ரவுடி ஜீவா... ப்ரீ கே.ஜி நயன்தாரா!



‘திருநாள்’ First look

‘திருநாள்’ - பெயருக்கேற்ப கும்பகோணத்தின் ஆர்த்தடாக்ஸ் அக்ரஹார வீதி ஒன்றில் ஷூட்டிங்...  நெற்றியில் விபூதிக் கீற்று, கழுத்தில் விநாயகர் டாலர், சிவப்பு ப்ளவுஸுக்கு மேட்ச்சான காட்டன் புடவையும் புன்னகை முகமுமாக செம ஹோம்லி நயன்தாரா.

 அவர் அருகில் டல் மேக்கப், தாடி, மீசை என ரவுடி கெட்டப்பில் ஜீவா. ‘‘அட... நீங்க எங்கே பாஸ் இங்கே?’’ என முகம் மலர்ந்த ஜீவா, டைரக்டர் பிஎஸ்.ராம்நாத்திடம் நம்மை அறிமுகம் செய்தார். ‘அம்பாசமுத்திரம் அம்பானி’ படத்தை அடுத்து ராம்நாத் இயக்கும் படம் இது!

‘‘டைட்டிலே கொண்டாட்டமா இருக்கே?’’‘‘ஆமா. ஆனா தீபாவளி, பொங்கல் மாதிரியான திருநாள் இல்ல இது. உணர்வுபூர்வமான கொண்டாட்டம். கும்பகோணம்னாலே கோயில் நகரம், மகாமகக் குளம்னு ஞாபகம் வந்துடும். அப்படி ஒரு ஊர்ல நடக்கற ஆக்‌ஷன், காமெடி கலந்த கலவை இது.

ஒரு ஃப்ரேம்ல கூட செயற்கைத்தனம் இருக்காது. ரொம்பவே யதார்த்தமான வாழ்க்கையைச் சொல்றோம். ரவுடி கேரக்டர்னாலே ஜீவாவுக்கு ஹிட் கன்ஃபார்ம். அப்படி ஒரு ராசி அவருக்கு. ‘யான்’ ஷூட்டிங் முடிஞ்சதும், நீளமான தலைமுடி, மீசை, தாடி, கொஞ்சம் கறுத்த முகம்னு இதுக்காக ஹோம் வொர்க் பண்ண ஆரம்பிச்சிட்டார்.

அவரும் நயன்தாராவும் ‘ஈ’ படத்தில் சேர்ந்து நடிச்சது. அதுக்கு அப்புறம் இப்பத்தான் இணையுறாங்க. ஸோ, ஒரு எதிர்பார்ப்பு எங்களுக்கே இருந்தது. இப்ப எடுத்தவரைக்கும் பார்த்தா ஜீவா - நயன்தாரா காம்பினேஷன் ‘நெவர் பிஃபோர்’னு சொல்வாங்களே...

அந்த அளவு கலர்ஃபுல்லா அமைஞ்சிருக்கு. எஸ்.எம்.எஸ்ல ஒரு படிச்ச டீசன்ட்டான பொண்ணு, அவளை ரூட் விடுற படு லோக்கல் பையன்னு ஒரு முரணான கெமிஸ்ட்ரி இருக்கும் பாருங்க... அதுல ஜீவா மன்னன். இந்தப் படத்துல அப்படி ஒரு கான்ட்ராஸ்ட் கெமிஸ்ட்ரி இருக்கு. எதிர் எதிர் துருவங்கள்தானே ஈர்க்கும். நயன் - ஜீவா இந்த ரெண்டு துருவங்களும் சேர்ந்து ஆடியன்ஸை ஈர்க்கும் பாருங்க!’’

‘‘நிஜ ரவுடிகளை வச்சி ஃபைட் சீன் எடுத்தீங்களாமே..?’’‘‘அப்படியெல்லாம் எடுக்க முடியுமா? கும்பகோணத்து சந்து பொந்துகள்ல ஜீவா சில ரவுடிகளை துரத்தித் துரத்தி சேஸ் பண்ற மாதிரி ஃபைட் சீக்வென்ஸ் பண்ணிட்டிருந்தோம். சூப்பர் சுப்பராயன் மாஸ்டர்தான் வழிநடத்தினார்.

ரவுடிகளை விரட்டிப் பிடிக்க ஜீவா போயிட்டிருந்தப்போ, ஒரு இடத்துல நிஜமாவே ரெண்டு ரவுடி கோஷ்டிகளுக்கு இடையில சண்டை. நாங்க தயக்கம் காட்டல. லட்டு மாதிரி அதையும் படமாக்கிட்டோம். ஜீவா சார் ‘நல்ல நடிகர்’னு ஏற்கனவே நிரூபிச்சவர். இந்தப் படத்துல அவரோட ஆக்‌ஷன் பேசப்படும்!’’‘‘படத்துல வேற என்ன ஸ்பெஷல்?’’

‘‘கலர்ஃபுல் கமர்ஷியல் படம்ங்கிறதுதான் இதுக்கு ஒன்லைன். ஆக்‌ஷனும், காமெடியும் எப்பவும் சக்சஸ் ஆகும். காமெடின்னா ‘அம்பாசமுத்திரம் அம்பானி’ படத்துக்கு லேடீஸ் ஆடியன்ஸ் சப்போர்ட் அதிகம் இருந்துச்சு.

