மனக்குறை நீக்கும் மகான்கள்
ஸ்ரீ அரவிந்த அன்னை
நீ எப்போதும் இரக்கத்தை உடையவனாய் இரு. உனக்கு துன்பமே நேராது. எப்போதும் திருப்தியுடனும் சந்தோஷத்துடனும் இரு. கடுமையான விமர்சனத்தைத் தவிர்த்து விடு. எல்லாற்றிலும் தீமையைக் காண்பதையும் தவிர்த்து விடு. சாந்தி யோடு கூடிய நம்பிக்கையும் பிரகாசமான எதிர்காலமும் அமையும். - ஸ்ரீஅன்னை
சாவித்திரி மகா காவியத்தை எழுதி முடித்த திருப்தியில் நிறைந்திருந்தார் அரவிந்தர். ஆனால் அன்னைக்கு இதில் வருத்தம் இருந்தது. பகவான் அரவிந்தர் ஏன் இத்தனை அவசரமாக சாவித்திரியை நிறைவு செய்ய வேண்டும்? சாவித்திரி காவியம் நிறைவடைந்து விட்டதென்றால் பகவான் என்ன முடிவு செய்திருக்கிறார்? அன்னையின் மனதில் கேள்விகள் அலை அலையாய் எழுந்தன. அன்னையின் சிந்தனையை அரவிந்தர் படித்தார்.
‘‘ஆம்! அதிமன சக்தியை பூமிக்கு கொண்டுவரும் வேலைதான் அடுத்து... அந்தப் பணியில் நான் என்னையே தியாகம் செய்ய வேண்டி வந்தாலும் வரும்’’ என்று சொன்னார். ‘‘அதிமன சக்தியைக் கொண்டு வரும் பணியை நான் செய்கிறேனே... இதில் ஏதேனும் இடர் வந்தால்கூட நீங்கள் அனைவரையும் வழிநடத்த முடியுமே!’’ - அன்னை பொறுமையாகக் கேட்டார். ‘‘ஒரு தாயைப் போல இவர்களை வழிநடத்தும் பொறுப்பு உன்னுடையதே. பூமியின் பரிணாமத்தைத் துரிதப்படுத்த அதிமன சக்தியை விரைவில் கொண்டுவந்தே தீர வேண்டும். ஆனால், அந்தச் சக்தியை ஏற்கும் தகுதி வாய்ந்தவர்களாக இருப்பது நாம் இருவர் மட்டுமே. பூமியில் வேறு எந்த உடலுமே அதற்குரிய பரிமாணத்தை அடையவில்லை. ஆனால், ஐம்பொறிகளால் ஆன இந்த உடல், அந்த மாபெரும் சக்தியை உள்வாங்கிக் கொண்டவுடன் நிச்சயம் கலைந்துவிடும். இதை எல்லாம் யோசித்தே அந்தப் பணியை நான் செய்வதென முடிவு செய்திருக்கிறேன்.
தற்போதுள்ள மானுட அமைப்பில் அதிமன சக்தியை ஏற்றுக்கொள்வது கடினம். மானுட இயல்பு அடியோடு மாற வேண்டும். உடல் முதல் மனம் வரை எல்லாமே உருமாற வேண்டும். மனிதனின் அமைப்பு மனோமய சரீரம், பிராணமய சரீரம், அன்னமய சரீரம் என்று மூன்று பகுதிகளால் ஆனது. இந்த மூன்றும் தத்தம் குறைகள் நீங்கப் பெற்று தூய்மை அடைந்து முழுமை பெற வேண்டும். இவ்வாறு முழுமை அடைந்த மனித இயல்பு அதிமன உருமாற்றத்திற்குத் தகுதி உடையதாக மாறும். தகுந்த பயிற்சியினாலும் தீவிர யோக சாதனையாலும் உடலின் தன்மையை மாற்ற வேண்டும். உடலில் உள்ள ஒவ்வொரு அணுவும் ஒரு மாறுதலுக்கு உள்ளாகி பௌதீகத் தன்மையை விடுத்து தெய்வீகத் தன்மையை அடையும். அதன் பிறகு தெய்வீகத் தன்மை அடைந்த மனிதன் அதிமனிதனாக மாறுவான். அதிமனித உருவைப் பெற்று பூமியின் அடுத்த பரிமாணத்தில் காலடி எடுத்து வைப்பான்.
