அப்படி இப்படி!சி.ஸ்ரீரங்கம்

இன்று இரண்டு கிரகப் பிரவேச அழைப்புகளுக்குப் போயாகணும். மனைவியும், நானும் முதலில் போனது நண்பர் சேதுவின் வீட்டுக்கு. டிபன் சாப்பிட்டு மொய் வைத்த பிறகு, சேது வீட்டை சுற்றிக் காண்பித்தார்.

‘‘வீடு பிரமாதம். ஆனா, மாடிப்படிக்கும் டைல்ஸ் ஒட்டியிருக்கீங்க. ஜாக்கிரதையா ஏறி இறங்கணுமே!’’ ‘‘வீட்டை ஆசையா சுத்திக் காட்டினா குறை சொல்றீங்களே..!’’ என்ற சேது, அதிருப்தியுடன் விடை கொடுத்தார்.‘‘உங்களுக்கு இது தேவையா, வாயை வச்சிட்டு சும்மா இருக்க மாட்டீங்களா?’’ - மனைவியும் என்னைக் கடிந்து கொண்டாள். அடுத்தது ஹரியின் வீடு. வீட்டை அழகாகக் கட்டியிருந்தார். வீட்டை சுற்றிப் பார்த்துவிட்டு, எந்தக் கருத்தும் சொல்லாமல் டிபன் சாப்பிட்டுவிட்டு மொய் கவரைக் கொடுத்ததும் விடை பெற்றோம். தெருவில் இறங்கி ஆட்டோவுக்காகக் காத்திருக்கும்போது நண்பர் ஹரி அவர் மனைவியிடம் பேசியது எங்கள் காதில் தெளிவாக விழுந்தது.

‘‘அந்த மனுஷன் வீட்டைப் பத்தி ஒரு வார்த்தை சொல்றாரா பாரு. நல்லதோ, கெட்டதோ... ஏதாவது சொல்லலாம்ல. நாமும் வீடு கட்டிட்டோம்னு அந்தாளுக்குப் பொறாமை!’’
‘‘சரி சரி, விடுங்க. அவர் அப்படின்னா, இவர் இப்படி. நீங்க டென்ஷனாகாதீங்க!’’ - சமாதானப்படுத்திய மனைவியுடன் மௌனமாக வீடு திரும்பினேன்.