குறுகுறுன்னு பார்த்தாளே!



விநோத ரஸ மஞ்சரி...

‘பாக்காதே... பாக்காதே... அய்யய்யோ பாக்காதே’ என பாட்டுப் பாடலாம். ஆனால், ஒரு பெண் தன்னை குறுகுறுவென்று பார்த்ததற்காக எவனாவது கோர்ட்டில் கேஸ் போட முடியுமா? சீனாவில் ஒருவர் போட்டிருக்கிறார். சாதாரணப் பெண் மீதல்ல... சீனாவின் மிகப் பிரபல நடிகையும் பாப் பாடகியுமான ஸாவ் வெய் மீது.

 நடிகை ஏன் மெனக்கெட்டு இவரை குறுகுறுவென்று பார்க்க வேண்டும்? அட, நேரில் இல்லைங்க! ஒரு டெலிவிஷன் நிகழ்ச்சியில் வந்த ஸாவ் வெய், கேமராவையே பார்த்துப் பேசியதைத்தான் இப்படிக் குறிப்பட்டு, ‘‘அவர் என்னையே பார்த்தது குற்றம்’’ என்கிறார் அந்த சீன ஸ்வாமி.

நமக்கு மட்டுமல்ல... சீனாவுக்கும் இந்தச் சம்பவம் விநோத ரஸ மஞ்சரிதான். இத்தனை மோசமான கிறுக்குத்தனம் அங்கேயும் இதுவரை நடந்தேறியதில்லை. எல்லாவற்றுக்கும் காரணம், சீன அரசு புதிதாகக் கொண்டு வந்த சட்டத் திருத்தங்கள்தான் என்கிறார்கள் அங்குள்ள சட்ட நிபுணர்கள்.

புதிய சட்டத்தின்படி அங்குள்ள நீதிமன்றங்கள் எந்த வழக்கையும் ‘ஜஸ்ட் லைக் தட்’ தள்ளுபடி செய்துவிட முடியாது. நிராகரிப்பதற்கு தகுந்த காரணத்தைச் சொல்ல வேண்டும். அப்படியே அவர்கள் ஒரு வழக்கைத் தள்ளுபடி செய்தாலும் ‘ஏன் செய்தீர்கள்?’ என எந்தக் குடிமகனும் எந்த நேரத்திலும் சட்டத்தின் சட்டையைப் பிடிக்க முடியும்.

குடிமக்களுக்கு உரிமைகளையும் சக்தியையும் வாரி வழங்குவதாக நினைத்து சீன அரசு கொண்டு வந்த சட்டத் திருத்தம்தான் இப்போது சறுக்கு மரம் விளையாடுகிறது. அந்தச் சட்டத்துக்குப் பயந்து இதுபோன்ற நச்சுப்பிச்சு வழக்குகளை எல்லாம் பதிவு செய்ய வேண்டியிருப்பதாகக் கதறுகிறார்கள் கோர்ட் ஊழியர்கள். இந்த வழக்கில் குற்றங்கள் வேறு ஸ்ட்ராங்காக இருக்கின்றன.

டி.வி வழியே ஸாவ் வெய் தன்னையே பார்த்ததால் தனது ஆன்மிக உறுதித்தன்மை பாதிக்கப்பட்டுவிட்டதாக குற்றம் சாட்டியிருக்கிறார் வழக்குப் போட்ட அந்த புத்திசாலி. ‘சரி, அது தப்பு என்றால் சேனலை மாற்றியிருக்கலாமே’ என்றால், ‘‘ஸாவ் வெய்யின் அகண்ட பெரிய விழிகள் என்னைக் கட்டிப் போட்டுவிட்டன’’ என காரணம் சொல்கிறார்.இதை கேஸாவாய்யா கொடுப்பாங்க..? ஸ்ட்ரெய்ட்டா அவங்ககிட்ட கொடுத்திருக்கலாமே!

- ரெமோ