மன்னிப்பு



‘‘ஹலோ... ஸ்டார் எக்ஸ்போர்ட் கம்பெனி எம்.டிதானே?’’‘‘யெஸ்... யார் நீங்க?’’‘‘என் பேர் குமார். இப்ப அங்க இன்டர்வியூவுக்கு என் மனைவி சுமா வருவா. அவளுக்கு நீங்க வேலை இல்லைனு சொல்லி அனுப்பணும்!’’‘‘ஏன்?’’‘‘நான்  ஆணாதிக்கம் புடிச்சு திரியறேனாம்...

அதனால அவ சம்பாதிச்சு சொந்தக்காலுல  நிற்கப் போறாளாம். திமிரெடுத்த கழுதை... நாம ஆம்பளைங்க சார், அப்படித்தான்  இருப்போம். இது என்னோட மானப்பிரச்னை. நீங்க அவளுக்கு வேலை போட்டு குடுக்கக்  கூடாது. ஓகேயா?’’

‘‘மிஸ்டர்... எனக்கு உத்தரவு போட நீ யார் மேன்? பொண்ணுன்னா அவ்வளவு இளப்பமா? நான் அவங்களுக்கு வேலை குடுக்கத்தான்  போறேன். வை போனை!’’ என்றார் எம்.டி கோபமாக!மாலை... ‘‘என்னங்க எனக்கு வேலை கிடைச்சிடுச்சு..!’’ - சுமா மகிழ்ச்சியோடு சொன்னாள்.

விபத்தில்  இரண்டு காலும் செயலிழந்த குமார் தவழ்ந்துபோய் சாமி படத்தின் முன்  அமர்ந்தான். ‘‘குடும்ப கஷ்டத்தைப் போக்க ஒரு நாடகத்தை நடத்தி என் மனைவிக்கு வேலை தேடிக் கொடுத்துட்டேன். இறைவா என்னை மன்னிச்சுடு!’’ என்றான் மனமுருக! 
       

வி.சகிதா முருகன்