்கு என்ன பிடிச்சதுன்னா, இந்தப் படத்தில் காமெடியோட ஒரு மெசேஜ் இருக்கு. நம்மளை ஏமாத்திக்கிட்டு பணத்தை அள்ளிக் கொண்டு போயிடுகிற பெட்டிங்கை இவ்வளவு சுலபமா புரிய வைக்க முடியுமான்னு உங்களுக்கே ஆச்சரியம் தாங்காது.’’

‘‘ஒரு நடிகையா எப்படி வெளிப்படணும்னு நினைக்கிறீங்க?’’

‘‘சிரிப்போட சிரிப்பாதான் பார்ப்போம். ஆனா, பின்னாடி யோசிச்சுப் பார்த்தா சென்னைப் பெண்களின் பல கஷ்டங்களை புரிய வைக்கிற மாதிரி, ‘ஆடாம ஜெயிச்சோமடா’ இருக்கும். சி.பி.ஐ ஆபீஸரா, ‘ரெண்டாவது படத்தில்’ நான் வருகிற போர்ஷன், பெண்மைக்குக் கொடுக்கிற அதிகாரமா இருக்கும்.

‘வெண்ணிலா வீடு’, அழகான கிராமத்து பொண்ணுங்களைச் சுற்றி பின்னியிருக்கும். நல்ல சினிமான்னா கொஞ்சம் ரசனைக்கு வழி விடணும். மனசுக்கு ரிலாக்ஸ் தரணும். இந்த மூன்று படங்களுமே சேர்ந்து என்னை நிச்சயம் அடுத்த இடத்திற்குக் கொண்டு போகும்!’’

‘‘அப்பா அகத்தியன் உங்களுக்கு வழி காட்டுவாரா?’’

‘‘சினிமாவில் எல்லாமே என்னுடைய முயற்சிகள்தான்! அப்பா எப்பவும் ‘உன் வாழ்க்கையை நீதான் முடிவு பண்ணணும்’னு சொல்வார். ஒண்ணே ஒண்ணு சொல்வார்... ‘ஷூட்டிங்குக்கு கரெக்ட் டைமுக்குப் போயிரு. ஏன்னா, சினிமாவில் ஒவ்வொரு விநாடியும் செலவு’ன்னு சொல்வார். நிறைய படங்களில் நடிச்சு கோடி கோடியா சம்பாதிக்கணும்னு பேராசை இல்லை. நிம்மதியும், தேவையான பணமும் போதும்னு நினைப்பேன். என் விருப்பத்திற்கும் தகுதிக்கும் தேவையான இடத்தை கண்டிப்பா பெறுவேன்!’’

- நா.கதிர்வேலன்