திகில்



இன்றைய ட்ரெண்ட் திகில் சினிமா. அதற்கொரு கதையை எழுதிவிட வேண்டும் என்ற உத்தேசத்தில் அவன் அந்தப் பூங்காவின் இருக்கையில் அமர்ந்தான். எழுதத் துவங்கிய பத்தாவது நிமிடம் யாரோ உற்றுப் பார்ப்பது போலிருந்தது.

திரும்பினால், அருகில் ஒருவன் லேசாய் சிரித்தான், ‘‘ஓப்பனிங் பிரமாதம். ஆனா நடுவுல கொஞ்சம் போர். கொஞ்சம் இப்படி மாத்துங்களேன்’’ என அவன் அறிவுரை ஆரம்பிக்க, இவன் வேறு பக்கம் திரும்பிக்கொண்டான். அவன் விடாமல் திருத்தங்கள் சொல்லிக்கொண்டே இருந்தான்.

ஒரு கட்டத்தில் டென்ஷனாகி, ‘‘நான் எதையோ எழுதறேன்... உனக்கென்னய்யா..!’’ என இவன் கத்திய கத்தில் பூங்கா காவலாளி ஓடி வந்தான்.‘‘யார்கிட்ட பேசறீங்க சார்? உங்க பக்கத்துல யாருமில்லையே!’’ ‘‘என்னது?’’ இவனுக்கு வியர்த்து, கை நடுங்கி காகிதம் நழுவ, காவலாளி அதை எடுத்துப் படித்தான். பதைபதைப்பாக ஓடிச் சென்று வேறொரு காகிதத்தைக் கொண்டு வந்தான்.

‘‘சார் கொஞ்ச நாள் முன்னாடி இதே மாதிரி ஒருத்தர் பாதி எழுதிட்டிருக்கும்போது செத்துப் போயிட்டாரு. இந்தக் காகிதம் கீழே கிடந்தது. அதே கதைய நீங்க எப்படி சார்... தொடர்ந்து எழுதினீங்க?’’ காவலாளி ஆச்சரியத்தில் விழிக்க, பக்கத்திலிருந்தவன் அவன் கழுத்தை நெரிக்க ஆரம்பித்திருந்தான்.            

அனுசுயா தேவி