கலாமைப் பார்க்க முடியாது... ஆனா கலாமா மாற முடியும்!“அப்துல் கலாம் எங்களுக்குக் கொடுத்த அஜெண்டா இதுதான். ‘வெறும் எழுத்தாவோ, பேச்சாவோ மட்டும் முடங்கிப் போறதுல எந்தப் பயனும் இல்லை. எல்லாம் செயல்திட்டமா மாறணும். தனித்தனியா செயல்படுற இளைஞர் அமைப்புகளைத் திரட்டணும். அவங்க பணிகளை விரிவுபடுத்தணும்.  தத்துவார்த்தமா அவங்க மனசுக்குள்ள வளர்ச்சியையும், மாற்றத்தையும் விதைச்சு உற்சாகப்படுத்தணும். உடனடியான நம்ம இலக்கு இதுதான்...’  கடந்த ஒரு வருஷமா வழக்கத்தை விட வேகமாவும், உற்சாகமாவும் இருந்தார். சுற்றுச்சூழல், விவசாயம் சார்ந்த பிரச்னைகள் மேல அவர் கவனம் குவிஞ்சிருந்துச்சு. நிறைய வேலை இருக்கிற நேரத்துல அப்துல் கலாமோட மறைவு தாங்கமுடியாத இழப்பா இருக்கு!’’- கலக்கமாகப் பேசுகிறார் ‘பிரைம் பாயிண்ட்’ சீனிவாசன். அப்துல் கலாம் வழிகாட்டுதல்படி செயல்பட்ட ‘இந்தியா விஷன்-2020’ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர். கலாமின் பல்வேறு செயல்திட்டங்களில் ஒருங்கிணைந்து இருந்தவர். உடைந்து போன குரலில் கலாம் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து கொள்கிறார் சீனிவாசன்.‘‘பிரதமரின் அறிவியல் ஆலோசகரா பணியாற்றிய பிறகு, அண்ணா பல்கலைக்கழகத்துக்கு பேராசிரியரா வந்தார் கலாம். அப்போ நான் அங்கே கம்யூனிகேஷன் பிரிவுக்கு ஆலோசகர்.  அப்பவே கலாம் பல செயல்திட்டங்களை உருவாக்கி வச்சிருந்தார். மாணவர்களிடம் அந்த திட்டங்கள் பற்றிப் பேசத் தொடங்கிட்டார். அவரோட ‘இந்தியா விஷன் 2020’ செயல்திட்டம் எனக்குள்ள மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்குச்சு. இந்தியாவின் சமகாலப் பிரச்னைகள், எதிர்காலத்தில வரக்கூடிய சிக்கல்களுக்கான தீர்வுகளை முன்வச்சு ஆழமான ஆய்வுகள் செஞ்சு உருவாக்கப்பட்ட செயல்திட்டம் அது.

இந்தியா விஷன்-2020ங்கிறது ‘2020ல இந்தியாவை வல்லரசு ஆக்கணும்’ங்கிற நோக்குல இங்கே புரிஞ்சுகொள்ளப் பட்டிருக்கு. உண்மையில், ‘விஷன் 20-20’ங்கிறது மிகத்தெளிவான பார்வை கொண்ட ஒரு மனிதரின் விஷன் அளவு (பர்ஃபெக்ட் விஷன்). இந்தியாவின் உண்மையான தன்மையை உணர்ந்து அதை வளர்த்தெடுத்துக் கொண்டுபோவதுதான் இந்த செயல்திட்டத்தின் சரியான உள்ளடக்கம்.

இந்த திட்டத்தை எல்லா மட்டத்திலயும் முன்னெடுத்துப் போக வேண்டிய தேவை இருந்துச்சு. சகல துறைகளையும் சேர்ந்தவர்களை உள்ளடக்கி ஒரு அமைப்பை உருவாக்கினா நல்லதுன்னு நினைச்சார் கலாம். அவருடைய வழிகாட்டுதல்ல விஞ்ஞானி ஒய்.எஸ்.ராஜன் மாதிரி நண்பர்கள் சேர்ந்து ‘இந்தியா விஷன்-2020’ ஆன்லைன் குரூப்பை தொடங்கினோம். மாணவர்கள், பத்திரிகையாளர்கள், மருத்துவர்கள், தொழிலதிபர்கள்னு ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்தக் குழுவில இணைஞ்சாங்க. இந்தக் குழுவை அடிக்கடி சந்திப்பார் கலாம். செயல்திட்டங்களை விளக்குவார். ‘இளைஞர்கள் எதைச் செய்தாலும் அதை ஆதரிங்க. உற்சாகப்படுத்துங்க. நல்ல இளைஞர்களை உருவாக்குறதுதான் நம் முதல் நோக்கம். அவர்கள் தேசத்தை வளர்த்தெடுப்பாங்க...’ன்னு சொல்வார்.

