சூரிய நமஸ்காரம்



எனர்ஜி தொடர் 11

சென்ற வாரத்திற்கு முன்பாக, முட்டியிட்டு செய்யக்கூடிய ஆசனவரிசையில் (kneeling sequence) முதல் நான்கு நிலைகளைப் பார்த்தோம். அதில் மீதியுள்ள அனைத்து நிலைகளையும் இப்போது பார்த்துவிடலாம். பல நேரம் சூரிய நமஸ்காரத்திற்குப் பதிலாக இந்த வரிசையைச் செய்வதுண்டு.

கல்லூரி விரிவுரையாளராகப் பணிபுரிந்த ஒரு பெண்மணி எனது யோகா வகுப்புக்கு வந்தார். அவருக்கு மேல்முதுகு கடுமையாக இறுகி இருந்தது. எனவே அவர் சூரிய நமஸ்காரம் செய்யக் கூடிய நிலையில் அப்போது இல்லை. முட்டியிட்டு செய்யக்கூடிய ஓர் ஆசன வரிசையைத் தந்தேன். அதையும் அவரால் செய்ய முடியவில்லை. குறிப்பாக முட்டியில் உடலின் எடையை வைத்துக் கொண்டு செய்ய முடியாமல் திணறினார்.

அதனால் சூரிய நமஸ்காரத்தையும் பிரித்து, முதலில் இருக்கும் மூன்று நிலைகளை மட்டும் மெதுவாக செய்யச் சொன்னேன். தேவையானபோது ஓய்வு எடுத்துக் கொண்டார். ஓரளவு இதைச் செய்யும்போதே, மீண்டும் முட்டியிட்டு செய்யக்கூடிய ஆசன வரிசையைச் செய்து நன்றாகப் பழகிக்கொள்ளச் சொன்னேன்.

தொடர்ந்த பயிற்சியால் சில மாதங்களுக்குப் பின், சூரிய நமஸ்காரத்தின் முழு வரிசையையும் செய்யக் கூடிய நிலைக்கு வந்தார். முதலில் மிக மெதுவாகத் துவங்கச் செய்து, அதில் வேகத்தைக் கூட்டியும் குறைத்தும், ஒலியைப் புகுத்தியும் அவரது தேவைக்கு ஏற்ப செய்ய முடிந்தது.

இந்த வளர்ச்சியை எட்டியபோது அவருக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. பல நேரம், ‘‘இன்னும் ஒரு சுற்று அல்லது இரு சுற்று கூடுதலாகச் செய்யலாமா?’’ என்பார்.
இதற்கு இரண்டு வழிமுறைகள் உதவின. ஒன்று, அவர் எங்கு இருக்கிறார்; அவரால் என்ன செய்ய முடியும் என்று அறிந்தது.

இரண்டாவது, அந்த நிலையிலிருந்து மெல்ல மெல்ல தொடர்ச்சியாக அடுத்தடுத்த நிலைக்குச் சென்றது. அப்படிப் போகும்போது அவரால் மாற்றங்களை நன்கு உணர முடிந்தது. படிப்படியாக முன்னேறியதால் பிரச்னை இல்லாமல் இருந்தது. இப்போது மீண்டும் பயிற்சிக்குத் திரும்புவோம்!

கடைசியாகப் பார்த்த நிலை: மூச்சை உள்ளிழுத்தபடியே உடலை முன்னுக்குக் கொண்டு சென்று கைகளால் தரையில் ஊன்றிய நிலைக்குக் கொண்டு வர வேண்டும். கைகள் தோள் அளவு இடைவெளியில் இருக்கும். இப்போது முதுகெலும்பு சற்று வளைந்திருக்கும். மார்பு சற்று விரிவடைந்த நிலையில் இருக்கும். முட்டியிலிருந்து இடுப்பு வரையுள்ள பகுதி நேராக இருக்கும். கைகள் மடியாமல் இருக்கும். பார்வை சற்று மேல் நோக்கி இருக்கும். (படம்: 1)

இப்போது அந்த சக்ரவாகாசனா நிலையிலிருந்து, மூச்சை வெளியே விட்டபடி இடுப்பை மேல்புறமாக உயர்த்தி, தரையை நோக்கி தலையைத் தாழ்த்திக் கொண்டு போக வேண்டும். பாதங்கள் தரையில் நன்கு பதிந்திருக்கும்.

