திருடு, பொய் சொல்லு, தேசத்தைக் காப்பாத்து!



கலகல ‘வந்தா மல’!

‘உன்னாண்ட காதல நா...
சொன்ன ஒ(ட்)ன்னே
இன்னா நென்ச்சே நீ?
இன்னாத்த நெனைக்கிறது
நெஞ்சு எனக்கு பகீர்னுது...’

- சேத்துப்பட்டு ஹவுஸிங் போர்டில் எடுக்கப்பட்ட டூயட் இதுவென வரிகளிலேயே தெரிகிறது. ‘‘இந்த முறை நம்ம களம் இதுதான்!’’ எனப் பேச ஆரம்பிக்கிறார் இயக்குநர் இகோர். ஆர்யா நடித்த ‘கலாபக் காதலன்’ படத்தை இயக்கியவர். அடுத்த இன்னிங்ஸில் புதுமுகங்களோடு ‘வந்தா மல’யாகக் களம் இறங்குகிறார்.‘‘ ‘கலாபக் காதல’னுக்கு அப்புறம் ஏன் இவ்வளவு இடைவெளி?’’

‘‘ஆமா. திரும்பிப் பார்க்குறதுக்குள்ள 9 வருஷம் போயிடுச்சு. நான் எங்கேயும் போகலை. சினிமாலதான் இருந்தேன். இந்த முறை நிறையவே ஃபீல்டு வொர்க் பண்ணி ஸ்கிரிப்ட் பண்ணியிருக்கேன். இதில் புதுமுகங்கள் இருந்தாதான் அழகு!

ஆர்யா என்னோட நண்பன். இந்தப் படத்தோட ஷூட்டிங் நடக்கறப்ப கூட ஒரு நாள் ஸ்பாட்டுக்கு வந்திருந்தான். ஆர்யா மட்டுமில்ல... எந்த ஹீரோகிட்ட வேணும்னாலும் நான் கால்ஷீட் வாங்கியிருக்க முடியும். ஆனா, இந்தக் கதைக்கு அது தேவைப்படலை. இது நாலு இளைஞர்கள் கொண்ட கதை. நாலு பேருக்குமே சமமான முக்கியத்துவம் இருக்கும்.’’ ‘‘அதென்ன ‘வந்தா மல’?’’

‘‘அது ரொம்ப அற்புதமான பழமொழி. தலைமுடியால மலையைக் கட்டி இழுப்போம். வந்தா மலை... போனா வெறும் முடிதானே! என்னா கான்ஃபிடன்ஸ் பாருங்க. பெரிய வாழ்க்கைத் தத்துவம் இது. அதை காமெடி த்ரில்லரா சொல்லியிருக்கேன்.

சென்னையின் லோயர் மிடில் கிளாஸ் ஏரியாதான் கதைக்களம். நான் பொறந்து வளர்ந்த ஏரியாங்கறதால முடிஞ்சவரை அதை உண்மையா பதிவு பண்ணியிருக்கேன். எதிர்காலத்தைப் பத்தி கவலைப்படாம இன்றைய தினத்தில் மட்டும் ரசனையோடு வாழும் யதார்த்தம் அந்த மக்களோடது. 

இந்த ஏரியாவுல சின்னச் சின்ன திருட்டு வேலைகள் பண்ணிட்டு அலையுறாங்க நாலு பசங்க. மோசமான எண்ணங்களோ, யாரையும் பழிவாங்குற ஐடியாவோ இவங்ககிட்ட கிடையாது. திருடுறதும், பொய் சொல்றதும் அவங்க லைஃப்ஸ்டைலா இருக்கு. அவங்க சின்னதா ஒரு திருட்டுல ஈடுபடுறப்ப பெரிய பிரச்னை ஒண்ணுல மாட்டுறாங்க. அதுல இருந்து எப்படி மீண்டு வர்றாங்க என்பதுதான் கதை. காமெடிதான் ஃபுல் டார்கெட்னாலும், சின்னதா மெசேஜும் இருக்கு. அதாவது, திருடு... பொய் சொல்லு... தேசத்தைக் காப்பாத்து!’’‘‘பசங்க யாரு..?’’

