அலுங்குறேன், குலுங்குறேன்... ஒரு ஆசை நெஞ்சில!



சற்குணம் - பேட்டி

‘‘நல்ல கதைகளும், புது விஷயங்களும் தொடர்ந்து ஜெயிச்சுக்கிட்டே இருக்கிறதுதான் என்னை மாதிரியானவர்களுக்கு மூலதனம். சினிமாவிற்கும் எனக்குமான காதல், கொஞ்சம் உணர்வுபூர்வமான விளையாட்டு. ‘சண்டிவீரன்’ என் வரிசையில் வந்ததே ஒரு ஆச்சரியம்!’’ உற்சாகமாகப் பேசுகிறார் இயக்குநர் சற்குணம். ‘களவாணி’ தொடங்கி கவனம் ஈர்த்த யதார்த்த இயக்குநர்.



‘‘ஒளிப்பதிவாளர் செழியன் என் சிநேகிதர். அவரிடம் இந்த ‘சண்டிவீரனை’ச் சொல்லி வச்சிருந்தேன். அவர் டைரக்டர் பாலாகிட்ட சொல்லியிருக்கார். என்னை வரவழைச்சு கதை கேட்டார் பாலா. இன்டர்வெல் பிளாக்கில் நிறுத்திட்டு, ஒரு சிகரெட்டை பற்ற வச்சிட்டு ‘யார் பண்ணலாம்ங்கிறீங்க?’ன்னு கேட்டார். நான் ‘அதர்வா’னு சொன்னேன். மீதிக் கதையையும் கேட்டுட்டு ‘இப்ப இந்தக் கதைக்கு யார்  பொருந்துவார்னு நினைக்கிறீங்க?’ன்னு மறுபடியும் கேட்டார். அப்பவும் நான் சொன்னது அவரைத்தான். உடனே அதர்வாவை அலைபேசியில் கூப்பிட்டு, ‘ப்ரேக்கில் ஆபீஸ் வந்திட்டுப் போறீயா?’ன்னு கேட்டார். அடுத்து அதர்வாகிட்டேயிருந்து, ‘நாம சந்திக்கலாம்’னு போன். ‘கதை சொல்லிடுறேன்’னு சொன்னேன். ‘பாலா சாருக்கு பிடிச்சிடுச்சுன்னா அது தேவையே இல்லை’ன்னு சொன்னவரை இருக்க வச்சு முழுக்கதையையும் சொன்னேன். தடதடனு அவர் உருமாறி, விறைப்பும் முறைப்புமா கச்சிதத் தோற்றத்துல வந்து நின்னது வேற கதை!’’



‘‘ ‘சண்டிவீரன்’னு பெயரே வித்தியாசப்படுதே..?’’

‘‘எனக்கு அதர்வான்னா பிடிக்கும். டைரக்டர்கள் அவரை எடுத்துக்கிட்டு எதை வேண்டுமானாலும் செய்து பார்க்கலாம். ‘பரதேசி’யில் அவர் ‘நாயமா....ரே’ன்னு கதறும்போது யதார்த்தத்தில் நம்மைக் கட்டிப்போட்டு இருந்தார். எனக்கு மீசையும் கம்பீரமும் ரோஷமும் வேகமும் உள்ள ‘சண்டிவீரனா’ அவரை மாற்றிக்காட்ட ஆசை. ‘சண்டிவீரன்’ யாருங்கறதுக்கு நிறைய சொல்லலாம். ஊரில் நிகழ்கிற அநியாயங்களைக் கண்டு பொறுக்காமல் எதிரா போராடுபவன்னு சொன்னா, அவனை வழக்கமானவனா நீங்க எடுத்துக்கக்கூடாது. இந்தப் படத்தில் நிறைய காட்சிகள் எந்த சூழ்நிலையிலும் கதை மாறும் என்கிற தன்மையில் இருக்கும். ‘பாபநாச’த்தில் கொலை நடந்த பிறகு அடுத்தடுத்து எல்லாம் பரபரப்பு நிமிடங்கள் ஆகுமில்லையா? அந்த விதத்தில் கதை அமைந்திருக்கிறது. இதை ‘பருத்தி வீரன்’ மாதிரின்னு யாரும் நினைச்சிட வேண்டாம். ‘வீரன்’ என்ற பெயரைத் தவிர இதில் யாதொரு ஒற்றுமையும் இல்லை!’’

‘‘இவ்வளவு பெரிய கதாபாத்திரத்திற்கு அதர்வா எப்படி ஒத்துழைப்பு கொடுத்தார்?’’

