என்னைப் பத்தி சொல்றதை விட மரத்தைப் பத்தி சொல்லுங்க!விவேக் நெகிழ்ச்சி!

மாபெரும் விஞ்ஞானி... மாணவர்களின் எழுச்சி நாயகன்... அப்துல் கலாம் பற்றிய நினைவைப் பகிர இங்கே எத்தனையோ விஞ்ஞானிகள், அறிஞர்கள் இருக்க, எல்லா மீடியாக்களும் முதலில் ஓடியது நடிகர் விவேக்கிடம். அத்தனை நெருக்கமும் உருக்கமும் இருக்கிறது கலாம் பற்றிய விவேக்கின் அனுபவங்களில். ஒரு நாள் முழுக்க அனைத்து டி.விக்களிலும் பேசிவிட்டாலும் தீர்ந்து போகாத அவரின் நினைவுகள் இங்கே...‘‘ஒரு படத்துல, டீக்கடையில ஒரு புத்தகத்தை விரிச்சு வச்சு, ‘என்ன இந்த தடவை நடுப்பக்கத்துல கவர்ச்சிப்படமே காணோமே...’ன்னு கிராமத்து பெருசு ஒண்ணு சொல்லும். உடனே நான், ‘ஏன்டா, முதல் பக்கத்துல அப்துல் கலாம் பத்தி செய்தி வந்திருக்கு. படிச்சியா’ன்னு கேப்பேன். இப்படி நிறைய உதாரணங்கள். அப்துல் கலாம் ஐயாவோட நான் அறிமுகம் ஆகறதுக்கு முன்னாடியே என்னோட படங்கள்ல அவரைப் பத்தி பேச ஆரம்பிச்சிட்டேன்.

‘ரன்’ படத்துல கூவம் ஆத்துல விழுந்து எந்திரிக்கிற ஷாட் எடுத்துட்டு இருக்கும்போதுதான் ஒரு போன் கால் வந்தது. ‘அண்ணா யுனிவர்சிட்டியில இருந்து பேசுறோம்.. அப்துல் கலாம் உங்கள சந்திக்க விரும்புறாங்க’ன்னு சொன்னாங்க. எங்க முதல் சந்திப்பில அவர்கிட்ட நிறைய ஐடியாக்களை பகிர்ந்துக்கிட்டேன். ஆட்டோகிராப் வாங்கினேன். சாதாரண சந்திப்பாதான் இருந்துச்சு. அப்புறம் அவர் ஜனாதிபதி ஆனதும், ‘சிவாஜி’ பட ஷூட்டிங் அப்போ, அவரை டெல்லியில் சந்திச்சேன். ‘அஞ்சு நிமிஷம்தான் உங்களுக்கு ஒதுக்கியிருக்கோம்’னு சொல்லி அனுப்பினாங்க. சந்திச்சதும், அஞ்சு நிமிஷம் அப்படியே எக்ஸ்டென்ட் ஆகி, 45 நிமிஷம் போனதே தெரியலை. அதுக்கப்புறம் எங்களோட நட்பு வலுவாச்சு. எப்போ அவர் சென்னை வந்தாலும் அவர் ராஜ்பவன்ல இருப்பார். நான் போய்ப் பார்ப்பேன்.

அப்புறம் அவர் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளுக்கு எனக்கு அழைப்பு விடுப்பார். தவறாமல் கலந்துக்குவேன். 2010ல அவரை ராஜ்பவன்ல சந்திச்சப்போ, ‘விவேக் சார், நான் ஐதராபாத்ல சயின்ட்டிஸ்டா இருந்தப்போ ஒரு புக் எழுதினேன். அதுல 49ம் பக்கம் ஒரு கவிதை எழுதியிருக்கேன்’னு சொல்லி என்னைப் படிக்கச் சொன்னார். ஒரு மரம் மனுஷன்கிட்ட பேசுறது பத்தின கான்செப்ட் அது.