அந்த அதிமனித உருவம் இப்போதைய மனித உடல் போல கடினமாக இருக்காது. ஒளி பொருந்தியதாகவும் லேசாகவும் இருக்கும். அதிமனிதர்கள் விரும்பியபொழுது விரும்பிய இடத்தில் இருக்கும் ஆற்றலைப் பெற்றிருப்பார்கள். பசி முதலிய உணர்ச்சிகள் அவர்களுக்கு இருக்காது. அவர்களிடையே ஆண்-பெண் என்கிற இனப்பிரிவு இருக்காது.
இந்த அதிமன உருமாற்றம் மிக நீண்ட பயணம். அதைத் துரிதப்படுத்த என் உடலை அர்ப்பணம் செய்தே ஆக வேண்டும். நான் கொண்டுவரும் அதிமன சக்தியை பூமிக்கு பக்குவமாய் அளித்து அதிமனிதர்கள் உருவாக நீ செயலாற்ற வேண்டும். சாவித்திரியில் ஒரு வாக்கியம் வருமே ‘ஆம்... அவள் ஒருவளே தனித்து நின்று தன்னையும் உலகையும் காப்பாள்’ என்று. அந்தப் பணி உம்முடையதே!’’ என்றார்.
அரவிந்தரின் வார்த்தைகளை ஆணையாகக் கொண்டு அமைதியாக நின்றார் அன்னை. பகவான் அரவிந்தரிடம் அனுமதி பெற்று அவர் அறையை அடைந்தார். அன்றைய விடியல் வரமா... வலியா? புதிராகவே பிறந்தது. அன்னை மகத்தான ஒரு மாற்றத்தை எதிர்கொள்ளத் தயாராகவே இருந்தார். அரவிந்தரின் வார்த்தைகளை கவனத்தில் கொண்டு அவருடனே இருந்தார். கடந்த நவம்பர் மாதத்திலிருந்து சிறுநீர் பிரிவதில் பிரச்னை தரும் யுரேமியா நோய்க்கு ஆளாகி இருந்த அரவிந்தர், யோகத்தில் இருந்ததால் அதற்கான சிகிச்சைகளை எடுத்துக்கொள்ளவில்லை. அதுவும் அன்னையின் நினைவுகளில் வந்துபோனது. நள்ளிரவு. வெளியே மெல்லிய குளிர். அன்னை ஜன்னல் வழியே பார்த்துக் கொண்டிருந்தார். இரவின் குறைவான வெளிச்சத்தில் மரங்கள் எல்லாம் யோகிகள் மௌனமாய் நின்று தியானம் செய்வது போலவே இருந்தன. அரவிந்தரின் அறைக்கு வந்தார். அரவிந்தருடன் பேசிக் கொண்டிருந்தார். மணி ஒன்றைத் தொட்டது.
அரவிந்தர் அன்னையிடம், ‘‘உங்கள் அறைக்குச் செல்லுங்கள்’’ என்றார். அன்னை மௌனமாக வெளியேறினார். அரவிந்தர் தனது யோகத்தின் உச்சம் தொட்டார். அதிமன சக்தி அவருள் இறங்கத் தொடங்கியது. இனி இந்த உடலுக்கு பூமியில் வேலை இல்லை. ஸ்ரீ அன்னை அந்த இடத்தில் இருந்ததால் உள்ளே வர அஞ்சிய மரணதேவனுக்கு, அன்னையை அவரது அறைக்கு அனுப்பியதன் மூலம் அனுமதி அளித்தார் அரவிந்தர். காலதேவன் தன் கடமையை ஆற்றினான். 1950ம் ஆண்டு டிசம்பர் 5. இரவு மணி 1:26. அரவிந்தரின் அறையில் இருந்த கடிகாரம் போதும் என தன் கடமையை நிறுத்திக் கொண்டது. ஆம்! அரவிந்தர் அமரர் ஆனார். திடுக்கிட்ட அன்னை அரவிந்தரின் அறைக்கு விரைந்தார்.