பெண்களுக்கும் இந்தப் படம் பிடிக்கும். நயன்தாரா மேம் தவிர, ‘கருப்பசாமி குத்தகைதாரர்’ ஹீரோயின் மீனாட்சி கிளாமர் ரோல் பண்றாங்க. ஹீரோவே ரவுடி, அப்போ வில்லன் எவ்வளவு பவர்ஃபுல்லா இருக்கணும்? அதுக்கேத்த ஆளா, ‘பாண்டிய நாடு’ வில்லன் சரத்யோகித் சிவாவைப் பிடிச்சோம்.

ரொம்பவே ஸ்ட்ராங்கான வில்லன் கேரக்டர் அவருக்கு. கருணாஸ் சாரும் இதில் உண்டு. தியேட்டரை விட்டு வெளியே வந்த பிறகும் மனசை விட்டு அவர் போக மாட்டார். அப்படி ஒரு நல்ல கேரக்டர் அவர் பண்றார். வித்தியாசமான ஒரு கேரக்டர்ல கோபிநாத், ‘முண்டாசுப்பட்டி’ ராமதாஸ்னு பெரிய நட்சத்திரப் பட்டாளமே இருக்கு. மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு,  இசை, சூப்பர் சுப்பராயன் ஸ்டன்ட், வி.டி.விஜயன் சார் எடிட்டிங்னு பெரிய டீம் கிடைச்சிருக்கு.

கோதண்டபாணி ஃபிலிம்ஸ் சார்பில் எம்.செந்தில்குமார் தயாரிக்கிறார். இப்போ முதல் கட்ட படப்பிடிப்புதான் முடிஞ்சிருக்கு. கலை இயக்குநர் சீனு கும்பகோணத்திலும், சென்னையிலும் செட் ரெடி பண்ணிக்கிட்டிருக்கார். அந்த வேலை முடிந்ததும், அடுத்த ஷெட்யூல் ஷூட்டிங் கிளம்புறோம்!’’‘‘என்ன சொல்றாங்க நயன்தாரா?’’

‘‘நிஜமாகவே பிரமிக்க வைக்கிறாங்க. ‘ஐயா’ நயன்தாரா மாதிரி அழகான ஹோம்லி பொண்ணு அவங்க.  ப்ரீகே.ஜி டீச்சரா வேலை பார்க்குற ஒரு பொண்ணா இதில் வர்றாங்க. சொல்லப் போனா இது ஹீரோயினுக்கு கொஞ்சம் முக்கியத்துவம் உள்ள படமும் கூட. அவங்களே காமெடியிலயும் பர்ஃபாமென்ஸ்லயும் கலக்கியிருக்காங்க. நேத்து வந்த சின்ன ஹீரோயின்கள் கூட, ஷூட்டிங் வந்தா கேரவன்ல போய் செட்டில் ஆகிடுவாங்க.

 ஒவ்வொரு தடவையும், கேரவனுக்கு ஆள் அனுப்பிதான் அவங்களை அழைச்சிட்டு வர வேண்டியிருக்கும். ஆனா நயன்தாரா, அவங்க போர்ஷன் ஷூட் முடிஞ்சதும், உடனே மானிட்டர் பக்கத்துல ஒரு சேரைப் போட்டுக்கறாங்க. மத்தவங்க நடிக்கறதைக் கூட ஆர்வமா பார்த்து, என்கரேஜ் பண்றாங்க. படப்பிடிப்புல அவங்களோட டெடிகேஷன் அவ்வளவு புரொஃபஷனல். இன்னும் நயன்தாராகிட்ட நல்ல விஷயங்கள் எவ்வளவோ இருக்கு. ஆனா, அதைப் பத்தியெல்லாம் மீடியாக்கள் கண்டுக்கறதில்ல!’’

‘‘ஷூட்டிங்ல நயன்தாராவை சுத்தி பாடிகார்ட்ஸ் நிறைய பேர் இருக்குறாங்கன்னு சொல்றாங்களே..?’’‘‘இப்போதானே சார் சொன்னேன்! நயன் மேம்கிட்ட நல்ல விஷயங்கள் நிறைய இருக்கு... அவங்க தொழில் பக்தி பிரமிக்க வைக்குது. திறமையான ஆர்ட்டிஸ்ட்னு நான் சொல்லித் தெரியவேண்டியதில்ல. பாடிகார்ட்ஸ் இருக்காங்கங்கறது எல்லாம் அவங்களோட பர்சனல்.

அவங்க ஒரு பெரிய ஆர்ட்டிஸ்ட். ஸோ, அவங்களோட பாதுகாப்புக்காக எதையும் அவங்க செய்துக்கலாம். படப்பிடிப்புக்கு வந்தா, அவங்க உண்டு அவங்க வேலை உண்டுன்னு கரெக்ட்டா இருக்காங்க. தயாரிப்பாளருக்கு சிரமம் கொடுக்காத ஒரு நடிகை. கேரக்டரை ரொம்பவே ரசிச்சு பண்றாங்க. இதெல்லாம் அவங்க ப்ளஸ். அந்த பண்புகள் இருக்கறதாலதான் இன்னிக்கும் ஃபீல்டுல நம்பர் ஒன்னா இருக்காங்க!’’

- மை.பாரதிராஜா