குரு பக்தி



மாலா உத்தண்டராமன்

பஸ்ஸில் சுமாரான கூட்டம். ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒருவர் ஏறினார். கல்லூரி மாணவன் மூர்த்திக்கு அவரைப் பார்த்ததுமே அடையாளம் தெரிந்தது. ‘அடடே... நம்ம ஸ்கூல் வாத்தியார் முத்துசாமி சார்! அடிச்சுப் பிடிச்சு ஏறி, கஷ்டப்பட்டு இந்த இடத்தைப் பிடிச்சேன். அடையாளம் கண்டுக்கிட்டா அவருக்கு இடம் கொடுக்க வேண்டி வரும்’ என நினைத்தவன் அவரைக் கண்டுகொள்ளாதது மாதிரி ஜன்னல் பக்கம் பார்வையைத் திருப்பிக்கொண்டான். அடுத்த நிறுத்தத்திலேயே ஒரு பயணி இறங்கியதும் முத்துசாமி அந்த இருக்கையில் அமர்ந்துகொண்டார். ‘அப்பாடா, நம்ம வாத்தியார் உக்கார்ந்துட்டார். இனி கவலை இல்ல..!’ - நிம்மதியுடன் சகஜ நிலைக்குத் திரும்பினான் மூர்த்தி.



மூன்றாவது நிறுத்தத்தில் கதர் சட்டை அணிந்த எழுபது வயது பெரியவர் ஒருவர் பேருந்தினுள் ஏறி, தடுமாறி நின்றார். அவரைப் பார்த்ததும் ஆசிரியர் முத்துசாமி எழுந்துகொண்டார். ‘‘வணக்கம் ஐயா... என்னைத் தெரியுதா? நான் உங்க மாணவன் முத்துசாமி. இப்ப நானும் ஒரு பள்ளி ஆசிரியரா இருக்கேன். உக்காருங்க ஐயா!’’ என அவரை மரியாதையோடு தன் இடத்தில் அமர்த்தினார் அவர். மூர்த்திக்கு ‘பளார்’ என கன்னத்தில் அறைந்தது போலிருந்தது. வெட்கித் தலையைக் கவிழ்த்துக்கொண்டான்!