பொய்



சிவாவும், சத்யனும் டீக்கடையில் அமர்ந்திருந்தபோது எதிரே வந்து நின்றாள் அந்த பிச்சைக்காரி.ரொம்ப சின்ன வயதுப் பெண்... எடுப்பான நிறம்... கந்தலான புடவை, எண்ணெய் காணாத தலை... அழுக்கேறிய உடல்... அவள் சிவாவை வைத்த கண் வாங்காமல் பார்த்தாள்.‘‘மாஸ்டர்...

இன்னொரு டீ!’’ என்று சொல்லிவிட்டு வடை ஒன்றை எடுத்து அவளிடம் நீட்ட, பெற்றுக்கொண்டாள்.‘என்னய்யா உனக்கு கரிசனம்?’ என்பது போலப் பார்த்தார் மாஸ்டர்.‘‘பாவம்ணே... மனநிலை சரியில்லாதவ... கூடவே எய்ட்ஸ் நோயாளி வேற!’’ - சிவா சொன்னதைக் கேட்டு, சுற்றியிருந்தவர்கள் எல்லோருக்கும் அதிர்ச்சி!

‘‘அட, ஆமாண்ணே... அந்தக் காரணத்துனாலதான் மனசொடிஞ்சி இப்படி ஆகிட்டா... பாவம்!’’திரும்பிச் செல்கையில் சத்யன் சிவாவைக் கேட்டான். ‘‘உனக்கு எப்படிடா அந்தப் பிச்சைக்காரியைப் பத்தி இவ்வளவு டீடெய்ல்ஸ் தெரியும்?’’‘‘ஒண்ணும் தெரியாது. சொன்னதெல்லாம் பொய்!’’‘‘பொய்யா... எதுக்குடா?’’

‘‘பாவம், பிச்சைக்காரின்னாலும் அவ பார்க்க இளமையாத்தான் இருக்கா. குரூர புத்திக்காரன் யாரும் அவளை இரையாக்கிடக் கூடாது. இப்ப நான் சொன்ன பொய்  டீக்கடைக்காரர் மூலமா பல பேருக்கு போய்ச் சேரும். அது அவளுக்கு பாதுகாப்புதானே!’’ - சிவாவின் பாயின்ட் சத்யனுக்கும் நியாயமாகவே பட்டது.    

ஜி.சுந்தரராஜன்