சோற்று பருக்கை அரசியல்



விருது வென்ற வீரபாண்டியன்

சந்தோஷமாக இருக்கிறார் வீரபாண்டியன். இளம் படைப்பாளிகளுக்கான ‘யுவபுரஸ்கார்’ விருது இந்தத் தடவை வீரபாண்டியன் கைகளில். ‘பருக்கை’ நாவல் பரபரப்பான கவனத்தைப் பெற்றிருக்கிறது. வாழ்க்கை தன் நெருக்கடியின் கரங்களில் அவரை வைத்திருந்தபோது, அவர் வாழ்ந்து சலித்த கஷ்டங்களின் பின்புலமே இந்த நாவல். யுவபுரஸ்காரை விடுங்கள்... அவரது வளர்ச்சியே பலருக்கு இங்கே நம்பிக்கை வரலாறு!

‘‘திருவண்ணாமலை மாவட்டத்தில் மலைகள் சூழ்ந்த செங்கம் பகுதியின் அந்தனூர்தான் நான் பிறந்த ஊர். ஆரம்பப் படிப்பையெல்லாம் அங்கேயே முடித்துவிட்டு சென்னைக்கு வந்தேன். ஊரில் படிக்கும்போது கவிதைதான் என பிரியத்திற்குரியதாக இருந்தது. அதைத் தாண்டி வேறு எதையும் பரீட்சித்துப் பார்த்ததில்லை.

கல்லூரி படிக்க சென்னைக்கு வந்த பிறகுதான் வாழ்க்கை எனக்கு பலவித பாடங்களைப் புகட்டியது. விடுதியில் தங்கிப் படித்த எங்களைப் போன்ற எளிய மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய குறைந்தபட்ச வசதிகள் கூட இல்லை. வாயில் வைக்க முடியாத உணவு, குளிக்கவோ தூங்கவோகூட வசதிகள் இருக்காது. இந்தச் சூழலில் எப்படிப் படிப்பது?

என் குடும்பம் ஊரில் இருந்தது. அப்பா கலப்பை செய்கிற தொழிலாளி. இந்த கலப்பை எவ்வளவு காலத்திற்கு உழைக்க வேண்டும், எப்படியான நிலங்களில் செல்ல முடியும் என்பதை அப்படியே தொழிலில் காட்டுவார். அதில் எந்த சமரசமும் செய்துகொள்வதில்லை. அவரின் நேர்மை என்னை ஆட்கொண்ட விஷயம். 55 வயதிலேயே அதிகமாக உழைத்து உடல்நலம் குறைந்துவிட்டார்.

நான் வெளியே வந்து, படித்து, அவரை மீட்டெடுக்க விரும்பினேன். அதனால் என் தேவைகளைக் கூட நானே தீர்த்துக்கொள்ள வேண்டிய கட்டாயம். அப்பா உழைத்து எங்களைக் காப்பாற்றியதற்கு அவரிடம் எந்த வருத்தமும் கிடையாது.

சதா நேர்த்தியும், உழைப்பையும் நினைத்திருப்பவர்களுக்கு நோயுறுவது கூட கவனத்தில் வராது. அவரை சிரமத்திற்கு ஆளாக்கிவிடாமல், இங்கேயே எனக்கு வசதிகள் இருப்பதாகச் சொல்லி அவரது அசராத உழைப்பிலிருந்து ஓய்வெடுக்க வைத்தேன். அவர் இன்னும் சிறிது நாட்களுக்கு என்னோடு இருக்க விரும்பினேன்.

அப்போதுதான் விடுதி மாணவர்களுக்கு காமதேனுவாக இருந்த கேட்டரிங் தொழிலுக்குப் போக ஆரம்பித்தேன். சம்பளத்துக்கு நடுவே வயிற்றுக்கும் சோறு கிடைக்கிற சலுகை அதில் இருந்தது. உணவைப் பார்த்து பசி எடுத்து அடங்கிய பிறகாவது ருசியாக சாப்பிடுவது சாத்தியம்.

