கிராமங்கள் எல்லாம் அனாதைய கிடக்கு...



‘‘கிராமத்துல ஒரு துண்டு நிலம் கிடைக்காதான்னு நகரத்துல இருந்தவங்கள்லாம் தவிச்சு நின்னது ஒரு காலம். நல்ல சோறு, நல்ல காத்து, நல்ல தண்ணி, நல்ல மனிதர்கள்னு கிராமங்கள் பசுமையோட இருந்த காலம் அது.

இன்னைக்கு எல்லாமே கெட்டுக் கிடக்கு. கிராமங்கள்ல மனிதர்கள் வாழவே முடியாதுங்கிற நிலை வந்திடுச்சு. வளங்கள் எல்லாம் கொள்ளை போகுது.

 இளவட்டங்கள்லாம் பிழைப்புத் தேடி நகரத்துக்கு வந்துட்டாங்க. கிராமங்கள் அனாதையா கிடக்கு... சாமி தூக்க, பிணம் தூக்கக்கூட ஆட்கள் இல்லை. திரும்பவும் சுயசார்பு வாழ்க்கைக்கு மாறலேன்னா கிராமத்து நாகரிகத்தோட மொத்த அடையாளமும் மண்ணோட மண்ணா புதைஞ்சு போயிடும்...’’ - அக்கறையாகப் பேசுகிறார் ஆனந்தபெருமாள்.

மதுரை, பொன்னகரத்தைச் சேர்ந்த ஆனந்தபெருமாளை ‘சிரட்டைச் சிற்பி’ என்றே அப்பகுதி மக்கள் அழைக்கிறார்கள். தேங்காய் சிரட்டையில் அழகழகான சிற்பங்களைச் செதுக்குகிறார். நாம் குப்பையாக வீசுகிற எல்லாப் பொருட்களையும் கலைப்பொருளாக்கி உயிர்கொடுக்கின்றன அவரின் கரங்கள். ஒரு பெரிய நிறுவனத்தில் மார்க்கெட்டிங் லீடராக இருந்த ஆனந்தபெருமாளை முழுநேரக் கைவினைக் கலைஞனாக மாற்றியது, கிராமத்து வாழ்க்கை மீதான அக்கறை.

அவரது பேச்சின் ஒவ்வொரு அங்குலத்திலும் அந்த அக்கறை தொனிக்கிறது. ‘‘கல்லூரிப் படிப்பை முடிக்கிற வரைக்கும் சமூகத்து மேல எனக்கு பெரிய அக்கறையெல்லாம் இல்லை. படிப்பு முடிச்சதுமே நல்ல சம்பளத்துல வேலையும் கிடைச்சிடுச்சு. கிராமத்து மக்கள்கிட்ட வங்கியோட சேவையைக் கொண்டு சேர்க்கிற வேலை.

ஊர் ஊரா சுத்த வேண்டியிருந்துச்சு. நிறைய மக்களை சந்திச்சுப் பேசுற வாய்ப்பும் கிடைச்சுச்சு. எல்லாரோட பேச்சுலயும் விரக்தி. காடே கதின்னு கிடந்து விதைச்சு, அறுத்துக் கட்டி கணக்குப் பாத்தா, போட்ட முதல்ல முக்கால்வாசி கூட தேறல. வாங்குற பொருளுக்கெல்லாம் விலை ஏறிக்கிட்டே இருக்கு; விக்கிற பொருளுக்கு விலை ஏறினபாடில்லை. 

எங்க பகுதியில எங்கயாவது சாவு நடந்துட்டா, திருவிழா மாதிரி இறுதி ஊர்வலம் நடக்கும். மயானம் நாலைஞ்சு கிலோ மீட்டர் தாண்டி ஊருக்கு ஒதுக்குப்புறத்துல இருக்கும். பெரிசா தேர் கட்டி, உள்ளே உடலை வச்சு நாலு பக்கமும் திடகாத்திரமான நாலு இளவட்டப்பசங்க தூக்கிட்டுப் போவாங்க. இன்னைக்கு தேரு தூக்க பசங்க இல்லே. ஆம்புலன்ஸ்ல தூக்கிப்போட்டு கொண்டு போறாங்க. கிராமத்து மனுஷனோட இறுதி ஊர்வலம் கூட சுரத்தில்லாம போயிடுச்சு.

நகரத்துப் புகைக் காத்துக்கு பயந்து ஒண்டியிருக்கிற முதியவர்களாலதான் கிராமங்கள் இன்னும் வாழ்ந்துக்கிட்டிருக்கு. கிராமத்துல நாலைஞ்சு வருஷத்துக்கு ஒருமுறை வீடுகளை செப்பனிடுவாங்க. ஆனா, பத்து இருபது வருஷமா வீடுகள் நிலைகுலைஞ்சு நிக்கிது. காரணம், அந்த வீடு தேவையில்லை! அடுத்த தலைமுறைக்கு கிராமத்து வாழ்க்கையில ஈடுபாடு இல்லை. இந்தத் தலைமுறையோட எல்லாம் முடிஞ்சு போயிடும் போலிருக்கு...