‘I CAN D0 IT, WE CAN DO IT, INDIA CAN DO IT ’ - இந்த வாசகங்களைத்தான் அவர் வேதவாக்கா வச்சிருந்தார். போற இடமெல்லாம் இதை மந்திரம் மாதிரி திரும்பத் திரும்பச் சொல்வார். 2008க்குப் பிறகு நேரடியா இந்த அமைப்புல அவர் இணைஞ்சு செயல்பட்டார்.  விஷன்-2020யோட அடுத்த கட்டமா ‘ஆக்‌ஷன்-2020’ன்னு ஒரு செயல்திட்டத்தை உருவாக்கினார் கலாம். தத்துவார்த்த ரீதியில இருந்த விஷயங்களை செயல்பாடுகளா களத்துக்குக் கொண்டுபோறதுதான் இதன் நோக்கம். யாரையும் பிரெயின்வாஷ் பண்றது கலாமுக்குப் பிடிக்காது. உண்மையான தேசப்பற்று உள்ளத்துல இருந்து எழணும்னு விரும்புவார். அவங்கவங்க செய்யிற வேலையை உற்சாகப்படுத்தி ஆலோசனை சொல்வார். நிறைய இளைஞர்கள் தங்களால சரிசெய்ய முடியாத பிரச்னைகளைக் கொண்டு வருவாங்க. எல்லாத்துக்கும் தீர்வு தருவார். அதிகாரிகள் மட்டத்துல பேச வேண்டிய தேவை இருந்தா உரிமையா பேசுவார்.

கல்வியை மேம்படுத்துறதுல அவருடைய கவனம் தீவிரமா இருந்துச்சு. குறிப்பா, உயர்கல்வி யோட தரத்தை உயர்த்துறது, எல்லா மாணவர்களுக்கும் வேலைவாய்ப்பைத் தர்ற உயர்கல்வியை உறுதிப்படுத்துறது மாதிரி விஷயங்கள்ல எங்களை வழிநடத்தினார். மாணவர் சந்திப்பு நிகழ்ச்சிகள்ல, ‘கல்விக்கடன் கிடைக்கிறதில்லை’ன்னு மாணவர்கள் புகார் செஞ்சாங்க. அதுக்காகவே ‘Education loan task force’னு ஒரு அமைப்பை தொடங்கி வச்சார். வங்கியின் தலைமை அதிகாரிகள் வரைக்கும் போய் மாணவர்களின் பிரச்னையைத் தீர்த்து வைக்கிற பணியை இந்த அமைப்பு செய்யுது. நல்ல காரியங்களைச் செய்யிறவங்களைப் பாராட்டி உற்சாகப்படுத்தணும்ங்கிறது கலாமோட முக்கியக் கொள்கை.அதுக்காகவே ‘செலிபிரேட் சக்சஸ்’னு ஒரு செயல்திட்டத்தைத் தொடங்கினோம். நல்ல செயல்களைச் செய்யிறவங்களை அழைச்சுப் பாராட்டுறது அந்த அமைப்போட பணி. நாடாளுமன்றத்துல சிறப்பா செயல்படுற உறுப்பினர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ‘சன்சாத் ரத்னா’ங்கிற பெயர்ல விருது கொடுக்கிறோம். 

நாட்டோட வளர்ச்சியில இதழியலோட பங்களிப்பை கலாம் நல்லாவே உணர்ந்திருந்தார்.  வளர்ச்சி சார்ந்த பத்திரிகையாளர்களை உற்சாகப்படுத்த ‘பாசிட்டிவ் ஜர்னலிசம்’னு ஒரு பிரிவை ஏற்படுத்தினோம். அதன்மூலமா, PreSense-ங்கிற பேர்ல ஒரு இணைய இதழ் கொண்டு வந்தோம். இதுவரைக்கும் 100 இதழ்கள் வந்திருக்கு. உலகம் முழுவதும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பல்துறை வாசகர்கள் இந்த இதழை வாசிக்கிறாங்க.

நாடாளுமன்ற அரசியல், வேளாண்மை, கல்வி சார்ந்து நிறைய விஷயங்கள் சிந்திச்சார் கலாம். அறிவார்ந்த தளத்துல மட்டுமே நிக்காம எளிமையா இளைஞர்களைத் தேடி நடந்து தன் ஆய்வுகளையும், தீர்வுகளையும் நம்பிக்கைகளையும் முன் வச்ச பேராத்மா அவர். அவருடைய மரணம் எங்களைத் தனிமைப்படுத்தியிருக்கு. ஆனாலும் அவர் முன்னெடுத்து வழிகாட்டின எந்த செயலும் நிக்காது. அவர் மானசீகமா எங்களோட இருக்கார். முன்னைவிட வலிமையாவும் வீரியமாவும் இதைக் கொண்டு போவோம். அவர் உருவாக்கியிருக்கிற இளைய சக்திகள் நிச்சயம் அவர் கனவுகளுக்கு உயிர் கொடுக்கும். ஒரு மாணவி நீண்ட நாட்களா, ‘கலாமைப் பார்க்கணும்’னு கேட்டுக்கிட்டு இருந்தா. நேற்று அவ பேசினா... ‘இனிமே கலாமைப் பார்க்க முடியாது... ஆனா என்னால கலாமா மாறமுடியும்’னு அவ சொன்னா. அந்த வார்த்தைகள் நிச்சயம் கலாம் ஆன்மாவுக்குக் கேட்டிருக்கும்.  பெருமையா இருக்கு கலாம்!’’

 
பிரேலைன்:

நல்ல காரியங்களைச் செய்யிறவங்களை  பாராட்டி உற்சாகப்படுத்தணும்ங்கிறது கலாமோட முக்கியக் கொள்கை. ‘பாராட்டு  மாதிரி உற்சாக டானிக் வேற இல்லை’ன்னு சொல்வார்.

- வெ.நீலகண்டன்
படம்: ஆர்.சந்திரசேகர்