கால்கள் நேராக இருக்கும். கைகள் நன்கு நீண்டு அழுந்தி, முன்தலை தரையைத் தொடும். அல்லது தொடுவதற்கு முயற்சி செய்யலாம். இது அதோமுகவாசனாசன நிலை எனப்படும். இது பல வகைகளில் ஓர் முக்கியமான நிலை. இது பற்றி விரிவாக பிறகு பார்க்க உள்ளோம். (படம்: 2)

முன்பு போல் சிறு இடைவெளிக்குப் பின், மூச்சை உள்ளிழுத்தபடியே இடுப்புப் பகுதியைக் கீழிறக்கி மார்புப் பகுதியை பின்புறமாக வளைத்து நேராகப் பார்க்கவும். இந்த நிலையில் கால் விரல்களும் உள்ளங்கைகளும் மட்டும் தரையில் பட்டுக் கொண்டிருக்கும். இதை ஊர்த்துவ முகாசன நிலை என்பார்கள். இந்த நிலையில் ஓரிரு வினாடிகள் இருந்த பின்பு அடுத்த நிலைக்குப் போகலாம். (படம்: 3)

இந்தப் பின்புறமாக வளைத்து நேராகப் பார்க்கும் நிலையில் இருந்தபடி, மூச்சை வெளியே விட்டுக் கொண்டே, மார்புப் பகுதியை முன்புறமாகக் கொண்டு சென்று, தரையில் முழு உடலையும் கிடத்தி கைகளை தலைக்கு முன்புறமாக இணைத்து, கோயிலில் கொடிமரம் முன்பாக சாஷ்டாங்க வணக்கம் செய்யும் நிலையை அடைய வேண்டும். (படம்: 4)

இப்போது வந்த நிலைகளை கடைசியிலிருந்து ஒவ்வொன்றாகத் திரும்பச் செய்தபடி வஜ்ராசன நிலைக்குப் போகப் போகிறோம். தயாரா?

சாஷ்டாங்க வணக்கம் செய்யும் நிலையிலிருந்து சிறிது நேரத்திற்குப் பிறகு, மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே, மார்பை பின்புறமாக வளைத்து, இதற்கு முந்தைய நிலையான ஊர்த்துவ முகாசன நிலையை அடைய வேண்டும். ஓரிரு வினாடிகளுக்குப் பின் அதோமுகவாசனாசன நிலைக்கு, இடுப்பை மேல் பக்கமாக உயர்த்தி, தலையை தரை நோக்கி வளைத்து போகவேண்டும். ஓரிரு வினாடிகளுக்குப் பிறகு இடுப்பைக் கீழ்ப்பக்கமாகக் கொண்டு வந்து முட்டியிட்ட சக்ரவாகாசன நிலைக்கு வர வேண்டும்.

பிறகு மூச்சை வெளியே விட்டுக் கொண்டே, மேல் உடலை தரையை நோக்கிக் கொண்டு சென்று, கால்விரல்களை வெளிப்புறமாகத் திருப்பி, கால்களை மடக்கி, தொடைகளின் மேல் மார்புப் பகுதி அழுந்துமாறு செய்ய வேண்டும். (படம்: 5) இந்த நிலையில் ஓரிரு வினாடிகள் இருந்து விட்டு, முழு மேல் உடலையும் மூச்சையும் உள்ளிழுத்துக் கொண்டே மேல்புறமாகத் தூக்கி நேராக முட்டியிட்டு நிறுத்த வேண்டும். (படம்: 6)

இந்நிலையிலிருந்து மூச்சை வெளியே விட்டபடி வஜ்ராசன நிலைக்கு வரவும். அதாவது மேல் உடலையும் கைகளையும் ஒரே நேரத்தில் கீழிறக்கி துவக்கிய முதல் நிலைக்கு வரவேண்டும். (படம்: 7) இது ஒரு சுற்று ஆகும்.

