டிஜிட்டல் லாக்கர் உண்மைகள்!



தெரிஞ்ச விஷயம் தெரியாத விஷயம்

காப்பாற்றுமா? கண்காணிக்குமா?


ஏற்கனவே ஆதார் கார்டுக்கு ஆளாளுக்கு ரெட் கார்டு காட்டிக் கொண்டிருக்கிறார்கள். மக்களை கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வருகிறது எனும் ‘ஆதார்’ குற்றச்சாட்டே இன்னும் தீர்ந்தபாடில்லை... அதற்குள் அதே மாதிரி இன்னொரு சர்ச்சை திட்டத்தை அறிமுகம் செய்திருக்கிறது மத்திய அரசு... அதுதான் டிஜிட்டல் லாக்கர்!

‘‘நம்ம சர்ட்டிபிகேட், நிலப்பத்திரம் எல்லாத்தையும் கவர்மென்ட்கிட்ட கொடுக்கணுமாம். அவங்க அதை பத்திரமா வச்சிருப்பாங்களாம்! போங்கய்யா...’’ என இதைப் பார்த்து பயப்படுகிறார்கள் பெரும்பாலான மக்கள். அப்படி என்னதான் இருக்கு இந்த டிஜிட்டல் லாக்கரில்? ப்ளஸ், மைனஸ்களைப் பட்டியலிட முன்வந்தார் ‘தி சோஷியல் பீப்புள்’ எனும் சமூக ஊடக நிறுவனத் தலைவரான விரால் தாகூர். டிஜிட்டல் லாக்கர் என்றால்..?

 ‘‘வங்கிகளில் கொடுக்கும் பாதுகாப்பு பெட்டகங்களைப் போலத்தான் இதுவும். வங்கி லாக்கரில் ஆவணங்களோடு, நகைகள் உள்ளிட்ட பொருட்களையும் வைத்துப் பாதுகாக்கலாம். ஆனால் இந்த டிஜிட்டல் பெட்டகத்தில் ஆவணங்களை மட்டுமே பாதுகாக்க முடியும். அதுவும் ஸ்கேன் செய்த பிரதி களைத்தான். இதற்குக் கட்டணம் எதுவும் இல்லை. அடிப்படையில் இது ஒரு இணையதளம்தான்.

 www.digitallocker.gov.in என்பது இதன் முகவரி. அடிக்கடி நாம் தொலைத்துவிடக்கூடிய பான் கார்டு, ரேஷன் கார்டு, பள்ளி/கல்லூரி சான்றிதழ்கள், பாஸ்போர்ட், மார்க் ஷீட், நிலப் பத்திரங்கள் போன்றவற்றை ஸ்கேன் செய்து இந்த இணையதளத்தில் பதிவேற்றி விட்டால் போதும். அதன் பிறகு இந்த ஆவணங்கள் தொலைந்தாலும் இந்த லாக்கரில் இருந்து அவற்றை மீண்டும் நகல் எடுத்துக்கொள்ளலாம். ஒருவருக்கு மொத்தம் 10 மெகா பைட் வரை இதில் இடவசதி உண்டு.’’கணக்கு துவங்குவது எப்படி?

‘‘இமெயில் ஐ.டி துவங்குவது போலத்தான் இதுவும். நமது பெயரையும் அலைபேசி எண்ணையும் குறிப்பிட வேண்டியது அத்தியாவசியம். ஆதார் கார்டு விவரங்களை விருப்பம் இருந்தால் கொடுக்கலாம். அல்லது, வீட்டு முகவரி, வாக்காளர் அடையாள அட்டை எண், பாஸ்போர்ட் எண் போன்ற மற்ற விபரங்களைக் கொடுத்து இந்தக் கணக்கைத் துவங்கலாம்.

நமது செல் நம்பருக்குத்தான் பாஸ்வேர்டு அனுப்பப்படும். ஈ மெயில் போலவே அந்த பாஸ்வேர்டையும் யூஸர் ஐடியையும் பயன்படுத்தி எப்போது வேண்டுமானாலும் இந்தக் கணக்கை நாம் திறக்கலாம். பதிவேற்றிய ஆவணங்களைத் தரவிறக்கலாம். அல்லது புதிய ஆவணங்களைப் பதிவேற்றலாம்.’’
என்ன நன்மை?

‘‘ஆவணங்கள் அடிக்கடி தொலைந்து போவதும், சம்பந்தப்பட்ட அரசு அலுவலகங்களில் அதற்கு நகல் கேட்டு, விண்ணப்பித்துக் காத்திருப்பதும் தவிர்க்கப்படும். இது தவிர, அரசு அலுவல் சார்ந்த வேலைகளுக்கு ஒவ்வொரு முறையும் நமது ஆவணங்களைக் கொண்டு செல்ல வேண்டிய அவசியம் இல்லை.

‘எனது சான்றிதழ்கள் டிஜிட்டல் லாக்கரில் உள்ளன’ எனக் குறிப்பிட்டு யூஸர் ஐ.டியை மட்டும் அளித்தால் போதும். அரசு அலுவலகம் நமது லாக்கரில் இருந்து தேவையான ஆவணங்களை டிஜிட்டல் வழியே பெற்றுக்கொள்ளும்.’’
 ஆவணங்கள் திருடப்படும் வாய்ப்பு உண்டா?

