கல்யாணம் செய்தால் கற்பழிப்பு வழக்கில் விடுதலை தரலாமா?



* விருத்தாசலத்தைச் சேர்ந்த மோகன், பெற்றோரை இழந்த 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார்.  அதனால் கருவுற்ற அந்தப் பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது. குற்றம் நிரூபிக்கப்பட்டதால், கடலூர் மகளிர் நீதிமன்றம் மோகனுக்கு 7 ஆண்டு சிறைத்தண்டனையும், 5,000 ரூபாய் அபராதமும் விதித்ததோடு, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 2 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டது.

சிறையில் அடைக்கப்பட்ட மோகன் உயர் நீதிமன்றத்தை நாட, ‘குழந்தையின் எதிர்காலம் கருதி பாதிக்கப்பட்ட பெண்ணையே திருமணம் செய்து கொள்வது பற்றி பேசி முடிவெடுக்கும் வகையில்’ வழக்கை சமரச தீர்வு மையத்துக்கு அனுப்பினார் நீதிபதி தேவதாஸ். சுதந்திரமான மனநிலையில் இந்தப் பேச்சு வார்த்தையில் பங்கேற்க ஏதுவாக மோகனுக்கு ஜாமீனும் வழங்கினார். 

* விழுப்புரம் மாவட்டம் காக்களூரைச் சேர்ந்த மனோகரனும் அதே ஊரைச் சேர்ந்த ஒரு இருளர் சமூகப் பெண்ணும் காதலித்தனர். அந்தப் பெண்ணை பாலியல் உறவுக்கு உட்படுத்தியபிறகு திருமணம் செய்ய மறுத்தார் மனோகரன்.

இது தொடர்பான வழக்கில், மனோகரனுக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனையும், 33,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. பெண்ணை மிரட்டிய மனோகரனின் பெற்றோர் மற்றும் ஊராட்சி மன்றத் தலைவர் சுப்பிரமணி ஆகியோருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.

அனைவரும் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்கள். பாதிக்கப்பட்ட பெண், ‘மனோகரன் என்னைத் திருமணம் செய்து கொண்டார். எங்களுக்குப் பெண் குழந்தை பிறந்துள்ளது. நாங்கள் மகிழ்ச்சியாக வாழ்கிறோம்’ என மனு தாக்கல் செய்தார். இதை ஏற்ற நீதிபதி,

‘மனோகரனை சிறைக்கு அனுப்பி, இந்தப் பெண்ணுக்கு மனவேதனையை ஏற்படுத்த முடியாது’ என்று தீர்ப்பளித்து, இதுவரை சிறையில் இருந்த நாட்களை தண்டனைக் காலமாகக் கருதி, அனைவரையும் விடுதலை செய்தார். கடந்த வாரம் வழங்கப்பட்ட இந்த இரு தீர்ப்புகளும் பொதுவெளியில் பலத்த சர்ச்சையை உருவாக்கியிருக்கின்றன.

‘‘இப்படிக் குற்றவாளிகளை ‘பாதிக்கப்பட்ட பெண்களின் நலன் கருதி’ விடுதலை செய்வதும், பாதிக்கப்பட்ட பெண்ணையே திருமணம் செய்துவைக்க முயற்சிப்பதும் குற்றங்களுக்கு சட்டபூர்வ அங்கீகாரம் வழங்கியதைப் போலாகிவிடும்’’ என்ற குமுறல் பெண்ணியவாதிகள் மத்தியில் ஒலிக்கிறது. ‘‘நெடுங்காலப் போராட்டத்தில் மீட்டெடுத்த பெண்ணுரிமையை இதுபோன்ற தீர்ப்புகள் மீண்டும் பின்னோக்கிச் செலுத்தி விடும்’’ என்று வருத்தம் தோயச் சொல்கிறார் தமிழ்நாடு பெண் வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு தலைவர் சாந்தகுமாரி.

‘‘எந்தக் குற்றவாளி பெண்ணின் உடலை அத்துமீறி ஆக்கிரமித்து, மனதை சிதைத்து துயரத்தில் தள்ளினானோ, பிறந்த குழந்தையின் பிறப்பை கேள்விக்கு உள்ளாக்கினானோ, ‘அவனையே திருமணம் செய்து காலம் முழுவதும் வாழ்க்கை நடத்து’ என்று சொல்வது சமத்துவமான நீதியல்ல.

முதல் வழக்கில் தண்டனை பெற்றவர் வழக்கை சமரச மையத்துக்கு அனுப்பவே கோரவில்லை. பாதிக்கப்பட்ட பெண்ணை திருமணம் செய்து கொள்வதாகவும் கூறவில்லை. பாதிக்கப்பட்ட பெண் ஊடகங்களில் தோன்றி, ‘எந்தச் சூழலிலும் நான் அவரை திருமணம் செய்துகொள்ள மாட்டேன்’ என்று கூறியிருக்கிறார். இந்தச்சூழலில் வழக்கை சமரச மையத்துக்கு அனுப்பியிருக்க அவசியமில்லை.

காக்களூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர் பழங்குடி இனப் பெண். ஆதிக்க சமூகங்களோடு இணங்கி வாழ வேண்டிய நிர்ப்பந்தம் அந்தப் பெண்ணுக்கு. சம்பவம் நடந்தபோது கடும் மிரட்டலுக்கு உள்ளானவர்.