அரவிந்தரின் உடல் பொன் நிறமாய் ஒளிர்ந்து கொண்டிருந்தது. சொன்னபடியே மகத்தான ஒரு மாற்றத்திற்கு தன்னைத் தியாகம் செய்துவிட்டார் அரவிந்தர். அதிமன சக்தி அவர் உடலில் முழுமையாக இறங்கிய பின், டிசம்பர் 9ம் தேதி ஆசிரம முற்றத்தில் சர்வீஸ் மரத்தின் கீழ் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.
“எங்கள் தலைவர் பிரானின் அன்னமய அங்கியாய் இருந்த திருமேனியே... எங்களது முடிவற்ற நன்றியுணர்வை ஏற்றருள். எங்களுக்கு எத்தனையோ செய்து, உழைத்துப் போராடிய, துன்பமேற்ற, நம்பிக்கை வைத்திருந்து எவ்வளவு எவ்வளவோ சகித்துக்கொண்ட பொன்னுடலே! எங்களுக்கு எல்லா சங்கல்பங்களும் செய்து அனைத்து முயற்சிகளும் மேற்கொண்ட, சகல ஆயத்தங்களும் செய்து வைத்த பலப்பல சாதனைகளை நிகழ்த்திய திவ்விய தேகமே! உம்முன் சிரம் தாழ்த்தி வணங்குகிறோம். உனக்கு நாங்கள் பட்டுள்ள நன்றிக் கடனை என்றும் எப்பொழுதும், ஒரு கணமும் மறவாதிருக்க திருவருள் செய்’’ என அரவிந்தரின் உடலுக்கு அன்னை அஞ்சலி செய்தார். இது அரவிந்தரின் சமாதியில் ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழியில் பதிக்கப்பட்டது. அரவிந்தர் மறைந்துவிட்டார், இனி ஆஸ்ரமம் அவ்வளவுதான் எனப் பலரும் நினைத்தார்கள். ஆனால் என்ன ஆனது தெரியுமா? (பூ மலரும்)
ஸ்ரீ அரவிந்த அன்னையை வழிபடும் முறை
‘‘ஸ்ரீ அரவிந்த அன்னையின் சரிதம் தொடராக ‘குங்குமம்’ இதழில் பிரசுரமாகத் தொடங்கியதிலிருந்து ஸ்ரீ அன்னை ஆசிரமத்திற்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகமாகி இருக்கிறது. ‘ ஸ்ரீ அன்னையை எப்படி வழிபட வேண்டும்’ என்கிற விவரங்களைக் கேட்டு வரும் கடிதங்களின் எண்ணிக்கையும் அதிகம். அன்னையை அனைத்து இல்லங்களுக்கும் கொண்டு சென்ற பெருமை ‘குங்குமம்’ இதழைச் சேரும்’’ என நெகிழ்ச்சியுடன் ஆரம்பித்தார் ஸ்ரீ அன்னை அடிகள். சென்னை மேற்கு மாம்பலத்தில் ஸ்ரீஅன்னை ஆஸ்ரமத்தை நடத்திவரும் இவர், ஸ்ரீ அன்னையை வழிபடும் முறை, ஆசிரம விசேஷ தினங்கள் குறித்துப் பகிர்ந்துகொண்டார். ‘‘ ‘மனிதன் இந்த பூமியில் பிறந்ததே சந்தோஷமாக வாழத்தான். இன்று அவன் அனுபவிக்கும் அனைத்து துன்பங்களையும் அவனேதான் உருவாக்கிக் கொள்கிறான்’ என்பதே அன்னையின் கருத்து. நல்ல வாழ்க்கை, நிம்மதி வேண்டுமென்றால் நம் குணத்தில்தான் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும். நம்மிடம் இருக்கும் குறைகள் நமக்குத் தெளிவாகத் தெரியும். அதை நீக்கி அருள வேண்டும் என அன்னையிடம் வேண்டிக்கொண்டால் அன்னையின் உதவி உடனே கிடைக்கும். நம்மிடம் உள்ள தவறுகளைத் திருத்திக்கொண்டு விழிப்புணர்வு பெற்ற மனிதர்களாக வாழ வேண்டும் என்பதைத்தான் அன்னை விரும்புகிறார்.