‘‘இந்த டிஜிட்டல் லாக்கர் முறையை கிளவுட் ஸ்டோரேஜ் என்பார்கள். அதாவது, உலகின் எந்த மூலையில் இருந்தும் இதைப் பார்க்கலாம், பயன்படுத்தலாம். இதுமாதிரியான வசதிகள் ஏற்கனவே கூகுள் டிரைவ் உள்ளிட்ட தனியார் சேவைகளாகப் பயன்பாட்டில் உள்ளன. அவற்றில் உள்ள பாதுகாப்பை விட அதிக பாதுகாப்பு ஒரு அரசுத் தளத்தில் கிடைக்கும்.

இதை யாரும் ஹேக் செய்து திருடினால் கூட எந்த நாள், எந்த நேரம், எந்தக் கணினியில் இருந்து திருடப்பட்டது என்ற விவரங்கள் தெரிந்துவிடும். திருடுகிற நபரால் நமது ஒரிஜினல் ஆவணங்களை மாற்றி அமைக்க முடியாது. ஆக, ஆவணங்கள் தவறாகப் பயன்படுத்தப்பட்டால் கண்டுபிடிப்பதும் தடுப்பதும் தண்டிப்பதும் சுலபம்!’’

இது சிட்டிசன்களை கண்காணிக்கிற வேலையா?‘‘நேர்மையானவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம்தான். ஆனால், சட்டத்துக்குப் புறம்பாக ஆவணங்களை வைத்திருக்கும் நபர்களுக்கு இது சிக்கல் தரும். இன்று பள்ளிக்கூட,கல்லூரி சான்றிதழ் முதற்கொண்டு நிலச் சான்றிதழ் வரை தப்பான முறையில் பயன்படுத்தப்படுகிறது.

அவர்கள் இந்தப் பக்கமே வர முடியாது. அரசு நினைத்தால் இந்த டிஜிட்டல் பெட்டகத்தில் உள்ள ஆவணங்களைக் கண்காணிக்க முடியும். எனவே இதில் ஆவணங்களை சேமிக்கிற ஒருவர் அந்த ஆவணங்களைப் பயன்படுத்தி தவறான பரிவர்த்தனைகளைச் செய்ய மாட்டார். இது பல தவறுகளைக் களையும்.

மேலும் நிலப்பத்திரத்தை பலவந்தமாகப் பிடுங்குவது, திருடுவது, அதற்காக கொலைகள் செய்வது போன்ற சமூகத் தவறுகள் களையப்படும். தொலைந்துபோன சான்றிதழ்கள், கண்டும் காணாத நிலங்கள் போன்றவற்றை வைத்துப் பணம் பார்க்கும் கும்பலின் பாச்சா டிஜிட்டல் காப்பகத்தின் முன் பலிக்காது.

இதில் சேமிக்கப்படும் தகவல்களை கண்காணிக்க அரசு இதுவரை ஆலோசனை செய்யவில்லை. ஆனால் ஆவணங்களை சரிபார்க்கும் குழுக்கள் எதிர்காலத்தில் அமையக் கூடும். அதுவும் குடிமக்களை தேவையில்லாமல் கண்காணிக்கும் குழுவாக இருக்காது. சட்டவிதிகளுக்குப் புறம்பாக செயல்படும் நபர்களை மட்டும் கண்காணிக்கும் குழுவாகத்தான் இருக்கும்.’’

 இப்போது, இங்கே  இது அவசியமா?‘‘எதிர்காலம் டிஜிட்டல் மயமாகவே இருக்கப் போகிறது. அதற்கு இந்திய மக்களும் தயாராகிக் கொள்ளத்தான் வேண்டும். இன்டர்நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங் போன்றவை புதிதாக வந்தபோதுகூட பலரும் பயப்படத்தான் செய்தார்கள். ஆனால் இன்று மொபைல் அப்ளிகேஷன் மூலமாகவே விர்ச்சுவல் பணத்தை தாராளமாக செலவு செய்யும் பழக்கம் வந்துவிட்டது. அது போலத்தான் இதுவும்.

இணையதளம் மூலமாக மட்டுமில்லாமல், ஸ்மார்ட் போன் மூலமாகவும் வங்கிக் கணக்கு போலவே இந்த லாக்கரைப் பயன்படுத்திக்கொள்வதற்கான ஏற்பாடுகளையும் அரசு செய்து வருகிறது. இதுவும் வந்தால் மிகவும் சுலபமான நடைமுறையாக இது மாறிப் போகும். என்னதான் சுலபம் என்றாலும் பெருவாரியான நமது மக்கள் ஏற்றுக்கொண்டால்தான் எந்தத் திட்டமும் வெற்றி பெறும்.

அந்த வகையில் டிஜிட்டல் லாக்கரின் எதிர்காலமும் இந்திய மக்களிடம்தான் இருக்கிறது!’’தொலைந்துபோன சான்றிதழ்கள், கண்டும்  காணாத நிலங்கள் போன்றவற்றை வைத்துப் பணம் பார்க்கும் கும்பலின் பாச்சா  டிஜிட்டல் காப்பகத்தின்
முன் பலிக்காது.

- டி.ரஞ்சித்
படம்: ஆர்.சி.எஸ்