நிரந்தரம்



வி.சிவாஜி

‘‘சாம்பாருக்கு தேங்காய் அரைக்கணும்... கொஞ்சம் மிக்ஸியில அரைச்சுத் தர்றீயா?’’ - கேட்ட மாமியாரை முறைத்தாள் நிர்மலா. ‘‘கத்துக்கணும் அத்தை. நான் எப்பவும் நிரந்தரமா உங்க கூடவே இருக்க மாட்டேன். நாளைக்கே ஒரு வேலை கிடைச்சா கிச்சன் பக்கமே வர மாட்டேன். நான் மிக்ஸியைப் போடும்போது நல்லா கவனியுங்க. ஒண்ணும் பயமில்ல. நீங்களே செய்யலாம்!’’ - நக்கலாக சொல்லியபடி தேங்காயையும், பச்சை மிளகாயையும் ஜாரில் போட்டு மிக்ஸியில் வைத்தாள். சுவிட்ச் போடும்போது சரியாக பவர் கட்.



‘‘ஷிட்! இன்னைக்கு மெயின்டெனன்ஸ். சாயந்தரம் அஞ்சு மணிக்குத்தான் கரன்ட் வரும்!’’ - இயலாமையோடு மாமியார் பக்கம் திரும்பினாள். ‘‘அதுக்கென்ன நிர்மலா... பின்கட்டில் அம்மி இருக்கே. கையோட அரைச்சுடு!’’ ‘‘எனக்கு அதில் அரைச்சு பழக்கம் இல்லை அத்தை...’’ - மென்று விழுங்கி அசடு வழியப் பார்த்தாள் நிர்மலா.

‘‘அம்மியில அரைக்கிறது பெரிய கம்ப சூத்திரம் இல்லை. வா, சொல்லித் தர்றேன். நான் மட்டும் என்ன நிரந்தரமா? நாளைக்கே போய்ச் சேர்ந்துட்டா இந்த மாதிரி கரன்ட் இல்லாத நேரத்தில் அம்மி உபயோகமா இருக்குமில்ல..?’’ - மாமியார் பச்சை மிளகாயை பேச்சில் வைத்து, அம்மியிலும் வைத்தபோது நிர்மலாவுக்கு உறைத்தது.