‘‘சில இடங்களில் ஓட்டமும் நடையுமாக இருக்கும். அதற்காக கொஞ்சமும் அசந்தது கிடையாது. பாலா போன்ற ஜீனியஸ் இயக்குநர்களிடம் பணியாற்றி, சினிமாவைப் புரிந்து கொண்ட இயல்பு அது. படத்தின் ஆக்‌ஷன், காதல், சென்டிமென்ட் இந்த மூன்றையும் சார்ந்தது. இந்த மூன்றுக்கும் ஒரே அதர்வா முப்பரிமாண வித்தையைக் கொண்டு வந்தார். ‘சண்டக்கோழி’ லால் இதில் முக்கியமான கேரக்டர். இது ஜாதியை அடிப்படையாகக் கொண்ட படம்னு ஒருபக்கம் புரளியைக் கிளப்பி விட்டுக்கிட்டிருக்காங்க. என் உலகம் ஜாதியைச் சார்ந்தது கிடையாது. யாரும் யூகிக்கும் வகையான சாதாரண சினிமாவா இல்லாமல், யதார்த்தமான வகையில் சொல்வதுதான் என் பாணி. என்னுடைய மூன்று படங்களும் அப்படித்தான் அமைந்திருந்தன.  ஒரு கிராமத்து இளைஞனின் தத்ரூப வாழ்க்கையை திரையில் கொண்டு வந்திருக்கிறேன். பெயர்தான் ‘களவாணி’யே தவிர, எனக்குக் கிடைத்தது பெரிய புகழ் மாலை. ‘வாகை சூட வா’ தேசிய விருது வரைக்கும் மரியாதை தந்தது. அந்த வகையில் ‘சண்டிவீரனு’ம் வித்தியாசமானவன்!’’

‘‘உங்க படங்களில் ஹீரோயினுக்கு வேலையிருக்கும்...’’

‘‘ஆமாம்..! ‘கயல்’ படத்தில் நடிக்கும்போதே அந்தப் பெண் ஆனந்தியின் புகைப்படங்கள் கைக்கு வந்தன. அதே கிராமத்து அழகும் சிரிப்புமா... லைட்டா எடை கூடி வந்திருக்கு ஆனந்தி. ரெண்டு பேருக்கும் இடையில் இருந்த நெருக்கமும் ஒத்துழைப்பும் ரொம்ப அருமையா இருந்தது. சென்னைப் பையனா இருந்துட்டு ஒரு கிராமத்து ரோலுக்கு, இவ்வளவு ‘நச்’னு அதர்வா பொருந்துவார்னு நான் நினைக்கவே இல்லை. காதலும், காதல் நிமித்தமும்னு சொல்வாங்களே... அதற்கு அச்சு அசல் உதாரணம்தான் இவங்க ரெண்டு பேரும். அவங்களுக்குள்ள தொட்டுக்கிட்டால், உங்களுக்குள் பத்திக்கிற மாதிரி காதலும் இருக்கு. அன்பு, காதல், ப்ரியம், கோபம்னு ‘சண்டிவீரன்’ மனதை அள்ளிட்டுப் போவான்!’’

‘‘பாலா படம்னு கொஞ்சம் பதற்றம் வந்ததா?’’

‘‘பாலாவின் தலையீடு துளிக் கூட இல்லை. அவர் நம்பிக்கைக்கு எந்த பாதகமும் வந்து விடக்கூடாதுன்னு எனக்குத்தான் சின்னதா பதற்றம். பாலா சார் ஒரு சின்ன ஷாட்டுக்குக் கூட பெரிய விவரணை கொடுப்பார். அவருக்கு ஒரு நல்ல படம், ஜனங்களை உள்ளே இழுத்துக்கிற படம் எப்படியிருக்கும்னு தெரியும். படம் பார்த்துட்டு, ‘ரொம்ப நல்லாயிருக்கு. இது கன்ஃபார்ம் ஹிட்!’னு இரண்டு வரிதான் சொன்னார். அவர்கிட்ட அவ்வளவு சுலபமா வார்த்தைகளை அள்ளிட முடியாதே..!’’

‘‘நீங்க தஞ்சாவூர் மண்ணை விட்டு வரமாட்டீங்களே...’’

‘‘இதுவரை அப்படியிருந்தது உண்மை. பிறந்து வளர்ந்த பூமியின் துடிப்பு எப்போதும் இருக்கும்தானே. இது மொத்த தமிழ் மக்களுக்குக்கான படம். மன்னார்குடியிலிருந்து கதை பயணித்து, ராமநாதபுரம் வரை கூட ஷூட்டிங் நடந்தது. பொதுவா ஒரு படத்துக்கு மெயின் கேரக்டர்கள் பொருந்திவிட்டாலே அழகுதான். இப்படி அதர்வாவும், ஆனந்தியும் பொருந்துவது இன்னும் அழகு. அருணகிரியின் மியூசிக்கும், டியூனும் எளிமையாகவும் அரவணைப்பாகவும் இருக்கு. ‘அலுங்குறேன், குலுங்குறேன்... ஒரு ஆசை நெஞ்சில’ என்ற பாடல்கண்டபடி ஹிட். முக்கியமா அவர் இசையில் இருக்கிறது உயிர். எனக்கு ஆசையெல்லாம் படத்தைப் பார்த்துட்டு பாலா சார் சொன்னதை தமிழ் மக்கள் வழிமொழியணும். அதுதான் அந்த மகா கலைஞன் பாலாவிற்கு என்னோட சமர்ப்பணம்!’’

- நா.கதிர்வேலன்