‘நீ தங்குறதுக்கு இடம் கொடுக்கிறேன்... நிழல் கொடுக்கிறேன்... பசியாற பழங்கள் கொடுக்கிறேன்... நீ சுவாசிக்க ஆக்ஸிஜன் கொடுக்கிறேன். இவ்வளவு உனக்கு நான் கொடுத்திருக்கேன். ஆனா என்னை வெட்டுறதைத் தவிர, வேற என்ன பண்ணின நீ’ன்னு கேட்குற மாதிரி ஒரு கவிதை அது. ‘நல்லா இருக்கு’ன்னு சொன்னேன்.
‘இப்படி விட்டுடக் கூடாது. இயற்கைக்கு நாம ஏதாவது பண்ணணும். குளோபல் வார்மிங்னு ஒண்ணு வந்து உலகத்தை அச்சுறுத்தப்போகுது. அப்போ உலகத்துல உள்ள ஆறுகள், ஏரிகள் எல்லாம் வறண்டு போயிடும். நிலத்தடி நீர் குறைஞ்சிடும். உலகத்தோட வெப்பநிலையே சில சென்டிகிரேட்ஸ் அதிகமாகிடும்!’னு சொன்னார். ‘என்ன பண்றது?’னு கேட்டேன்.

‘படங்கள்ல என்னைப் பத்தி நிறைய சொல்றீங்க. ஆனா, என்னைப் பத்தி சொல்றதை விட மரம் நடுவது, குளோபல் வார்மிங் பத்தி நிறைய சொல்லுங்க’ன்னு தன் விருப்பத்தைச் சொன்னார். அதோட, ‘ஏன் இதை நீங்களே கையில எடுத்து செய்யக் கூடாது’ன்னு கேட்டார். அப்போ இருந்துதான் மரம் நட ஆரம்பிச்சேன். ‘கிரீன் கலாம்’ என்ற பெயரில் என் நற்பணி மன்றம் சார்பா மரம் நடுற பணியை திருச்சியில இருந்து ஆரம்பிச்சேன். 

இன்னிக்கு செயற்கைக்கோள்களின் உதவியாலதான் செல்போன்கள் இயங்குது. ஆனா, அந்த சாட்டிலைட்டுகளை அனுப்பின கலாம் செல்போன் வச்சுக்கிட்டது இல்லை. அவர் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவரானாலும், அசைவம் தொடாத எளிமை விரும்பி. அவருடைய அந்தரங்க உதவியாளர் செரிடன், நாகர்கோவிலைச்  சேர்ந்தவர். இன்னொரு உதவியாளர் பிரசாத், பாலக்காட்டுக்காரர். கலாம் ஐயாவோட  அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ். இவங்ககிட்டே ஐயாவோட உணவுப் பழக்கவழக்கத்தைப் பத்தி  ஒரு முறை கேட்டேன். அவருக்கு உப்புமாதான் ரொம்பப் பிடிக்கும்னு சொன்னாங்க. இட்லி, தோசைக்குக் கூட ஒரு நாள் முன்னாடி ஊறப்போடணும். உப்புமாவைவிட எளிய உணவு ஏதாவது இருக்கா?

நான்  அப்பப்போ பத்திரிகையில ஏதாவது எழுதுவேன். அதுக்குப் பெயர் கவிதை. அதையெல்லாம்  கலாம் ஐயா ரெகுலரா படிச்சு பாராட்டுவார். ‘ஏ பெண்ணே! நான் வாங்கிக் கொடுத்ததெல்லாம் நல்லாத்தானே  தின்னே... அப்புறம் ஏன் என்னைப் பிடிக்கலைன்னு சொன்னே..’ன்னு ஒண்ணு எழுதுனேன்.  டெல்லியில் அவரை பேட்டி எடுக்கும்போது இதைக் கூட சொல்லி சிரிச்சார்.

‘குரு  என் ஆளு’ ஷூட்டிங் அப்போ பத்திரிகை ஒண்ணுல எழுதியிருந்தேன்.
‘கங்கை ஆறு வந்தது பயப்படவில்லை...
காவிரி ஆறு வந்தது கலங்கவில்லை..
டிசம்பர் ஆறு வருகிறதே என்ன  செய்யப்போகிறோம்?’னு எழுதியிருந்தேன். ‘அருமையான சிந்தனை’ன்னு அதைப் பாராட்டினார்.

