ஐந்தும் மூன்றும் ஒன்பது



அந்த ஞாயிற்றுக்கிழமையும் வந்தது. கல்வெட்டுப் பாடலின் பொருள்படி ‘சித்திரைச் சந்திர வெள்ளி எழும் பின் பிரம்மத்தில்’ என்றால், இரண்டு மணியிலிருந்து நான்கு மணி வரையிலான காலகட்டத்தில். சந்திரன் வானில் சஞ்சரித்த நிலையில், அவனது கிரணங்கள் தங்கு தடையின்றி அந்த மலைப் பாகத்தின் மேல் படும் நிலையில் நாம் அங்கிருந்து பார்க்க வேண்டும். அப்போது ‘சக்கரைப் பானைக்கிழங்கு’ என்று பாடலில் குறிப்பிடப்பட்ட மஞ்சள் கிழங்கின்  மஞ்சள் நிறத்தில் அந்த இடம்  பிரகாசிக்கலாம். அப்படிப் பிரகாசிக்கும் இடம் முழுக்க தங்கம் இருக்க வேண்டும்!



இந்தச் செய்தியை நான் ஜோசப் சந்திரனிடம்  சொல்லியிருந்தேன். அவரும் அந்த நேரமாக நிச்சயம் கவனிப்போம் என்று கூறியிருந்தார். கூடவே அவர் ஒரு விஷயம் சொன்னார்... ‘சந்திர ஒளி அவ்வேளையில் ஒரு குறிப்பிட்ட கோணத்தில் விழுவதால் அவ்வாறு மஞ்சள் நிறம் தெரியக்கூடும். என்றால், சந்திரன் ஒளிரும் அந்தக் கோணத்தில் சூரியன் எந்த நாளிலும் விண்மிசை சஞ்சாரம் செய்யாதபடி ஒரு அமைப்பு இருக்கலாம். சூரியனுக்கான சஞ்சார பாகம் என்பது கிழக்கு மேற்கில் இடவலமாய் உள்ள எல்லா இடமும் ஆகும். இதையே உத்தராயனம், தட்சிணாயனம் என்கிறோம். நிலவு சூரிய ஒளியைப் பெற்று பிரகாசிப்பதால், நிச்சயம் அந்த தங்கம் உள்ள தரைப்பகுதி கிழக்குத் திசை - மேற்குத் திசையாக இருக்க வாய்ப்பு இல்லை.  வடக்கு - தெற்காகத்தான் இருக்க வேண்டும்.

அடுத்து, குறிப்பிட்ட ஒரு டிகிரியில் நிலவு நிற்கும்போதுதான், அதன் கதிர்வீச்சு தங்கம் இருப்பதாக கருதப்படும் தரைமேல் விழுந்து மஞ்சள் நிறமாக அந்த பாகமும் ஒளிரும். பூமியும் சந்திரனும் சதா சர்வ காலமும் சுழன்றபடியே இருப்பதால் இந்த ஒளிரும் நிகழ்வு ஒரு சில நிமிடங்கள் மட்டுமே நடக்கக்கூடும்’ என்று தான் சிந்தித்த விஷயங்களை எல்லாம் கூறினார். அவர் தீவிரமாக இந்த விஷயத்தில் இறங்கி விட்டதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி.

ஞாயிற்றுக்கிழமை மாலையே நாங்கள் அங்கு சென்று டென்ட் அமைத்துத் தங்கி விட்டோம். அங்கே சரியானபடி சிக்னல் கிடைக்காததால் எங்களின் டிரான்சிஸ்டர் ரேடியோ செயல்படவில்லை. அன்று இரவில் ஒரு புகைப்படம் எடுக்க ஃப்ளாஷ் பல்புகள் வேண்டும். எடுத்த புகைப்படத்தைக் கழுவி பிரின்ட் போட்டுப் பார்க்க கால அவகாசம் வேண்டும்.  இன்று அப்படியில்லை. நொடிகளில் இந்த விஷயங்களைக் கடந்து விடுகிறோம். அந்த நாளில் புகைப்படக் கேமராவை தயார் நிலையில் வைத்துக்கொண்டு, அந்த கல்வெட்டுப் பாடல் உள்ள பகுதிக்கும் சென்று பார்த்தவர்களாக பேசியபடியே பொழுதைக் கழிக்கத் தயாரானோம்.

