சாமியார்



ச.மணிவண்ணன்

செல்வம், பெயருக்கு ஏற்றாற்போல் பணக்காரர். ஆனால், சுத்தக் கருமி. எச்சில் கையால் காக்காய் கூட விரட்ட மாட்டார். ‘‘ஏங்க... நம்ம ஊருக்குப் பக்கத்தில் இருக்குற குன்றுக்கு ஒரு சாமியார் வந்திருக்காராம். அவர் சொல்றபடி செஞ்சா நம்ம வேண்டுதல் எல்லாம் பலிக்குதாம். வாங்க பார்த்துட்டு வருவோம்!’’ செல்வத்தின் மனைவி அழைத்தாள். ஆவலோடு கிளம்பினார் செல்வம். சாமியார் செல்வத்தை உற்றுப் பார்த்தார். ‘‘உன் வேண்டுதல் என்ன?’’ என்றார். ‘‘பக்கத்து ஊர்ல ஆற்று மேல பாலம் கட்டுற கான்ட்ராக்ட் மட்டும் எனக்குக் கிடைச்சா போதும்..!’’



‘‘நீங்க நினைச்ச காரியம் நடக்கணும்னா... உங்க ஊர் ஏழைங்க இருநூறு பேருக்கு அன்னதானம் செய்யணும்...’’ - பரிகாரத்தைச் சொல்லி முடித்தார் சாமியார். மறுநாளே அன்னதானம் வழங்கினார், செல்வம். அன்னதான விழாவிற்கு வந்த சாமியாருக்கு பத்து ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவங்கள் நிழலாடின. யாசகம் கேட்டு தான் செல்வம் வீட்டின் முன் நின்றதும், உணவு தராமல் துரத்தி அடித்ததும், பின் வட இந்தியா சென்று சாமியாராகி திரும்பவும் இந்த ஊருக்கே வந்ததும் நினைவுக்கு வந்தன.

‘உன்னையெல்லாம் இப்படித்தான்டா தர்மம் பண்ண வைக்கணும்!’ என நினைத்தவர், அங்கே வயிறார சாப்பிட்டுக் கொண்டிருந்த ஏழைகளை மகிழ்வுடன் பார்த்தபடி குன்றை நோக்கிச் சென்றார்.