அதற்காக முயற்சிக்கும் மனிதர்களின் வாழ்க்கையில் அன்னை அற்புதங்களை நிகழ்த்துகிறார். பகவான் அரவிந்தர் - அன்னையின் படத்தை எல்லா சுவாமிகளுடன் சேர்த்து வைக்காமல் தனியாக வைக்க வேண்டும். உங்களுக்குக் கிடைத்த பூக்களை அழகாகத் தட்டில் அடுக்கி அன்னையின் முன்னால் வைத்து, ஊதுபத்தி ஏற்றி வையுங்கள். சூழல் புனிதமாகும். அதன்பின் உங்களுக்கு வேண்டியதைக் கேளுங்கள். அன்னை அருள்வார். உங்களின் கோரிக்கை நிறைவேறியவுடன் அன்னைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக நீங்கள் விரும்பிய தொகையை காணிக்கையாக அருகில் இருக்கும் அன்னை தியான மையங்களில் சமர்ப்பணம் செய்யுங்கள். அதை புஷ்பாஞ்சலி செய்ய பயன்படுத்துவார்கள். அன்னைக்கு நன்றி சொல்வது மிகவும் பிடிக்கும். தனக்கு முதன்முதலாக அரவிந்தர் இருந்த வீட்டிற்கு வழி காட்டிய ஒரு தொழிலாளிக்கு, தன் வாழ்நாள் முழுக்க ஒரு தொகையை நன்றிக் காணிக்கையாகக் கொடுத்துக் கொண்டிருந்தார் அன்னை.
அரவிந்தர் - அன்னையின் புனிதச் சின்னங்களை பூக்களால் அலங்கரித்து வழிபடும் முறைக்கு ‘புஷ்பாஞ்சலி வழிபாடு’ என்று பெயர். இந்த வழிபாடு கற்பக விருட்சம் போல. குழந்தை வரம் உள்பட வேண்டியதை எல்லாம் பெற்றுத் தரும். மாதத்தின் முதல் நாள் சுபிட்ஷா தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில் அன்னை ஆசிரமத்தில் வழிபாடு செய்தால் வேண்டியது விரைவில் நிறைவேறும். பௌர்ணமி தினத்தில் மாலை வேளையில் பலவித வண்ணங்களில் மெழுகுவர்த்திகளை ஏற்றி வைத்து கூட்டுப் பிரார்த்தனை நடக்கும். இதில் திருமணம் தடைப்படும் பெண்களும், வேலை தேடும் இளைஞர்களும் கலந்துகொண்டால் நல்லது நடக்கும். அன்னையின் பிறந்த நாள் (பிப்ரவரி 21), அரவிந்தரின் அவதார தினம் (ஆகஸ்ட் 15) ஆகிய நாட்கள் ஆசிரமத்தில் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படும். இந்த தினங்களில் தரிசனம் செய்வது விசேஷ பலன்களைத் தரும். இந்த ஆண்டு அரவிந்தரின் பிறந்தநாள் அன்று www.mothertv.in என்ற இணைய டி.வி ஆரம்பிக்கிறோம். அன்னையின் வழிகாட்டுதலை இதன் மூலமாக பக்தர்கள் பெறலாம்.
ஸ்ரீ அரவிந்த அன்னையின் வழிபாட்டுக்காக திருவுருவப்படமும் பிரார்த்தனை முறைகள் புத்தகமும் தேவை எனில் ஸ்ரீ அன்னை ஆஸ்ரமம், 41, தம்பையா ரோடு, மேற்கு மாம்பலம், சென்னை-33 என்கிற முகவரிக்கு கடிதம் மூலமாகவோ 9841425456 எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்!’’ என்றார் அவர்.
எஸ்.ஆா்.செந்தில்குமார் ஓவியம்:மணியம் செல்வன்
|