மலைகளுக்கு பறக்கும் தன்மை இருந்ததாக புராணங்களில் படித்தது பற்றி பேசினோம். ‘இது எத்தனை பெரிய முட்டாள்தனமான கற்பனை. பறக்க வேண்டும் என்றாலே சிறகுகள் வேண்டும். சிறகுகள் என்று வந்துவிட்டாலே அது அசைந்தாலன்றி பறக்க முடியாது. ஆக, சிறகுகள் அசைந்திட உயிர் இயக்க சக்தி வேண்டும். கல்லும் மண்ணுமான மலையிடம் அந்த உயிர் இயக்க சக்தி எங்கே இருக்கிறது? எதை வைத்துக்கொண்டு மலைகள் பறக்கும் என்று புராணத்தில் சொன்னார்களோ தெரியவில்லை’ என்று நான் கூறியதை ஜோசப் சந்திரன் மறுக்கத் தொடங்கினார்.

‘மலைகள் பறக்கும் என்பதை நம்ப பூகோள ரீதியாக இடமிருக்கிறது. பல ஊர்களில் சிறு அளவில் அனேக மலைகள் உள்ளன. அந்த மலைகளைச் சுற்றி நூறு மைல் சுற்றளவுக்கு சமதளமான நிலப்பகுதிதான் உள்ளது. சமதள நிலப்பரப்பின் நடுவில் ஒரு மலைக்குன்று அங்கு எப்படி வந்தது என்பது கேள்விக்குரிய விஷயம்.

அவ்வளவு ஏன்? தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் கோபுரம் கல்லால் ஆனது. சுற்று வட்டாரத்தில் அந்தக் கல்லின் தன்மை கொண்ட மலைப்பகுதி பல மைல் தூரத்துக்கு இல்லை. அப்படியிருக்க அந்தக் கோயிலும் கோபுரமும் எப்படி உருவானது என்பதிலேயே நாம் வியக்க நிறைய இடமுண்டு. குறிப்பாக அங்கு மட்டும் ஒரு சிறு குன்று இருந்து, அது தகர்க்கப்பட்டு பிரகதீஸ்வரர் கோயிலாக மாறியிருக்கலாம். இப்படி நாம்  பல கோணங்களில் சிந்தித்தால் இந்த கஞ்சமலை இங்கு இருப்பதற்கும், இதில் இரும்போடு தங்கமும் இருப்பதாக நாம் கருதுவதற்கும் ஒரு சரியான விடை கிடைத்து விடும்’ என்றார் ஜோசப் சந்திரன்!’’   - கணபதி சுப்ரமணியனின் ஆய்வுக் கட்டுரையிலிருந்து...

வாட்ஸ் அப்பில் புகைப்படங்களைப் பார்த்த வர்ஷனுக்கு முதலில் பகீரென்றது. பின்பு அதுவே பரிதாபமாக மாறவும் தொடங்கியது. அவன் முகமும் சுணங்கியது. அனந்தகிருஷ்ணன் டிரைவ் செய்தபடி இருந்தார். வர்ஷனை ப்ரியா ஊடுருவினாள்.

‘‘என்னடா... இவங்க மரணம் உனக்கு வேதனையா இருக்கா?’’
‘‘ஆமாம் ப்ரியா... பாவம் இவங்க! பணத்துக்காகத்தான் இவங்களும் இந்த அசைன்மென்ட்ல இருக்கணும். என்கிட்ட நல்லா சிரிச்சு தெனாவெட்டா பேசிக்கிட்டிருந்தவங்க இப்ப பிணமா கிடக்கறாங்க.  இந்த வாழ்க்கைதான் எவ்வளவு விசித்திரமானது!’’ - என்று கொஞ்சம் தத்துவமாகவும் பேசினான்.
வள்ளுவர் பதில் எதுவும் கூறாமல் மௌனமாக பக்கவாட்டில் சாலையை வெறித்தபடியே வந்தார். ப்ரியா அதையும் கவனித்தவளாக அவர் பக்கம் திரும்பினாள்.

‘‘அய்யா...’’
‘‘சொல்லும்மா...’’
‘‘தாத்தா உயிருக்கு எந்த ஆபத்தும் இருக்காதே?’’
‘‘நிச்சயம் இருக்காதும்மா...’’
‘‘இந்த விபத்தைப் பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க?’’
‘‘இதை நான் கொஞ்சமும் எதிர்பார்க்கலைம்மா. உன் தாத்தாவை அவங்க ஏன் கடத்தணும்? இது என் முதல் கேள்வி. அது தெரியாம இந்த விபத்து பற்றி தெளிவா என்னால எதுவும் சொல்ல முடியாது...’’
‘‘அய்யா, இதுக்கு நான் பதில் சொல்றேன்’’ என ஆரம்பித்தான் வர்ஷன்.
‘‘அவங்க உங்களதான் தொடக்கத்துல இருந்தே ஃபாலோ பண்ணிக்கிட்டிருக்காங்க.