‘‘இதுக்காகவே ஆயிரம் பசங்களைப் பார்த்து அதுல இருந்து 30 பேரை வடிகட்டி, அதுக்கு அடுத்த செலக்‌ஷன்லதான் இவங்களைப் பிடிச்சோம். தமிழ், ஹிட்லர்,  மோகன் பிரசாத், உதயான்னு 4 பசங்க. அவங்களோட பாடி லாங்குவேஜ், வட்டார வழக்கு எல்லாம் அசலா வந்திருக்கு. சேத்துப்பட்டு ஏரியாவுல மூணு மாசம் தங்கி இருந்து, அந்த மக்களோட பழக்கவழக்கங்களைப் புரிஞ்சுக்கிட்டு நடிக்க வச்சிருக்கேன்!’’‘‘ஹீரோயின் பத்தி..?’’

‘‘நாலு பசங்கள்ல ஒருத்தனுக்கு மட்டும் ஜோடி உண்டு. ‘கங்காரு’ படத்துல நடிச்ச பிரியங்கா. மாவு மெஷின் வச்சிருக்கற பொண்ணா வருது. காதல்ல கூட சென்னைப் பொண்ணுங்ககிட்ட தைரியம் அதிகமா இருக்கும். ஆண்களை தங்களுக்கு சமமாதான் ஏத்துக்குவாங்க. இதை கொஞ்சம் நகைச்சுவையோட சொல்லியிருக்கேன். பிரியங்கா இயல்பாகவே தமிழ் நல்லா பேசக் கூடியவங்க. சென்னைத் தமிழுக்காக கொஞ்சம் ட்ரெயினிங் தேவைப்பட்டுச்சு. பின்னியெடுத்திருக்காங்க!’’‘‘நடிப்புல இயல்புக்கு ரொம்ப மெனக்கெடுவீங்க போலிருக்கே..?’’

‘‘ஆமா, நான் தெரு நாடகத்திலிருந்து சினிமாவிற்கு வந்தவன். ஞாநி, பிரளயன்னு பலரோட நாடகக் குழுக்கள்ல இருந்தவன். வேலுபிரபாகரன் என்னை சினிமாவுக்கு இழுத்து வந்தார். அதன் பிறகு சினிமா, விளம்பரப்படங்கள்னு நிறைய அனுபவங்களை சேர்த்துக்கிட்டுத்தான் ‘கலாபக் காதலன்’ பண்ணினேன்!’’‘‘படத்துல வேற என்ன ஸ்பெஷல்..?’’

‘‘ஒரு ஃபோர்ஸான கானா பாட்டை தேவா சார்  பாடியிருக்கார். மாரி வெங்கடாசலம் ஒளிப்பதிவு. சென்னையின் இசையை அப்படியே கண்முன் கொண்டு வந்திருக்கார் சாம் டி ராஜ். சைக்கோ இன்ஸ்பெக்டரா ‘மகாநதி’  சங்கரும், தாதாவா ‘வியட்நாம் வீடு’ சுந்தரம் ஐயாவும் பிரமாதமா பண்ணியிருக்காங்க.

மலேசியாவைச் சேர்ந்த ஜெயராதாகிருஷ்ணன், நவகுமரன் சேர்ந்து தயாரிச்சிருக்காங்க.  படத்துல ஒரு விஷயம் குறிப்பா பேசப்படும். சென்னையின் குடிசைப்பகுதிகள்ல ஒரு மரண வீடு எப்படி இருக்கும், என்னென்ன சம்பிரதாயங்கள் நடக்கும்னு விரிவா பதிவு பண்ணியிருக்கேன். நிச்சயம் தமிழ் சினிமா இதுவரை பார்க்காத ஏரியா இது!’’

- மை.பாரதிராஜா