இப்படி தேவையான சுற்றுகளை நீங்கள் செய்யலாம். ஆறு சுற்றுகள், எட்டு சுற்றுகள், பன்னிரண்டு சுற்றுகள் என்றும் செய்வதுண்டு. முதலில் மெதுவாகத் துவங்கி, ஒவ்வொரு நிலையையும் உணர்ந்து, பின்பு அடுத்த நிலைக்குப் போகலாம். நன்கு பழகியபின் தேவையெனில் வேகத்தைக் கூட்டலாம். போகப் போக தேவையெனில் மூச்சில் மாற்றங்கள் செய்யலாம்.

 சில நிலைகளில் இருந்து சில மூச்சுகள் எடுக்கலாம். சிலநேரம் ஒலியை மூச்சோடு சேர்த்து தரலாம். இவ்வாறு பலவற்றைச் சேர்க்கவும் கூடுதல் பலன்கள் பெறவும் இதில் வழி உண்டு. தேவையெனில் இடையிடையே ஓய்வு எடுத்தும் தொடரலாம். ஒரு சுற்றுக்கும் அடுத்த சுற்றுக்கும் இடையேயும் ஓய்வு இருக்கலாம்.

முட்டியில் வீக்கம் அல்லது வலி இருந்தால் இந்தப் பயிற்சியைத் தவிர்க்க வேண்டும். பாதங்களிலோ, கணுக்காலிலோ பிரச்னைகள் இருந்தால், ஒரு யோகா ஆசிரியரின் ஆலோசனையோடு மாற்றியமைக்கப்பட்ட பயிற்சியைச் செய்யலாம்.

இந்தப் பயிற்சியைச் சில முறைகள் செய்ததும், உடலில் ஒரு தளர்வான நிலையை உணர்ந்து பலர் மிகவும் மகிழ்வார்கள். எடுத்த உடனேயே இதைச் செய்யாமல், முழுமையான தயாரிப்புகளுக்குப் பிறகு இதைச் செய்யும்போது எளிதாகவும், பலன் நிறைந்ததாகவும் இருக்கும். மாணவர்களுக்கு சூரிய நமஸ்காரம் பல வகையில் நன்மை தரக்கூடியது. ஆனால் உடல் இறுக்கமாக இருக்கும்போது, அவர்கள் மிகவும் கஷ்டப்படுவார்கள்.

சில நேரம் சூரிய நமஸ்காரத்திற்கு அவர்களின் பள்ளிச் சீருடை உதவியாக இருக்காது. எனவே முட்டியிட்டு செய்யக்கூடிய இந்த ஆசனவரிசையைத் தந்து அவர்களைத் தயார் செய்வோம். முன்பே அறிந்த சிலர், ‘‘இது சூரிய நமஸ்காரம் மாதிரி இருக்கிறதே’’ என்பார்கள், எதையோ கண்டுபிடித்த மாதிரி! அவர்களிடம், ‘‘இது குட்டி சூரிய நமஸ்காரம், பெரிய சூரிய நமஸ்காரம் பின்னர் வரும்’’ என்போம்.

உடலில் வளைவுத்தன்மை வேண்டும் என்கிறபோதும், தோள் பட்டை வலி, கழுத்து வலி அதிகமாக இருக்கும்போதும் கூட சிலருக்கு தேவையைப் பொறுத்து சூரிய நமஸ்காரத்திற்கு பதிலாக இந்த ஆசன வரிசையைத் தருவதுண்டு. பயன்படுத்தும் விதத்தைப் பொறுத்தும், தரத்தைப் பொறுத்தும் இது பலன்களைத் தரும். மாணவர்களுக்கு சூரிய நமஸ்காரம் பல வகையில் நன்மை தரக்கூடியது.

(உயர்வோம்...)

படங்கள்: புதூர் சரவணன்
மாடல்: கீகோ

ஏயெம்