‘கிரீன் கலாம்’ ஆரம்பிச்சு 25 ஆயிரம் கன்றுகள் நட்டேன். அவரே ஒரு கட்டத்துல, ‘என் பேர் எதுக்கு? ‘கிரீன் க்ளோப்’னு வையுங்க’ன்னு சொன்னார். அந்த அமைப்பு சார்புல 10 லட்சமாவது மரம் நடுற விழா கடலூர்ல சுனாமி பாதித்த பகுதியில நடந்தது. கலாம் ஐயா தலைமை தாங்கினார். கடலூர் கலெக்டர் அலுவலகத்துல அவரே ஒரு மரம் நட்டார். ‘தமிழ்நாட்டுல மட்டும் நீங்க ஒரு கோடி மரம் நடணும். ஐம்பதாவது லட்சம் கன்று நடும் விழாவுக்கு நான் கண்டிப்பா வருவேன்’னு மேடையில சொன்னார். இதுவரை 27 லட்சத்துக்கு மேல நட்டாச்சு. இனிமேலும் கலாம் ஐயாவோட ஸ்பிரிச்சுவல் பவர் எங்களை வழிநடத்தும். இருக்கும்போதுதான் தன்னடக்கத்தோட தவிர்த்துட்டார். இனிமேலாச்சும் ‘கிரீன் கலாம்’னே பெயரை மாத்தலாமான்னு யோசிக்கிறோம். சமீபத்துல சென்னையில் நடந்த ஒரு இசை வெளியீட்டு விழாவில் அவரைச் சந்திச்சதுதான் கடைசி சந்திப்பா இருக்கும்னு நினைக்கவே இல்லை. 

மாணவர்களுக்கு மிகப்பெரிய எழுச்சி தீபம்னா, அது கலாம் ஐயா ஆற்றிய உரைகள்தான். வறுமையைக் கண்டு கலங்காமல் கடின உழைப்பால் உச்சம் தொட்டது பற்றிய அவரது சுயசரிதை நூல் மாணவர்களுக்கு பெரிய எனர்ஜி பூஸ்டர். இந்திய இளைஞர்களுக்கு அவர் அடிக்கடி வலுயுறுத்தும் மூன்று  விஷயங்கள் இவைதான்...

1. தோல்விக்கு தோல்வி கொடுங்கள்..
2. விவசாயத்தை மீட்டெடுக்க வேண்டுமெனில், இயற்கையைப் பாதுகாக்க வேண்டும். மரங்கள் நட வேண்டும்.
3. தாய், தந்தையை நேசியுங்கள். எதிர்காலத்தில் இந்தியா லஞ்சம், ஊழல் இல்லாத நாடாக மாற வேண்டுமென்றால், மாணவர்கள், இளைஞர்கள்தான் அதைக் கையில் எடுக்க முடியும்.

இந்தியாவில் விவேகானந்தர் பிறந்த நாளை ‘இளைஞர் தினம்’னு கொண்டாடுறோம். டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளை ‘ஆசிரியர் தின’மா கொண்டாடுறோம். ஆனா, ‘மாணவர் தினம்’னு ஒண்ணு கொண்டாடப்படுகிறதான்னு தெரியலை. ‘என்னுடைய உயிர் பிரிவதென்றாலும் மாணவர்களுக்கு நான் பாடம் நடத்திக்கொண்டிருக்கும்போதுதான் பிரிய வேண்டும்’னு சொன்னவர் ஐயா கலாம். அப்படியேதான் நிகழ்ந்திருக்கிறது. மாணவர்களுக்கான ஒரு ஐகான் அவர்தான். அவர் பிறந்த நாளான அக்டோபர் 15ஐ இந்திய மாணவர் தினமா அறிவிச்சா ஒட்டுமொத்த இந்தியாவும் பெருமைகொள்ளும்... மகிழ்ச்சி கொள்ளும்!’’

"இன்னிக்கு செயற்கைக்கோள்களின் உதவியாலதான் செல்போன்கள் இயங்குது. ஆனா, அந்த சாட்டிலைட்டுகளை அனுப்பின  கலாம் செல்போன் வச்சுக்கிட்டது இல்லை."

- மை.பாரதிராஜா
படங்கள்: ஆர்.சி.எஸ்