கேட்டரிங் தொழிலின் நுணுக்கங்கள், தகிடுதத்தங்கள், சிலரின் நேர்மை, மாணவர்களின் துயரங்கள் எல்லாவற்றையும் பதிவு செய்ய விரும்பினேன். எப்போதுமே உண்மை கேட்புடையதாக இருக்கும். கேட்டரிங் என்பது பசியாறுதல் மட்டுமில்லை. அதில் பல்வேறு அரசியல் இருக்கிறது. மாணவர்களுக்கு எந்த வசதியும் செய்து தராத இந்த மத்திய, மாநில அரசுகளின் இயலாமை கூட இருக்கிறது.

வெளியூர்களிலிருந்து விடுதிகளில் தங்கி நகரங்களுக்குப் படிக்க வருகிற மாணவர்கள் மிகுந்த அல்லல்படுகிறார்கள். படிப்பதற்கான எந்தச் சூழலும் இல்லை. ஏதோ அரைகுறையாகப் படித்து, பார்டர் மார்க் வாங்கி படிப்பை முடித்துப் போய் ஆறாயிரம் சம்பளத்திற்கு அடிபிடியில் வேலை வாங்கி கஷ்டப்பட வேண்டியிருக்கிறது. இங்கே வாழ்வதே பெரிய கலையாகிவிட்டது.

என் புத்தகத்திற்கு அதன் உண்மைத் தன்மையின் அடிப்படையில் விருது கிடைத்திருப்பது சந்தோஷம். என் அப்பாவின் முகம் மலர்ந்திருக்கிறது. நான் காதலித்து மணந்த வனிதாவை என் விருதைச் சொல்லி விசாரிக்கிறார்கள். அவளாலும் எழுத முடியும் என்ற விருப்பத்தை இந்த விருது அவளுக்குள் விதைத்திருக்கக் கூடும்.எனக்கு இந்த விருது மிகப்பெரிய பொறுப்பைக் கொடுத்துவிட்டது.

அடுத்து ஒரு சிறுகதைத் தொகுதியும், கவிதைத் தொகுதியும் வெளியிடுவதாக இருந்தேன். இப்போது நிறுத்தி வைத்திருக்கிறேன். காலகாலத்திற்கும் உழைக்கிற மாதிரி என் அப்பா கலப்பையை செதுக்குவாரே...

அப்படி இன்னும் செதுக்க வேண்டும். ஆப்ரிக்காவின் மாபெரும் எழுத்தாளர் சினுவா ஆச்சிபி இதுவரை ஐந்தே நாவல்கள்தான் எழுதியிருக்கிறார். ஆனால், ஆகச்சிறந்த இலக்கியவாதி அவர்தான். என் படைப்புகளும் அதுபோன்ற தன்மை அடைய வேண்டும் என விரும்புகிறேன்.

மாணவர்களுக்கு இன்னும் நல்ல கல்வி கிடைப்பதும், குறைந்தபட்ச வசதிகள் கிடைப்பதும் கூட கனவாகவே இருக்கிறது. எதுவும் இந்த அரசுகளை அசைத்துத் தருவதாகத் தெரியவில்லை.

 இலக்கியவாதிகளையும், எழுத்தையும் ஆராதிக்கத் தெரியாத, கொண்டாடத் தெரியாத தன்மையும் இருக்கிறது. என் எழுத்து இந்த மாணவர்களுக்கு ஏதாவது செய்யுமாயின் நான் வெற்றி பெற்றவனாவேன். எழுத்துமேலே காலத்திற்கும் இருந்த நம்பிக்கை நிலைக்க வேண்டும். எனக்குப் பெய்த மழை எல்லோரின் மேலும் பட வேண்டும்!’’கேட்டரிங் தொழிலின் நுணுக்கங்கள், தகிடு தத்தங்கள், சிலரின் நேர்மை, மாணவர்களின் துயரங்கள் எல்லாவற்றையும் பதிவுசெய்ய விரும்பினேன்.

- நா.கதிர்வேலன்
படம்: புதூர் சரவணன்