என் அனுபவம், என் நண்பர்களின் அனுபவங்கள் கூட இப்படித்தான். இதெல்லாம் ஏன்ங்கிற கேள்வியோட ஏக்கமும், வருத்தமுமா இருந்த தருணத்துலதான் நம்மாழ்வார் அய்யாவோட பேச்சைக் கேட்கிற வாய்ப்பு அமைஞ்சுச்சு.  ‘அப்போ கிராமத்துல முழுநிறைவான வாழ்க்கை கிடைச்சுச்சு.

மக்களுக்குத் தேவையானதை கிராமமே முழுமையாகக் கொடுத்துச்சு. விக்கிறதை வித்துட்டு வாங்குறதை வாங்கிட்டு வந்தாங்க. பணத்துக்கு மதிப்பில்லே. மனுஷனுக்குத்தான் கிராமத்து சந்தையில மதிப்பு. மகிழ்ச்சியாவும், ஆரோக்கியமாவும், அன்னியோன்யமாவும் மக்கள் வாழ்ந்தாங்க.

என்னைக்கு விவசாயம் வணிகத்தன்மைக்கு மாறுச்சோ அன்னைக்கே கிராமத்து வாழ்க்கையோட நசிவு தொடங்கிடுச்சு. அந்த வாழ்க்கையை மீட்டுருவாக்கம் செய்யணும்னா, கிராமத்து மேல இளம் தலைமுறைக்கு நம்பிக்கையை ஏற்படுத்தணும். உலகெங்கும் கைவினைப் பொருட்களுக்கு பெரிய விற்பனை வாய்ப்பு இருக்கு. ஆனா, இங்குள்ள கைவினைஞர்களுக்கு உரிய வருமானம் இல்லை. அவங்களுக்கு வணிக வாய்ப்பை உருவாக்கித் தரணும். உலகத்துக்குத் தேவையானதை உருவாக்க அவங்களை தயார்படுத்தணும்...’னு அய்யா நிறைய செயல்திட்டங்களைச் சொன்னார். அந்த மாசமே நான் வேலையை விட்டேன்.

கிராமத்து வாழ்க்கையில எதுவுமே வீண் இல்லைன்னு மக்களுக்குப் புரிய வைக்கிறதுக்காக, கழிவா வீசப்படுற பொருட்களை கலைப்பொருளா மாத்த முடிவு செஞ்சேன். கிராமத்து மக்கள் நிறைய தேங்காய் பயன்படுத்துவாங்க. தேங்காய் சிரட்டைகள் அடுப்பெரிக்க மட்டுமே பயன்படும். அதில் இருந்தே ஆரம்பிச்சேன். நிறைய சோதனை முயற்சிகளுக்குப் பிறகு சிரட்டை சிற்பம் கைவந்துச்சு. பி்ற கழிவுப்பொருட்கள்லயும் பொம்மைகள், சிலைகள், விளையாட்டுப் பொருட்கள், அழகுப் பொருட்கள் செஞ்சேன்.

ஊர் ஊராப் போவேன். எல்லாரையும் ஒரு மரத்தடியில திரட்டி, சிரட்டைச் சிற்பம், பொம்மைகள் செஞ்சு காமிப்பேன். செய்யவும் கத்துக்கொடுப்பேன். அப்படியே, நம்மாழ்வார் அய்யா சொல்லித் தந்த விஷயங்களைச் சொல்லுவேன். கிராமங்கள்ல இருக்கிற வேலைவாய்ப்புகளையும், அதை வளமா செய்யறதுக்கான வழிகளையும் சொல்லுவேன்.

நான் செஞ்சு வச்சிருக்கிற சிற்பங்களைப் பார்த்த நண்பர்கள் இதை வச்சு அரங்கங்களை அலங்கரிச்சா வித்தியாசமா இருக்குமேன்னு சொன்னாங்க. திண்டுக்கல்ல ஒரு நண்பரோட திருமணத்துக்கு மேடை அலங்காரம் செஞ்சேன். எல்லாரும் ஆச்சரியப்பட்டுப் போயிட்டாங்க. இப்போ அதையே பெரிசா முயற்சி பண்ணிக்கிட்டிருக்கேன்.

மண்பாண்டம் செய்யிற தொழிலாளி, கொஞ்சம் நுட்பத்தை மாத்தி அதை சுதைச் சிற்பமா செஞ்சா அதுக்கு உலகம் முழுவதும் வரவேற்பிருக்கு.

கூடை முடையிற கைவினைஞர் அதையே கலைப்பொருளா மாத்தினா என்ன விலை கொடுக்கவும் கலை ரசிகர்கள் காத்திருக்காங்க. இந்த வாய்ப்பை எல்லாருக்கும் கொண்டு போய் சேர்க்கணும்.

அதுக்கான உத்வேகத்தை உருவாக்கத்தான் நான் சிரட்டையைக் கையில் எடுத்தேன். இதன்மூலமா நான் சொல்ல வர்றது ஒண்ணுதான். கிராமத்துக்கு எல்லாரும் திரும்பி வாங்க. நீங்களும் நானும் நினைச்சா, நம்ம பாட்டன், முப்பாட்டன் வாழ்ந்த வாழ்க்கையைத் தேடி எடுத்திடலாம்...’’

- வெ.நீலகண்டன்
படங்கள்: ரா.பரமகுமார்