யாகவாராயினும் நா காக்க



ஜாலி, கேலி, நட்பு என கை குலுக்கித் திரியும் நான்கு நண்பர்களின் கதை. அதையே ஆக்‌ஷன், காதல், த்ரில்லர் எனப் பல வழிகளில் நம் மனதில் செலுத்த முயற்சித்திருகிறார்கள். நட்பின் பல வகைகளை நாம் பார்த்துவிட்டாலும், இடையிடையே பல அவதாரங்களை எடுப்பதில் நிச்சயம் இது வேறு வகை. ஆதி மற்றும் மூன்று நண்பர்கள் கடைசி நாள் பரீட்சைக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு வாழ்க்கையை அனுபவிக்கிறார்கள்.

நடுத்தரக் குடும்பத்தில் இருக்கிற ஆதியை மற்ற நண்பர்கள் நன்றாக கவனித்துக்கொள்கிறார்கள். ஒருநாள் ஹோட்டலில் காதலனோடு இருக்கும் ரிச்சாவை செல்போனில் படம் எடுத்துவிட, ஈகோ எகிறி பேச்சுவார்த்தை முற்றி, அமளி துமளி ஆகிறது. மோதலில் சிக்கிய ரிச்சா யார்? அவருக்கு என்னவாயிற்று... நா தவறி நண்பர்கள் பட்ட பாடு என்ன என்பதே விறுவிறுப்பாக நீங்கள் எதிர்பார்க்கும் மீதிக்கதை.

திருக்குறளின் முதல் வரியே தலைப்பு... அதனால் ஏதோ கருத்துக்குவியலாக இருக்குமோ என எதிர்பார்த்தால், அப்படியெல்லாம் இல்லை. முதலில் விரியும் நட்புப் படலத்தில் ஆதி, ஸ்யாம், கார்த்திக், சித்தார்த் என அனைவருக்குள்ளும் அசல் பிரியம். ஆதி ‘ஈரத்திற்கு’ பிறகு அதிகம் ஈர்க்கிறார். காதல், மோதல், நடுத்தர வர்க்கத்துப் பையன் என அத்தனையிலும் செம ஃபிட்.

விரட்டி விரட்டி நிக்கி கல்ராணியை காதலிப்பதும், பதிலுக்கு ஆதியின் ஜாதகத்தையே அடுக்கித் தள்ளி, நிக்கி அவரைப் பதற்றப்படுத்துவதும் சலசலப்பு... கலகலப்பு. பொண்ணுக்கு நடிப்பும் பிரைட்! ஆக்‌ஷன் பாவங்களில் மிரட்டிக் காட்டும்... குடும்பத்தில் தந்தை, அம்மாவோடு பாசத்தில் கொஞ்சும்... காதலியோடு சரசத்தில் மிஞ்சும் ஆதிக்கு ஏன் பெரிய இடம் கிடைக்கவில்லை என்பது ஆச்சரியம்தான்!

நாசர், பசுபதி, நரேன்... அருமையான பாத்திரங்களில் மிளிர்கிறார்கள். பசுபதி வரவர நறுவிசாக தன் பங்குக்கு குறைவில்லாமல் நிற்கிறார். ஆச்சரிய அறிமுகம் பழைய டிஸ்கோ நாயகன் மிதுன் சக்ரவர்த்தி. விறைப்பும், முறைப்பும், அதிர்வுமாக பின்பாதி முழுவதும் அடங்கிய நடிப்பு. கால்களாலேயே வித்தை காட்டிய இந்தி நாயகன், முகத்தில் வித்தை காட்டுவது எதிர்பார்க்காத அதிர்ச்சி. குட்டிக்குட்டி வசனங்கள்தான்... ஆனால், அவர் அடுத்து என்ன பேசுவார் என எதிர்பார்க்க வைக்கிறார்கள்.

வீடு, வீதி, தாதா வீடு என எல்லாவற்றிலும் மின்னுகிறது கலை இயக்கம். இருளில், வெளிச்சத்தில், பதற்றத்தில், ஆக்‌ஷனில் பயணிக்கும் கேமரா மூலம் ஒவ்வொரு காட்சிக்கும் ஓவிய நேர்த்தி கொடுத்திருக்கிறார் சண்முகசுந்தரம். சுருக் வசனங்கள் பற்றி நம்மைப் பேச வைக்கிறார் குமரேசன்.

படத்தின் பிரச்னையே எல்லாவற்றையும் சொல்லிவிடத் துடிக்கிற ஆவலில் இருக்கிறது. யூத்ஃபுல் நட்பில் தொடங்கி, அருமையான காதலில் படம் இருக்கும்போதே ஆக்‌ஷனுக்குப் பறந்துவிடுகிறார்கள். அதில் சீட் நுனிக்கு வரும்போது, படம் சைக்காலஜிகல் த்ரில்லர் வகைக்குப் போய்விடுகிறது. மறுபடியும் நட்பில் போய் முடிகிறது. எதுஒன்றிலும் நிலைக்க விடாமல் இழுக்கிறார்கள்.

கடைசியாக வருவது நண்பர்களுக்கு ஏற்படுகிற நெகிழ்ச்சி க்ளைமாக்ஸ். தம்பி ஆதிக்கு ராஜநடை போட தடம் பதித்த வகையில் டைரக்டர் சத்யபிரபாஸ் கெட்டி. பின்னணியில் கலக்குகிற பிரவீன் ஸ்யாம், பாடல்களில் பெரிதாகக் கவரவில்லை. எல்லாம் போட்டுக் கலந்த ஃப்ரூட் மிக்சர்தான்... அதற்கொரு சுவையுண்டு!

- குங்குமம் விமர்சனக் குழு