அதையும் மீறி வழக்காடியிருக்கிறார். இப்போதும் அவர் மிரட்டப்பட்டிருக்கலாம். நிர்ப்பந்தத்தின் பேரில் அவர் மனுவை தாக்கல் செய்திருக்கலாம். சமூகவியல் மற்றும் மனிதாபிமான ரீதியிலான பார்வை குற்றம் செய்ய ஊக்குவித்துவிடக் கூடாது என்பதே என் கவலை...’’ என்கிறார் சாந்தகுமாரி.

‘சேவ் இந்தியன் ஃபேமிலி ஃபவுண்டேஷன்’ அமைப்பு இந்தத் தீர்ப்பை பாராட்டியிருக்கிறது. ‘‘ஆக்க பூர்வமான ஒரு விவாதத்துக்கு சமூகத்தை இட்டுச் செல்லும் தீர்ப்பு இது...’’ என்கிறார் இந்த அமைப்பின் தலைவர் சுரேஷ்ராம்.‘‘ரிலேஷன்ஷிப் சீட்டிங் எனப்படும் ஏமாற்றுதலுக்கும், பாலியல் வன்முறைக்கும் உள்ள வேறுபாடு பலரால் முழுமையாகப் புரிந்து கொள்ளப்படவில்லை.

ஆனால் நீதிபதி ஆழ்ந்து ஆராய்ந்து, சமூக நடைமுறைகளை உணர்ந்து இந்தத் தீர்ப்பை எழுதியிருக்கிறார். மனிதாபிமானம், நம்பிக்கை, உணர்வு அடிப்படையில் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. அந்தக் குழந்தைகளின் எதிர்காலத்தை மனதில் வைத்தே இதைப் புரிந்து கொள்ள வேண்டும்’’ என்கிறார் அவர்.

பாலியல் சுரண்டல் மற்றும் பாலியல்வாதத்துக்கு எதிரான அமைப்பைச் சேர்ந்த நிர்மலா கொற்றவை, ‘‘இந்தியாவின் எல்லா அதிகார மையங்களும் பெண்நிலைப் பார்வை இல்லாமல் இயங்குவதையே இந்தத் தீர்ப்புகள் காட்டுகின்றன’’ என்கிறார். ‘‘இரண்டு வழக்குகளிலும் குற்றம் துளியளவும் சந்தேகமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது. இதை நீதிபதியும் ஏற்றுக் கொண்டிருக்கிறார். முதல் வழக்கில் பாதிக்கப்பட்டது மைனர் பெண். இரண்டாவது வழக்கில் பழங்குடிப் பெண். இதுபோன்ற வழக்குகளைக் கடுமையாகக் கையாண்டிருக்க வேண்டும்.

 பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தையின் நலனை முன்னிறுத்தி குற்றவாளிகள் மீது கருணை காட்டுவதாகச் சொல்வது, பெண்களை மேலும் அவமானப்படுத்துகிறது.  வாழ்வாதார வசதிகளை செய்து தந்து, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கான எதிர்காலத்தை உறுதிப்படுத்த வேண்டிய கடமை அரசுக்கும், குற்றவாளியின் குடும்பத்துக்கும் இருக்கிறது. அதை வலியுறுத்தி பெற்றுத் தர வேண்டிய நீதிமன்றம், பெண் மீது ஆணாதிக்கக் கருணையைத் திணிக்கிறது.

விரும்புகிற பெண்ணைக் கற்பழிக்கலாம். பிறகு நீதிமன்றமே திருமணம் செய்து வைத்துவிடும் என்ற எண்ணத்தை இளம் தலைமுறை மத்தியில் இந்த தீர்ப்புகள் உருவாக்கி விடாமல் இருக்கவேண்டும். சில ஆண்டுகளுக்கு முன்பு பாலியல் வன்முறைக்கு உள்ளாகும் பெண்களுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்கும் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது.

அதை இந்திய பெண்கள் அமைப்புகள் அனைத்தும் எதிர்த்தன. நிவாரணம் என்றால் இங்கே பணம்தான். பாலியல் கொடுமையை இழைத்துவிட்டு பணத்தை நிவாரணமாகத் தருவது கற்பழிப்பை விட கொடுமையானது. நீதிமன்றங்கள் வெறும் தீர்ப்பை மட்டும் வழங்கக்கூடாது. நீதியையும் வழங்க வேண்டும்...’’ என்கிறார் நிர்மலா கொற்றவை.

‘மோகன் வழக்கை சமரச மையத்துக்கு அனுப்பியதை ஏற்க முடியாது’ என்று உச்ச நீதிமன்றம் கண்டித்துள்ளது. ‘பாலியல் வன்முறைக்கு ஆளான பெண், சம்பந்தப்பட்ட நபரையே திருமணம் செய்ய உறுதி யளித்தார் என்பதற்காக வழக்கை சமரச மையத்துக்கு அனுப்பியது சரியல்ல.

இது தவறான நடைமுறையை ஏற்படுத்தி விடும்...’ என்று சுட்டிக் காட்டியிருக்கிறது உச்ச நீதிமன்றம். பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும்  குழந்தையின் நலனை முன்னிறுத்தி குற்றவாளிகள் மீது கருணை காட்டுவதாகச்  சொல்வது, பெண்களை மேலும் அவமானப்படுத்துகிறது.

- வெ.நீலகண்டன்