காலப்பலகணி குறிப்பு கொண்ட பெட்டியைக் கேட்டு வந்த அவங்களால உங்களை எதுவும் செய்ய முடியல. உங்க வீட்டுக்கே வந்து மிரட்டுனவங்களும் விபத்துலதான் இறந்ததா சொன்னீங்க. அதனாலே ஒரு பயத்தோட கவனிச்சவங்க எதிர்ல, நீங்க ப்ரியாவோட தாத்தாவைப் போய்ப் பார்த்தீங்க. அவங்களுக்குப் புரிஞ்சி போச்சு. அவங்களும் உங்கள விட்டுட்டு இந்தப் பக்கம் திரும்பினாங்க. அந்தப் பெட்டியை ப்ரியா தாத்தாகிட்ட இருந்து எடுத்துக் கொடுக்க முதல்ல என்னைப் பிடிச்சாங்க. நான் நடுவுல முழிச்சிக்கவும் வீட்டு வேலைக்காரி முத்தழகுவை பிடிச்சாங்க. அவளோ ஷாக் அடிச்சி போய் சேர்ந்துட்டா.

இந்த நிலைல திரும்ப என் தங்கையை பிடிச்சு, என்னை பிளாக்மெயில் பண்ணி, நான் அந்தப் பெட்டியை எடுத்துத் தந்தே ஆகணும்னு நிர்ப்பந்தம் பண்ணாங்க. அதுக்குத் தோதா, துளியும் எதிர்பார்க்காத நிலைல ப்ரியா தாத்தா அந்தப் பெட்டியை தானா தூக்கி எங்க கைல கொடுத்து ஆத்துலயோ குளத்துலயோ போட்டுடச் சொன்னாரு. நானும்  ‘தப்பிச்சேன்டா சாமி’ன்னு அந்தப் பெட்டியைக் கொண்டு போய் அவங்க கைல கொடுத்தேன். அதாவது, இப்ப இந்த வாட்ஸ்அப் போட்டோல செத்துக் கிடக்கறாங்களே... இதே மூணுபேர் கிட்டதான்! என் தங்கையை அப்புறம்தான் விட்டாங்க.

அதேசமயம் பெட்டியை ஒப்படைக்கறதுக்கு முந்தி அதைத் திறந்து பார்த்தப்போ, அதுல கூடுதலா சோழர் கால நாணயம் ஒண்ணும், அந்தக் கால மண் கலயம் ஒண்ணும் இருந்தது! அப்பவே எனக்கும் ப்ரியாவுக்கும் லேசா சந்தேகமும் வந்துடுச்சி... அதாவது ப்ரியாவோட தாத்தா அந்தப் பெட்டில இருந்து நீங்க கொடுத்த விஷயங்களை எல்லாம் தான் எடுத்துக்கிட்டு, எங்ககிட்ட அவர் கொடுத்தது அதேபோன்ற டூப்ளிகேட்டை!  அவர் எந்த நிலைலயும் அந்த ஏடுகளையோ, சோழிகளையோ பெண்டுலம்  மற்றும் திசைமானியையோ இழக்கத் தயாரா இல்லை.

அந்தப் பெட்டியாலதான் மரணம்னு ஆன்ட்டி பயந்ததால, அவங்கள சமாதானம் செய்ய தாத்தா பெட்டியை எங்ககிட்ட கொடுத்து தூக்கிப் போடச் சொல்லிட்டார். மறுபக்கம் கொடைக்கானல் போய்  ஓய்வு எடுக்க விரும்பறேன்னு பலகணியைத் தேடத் தயாராயிட்டார். நானும் ப்ரியாவும் அந்த டூப்ளிகேட் பெட்டியைக் கொடுத்துத்தான் என் தங்கையை மீட்டோம். முதல்ல பெட்டியை ஒரிஜினல்னு நம்பினவங்க, பின்னால எப்படியோ டூப்ளிகேட்னு தெரிஞ்சிக்கிட்டிருக்காங்க. இது ப்ரியாவோட தாத்தா வேலைன்னு தீர்மானிச்சு, அவரை இனி விடக் கூடாதுன்னு  ஜி.ஹெச்சுக்கு முத்தழகு பாடியைப் பார்க்கப் போனப்போ அவரைக் கடத்திட்டாங்க.

இப்ப நான் சொன்னதுதான் உண்மை. அப்படிக் கடத்தி அவரைக் கொண்டே காலப்பலகணியைக் கண்டுபிடிக்கற எண்ணத்தோட அவங்க பாண்டிச்சேரி ரோட்டுல போனப்பதான் ஆக்சிடென்ட்டும் ஆகியிருக்கணும்’’ என்று ஒரு மிக நீண்ட விளக்கத்தைக் கொடுத்து முடித்தான் வர்ஷன். கச்சிதமாக அனந்தகிருஷ்ணனின் போனில் அப்போது அழைப்பு. ஸ்பீக்கர் போனை போட்டபடி பேசத் தொடங்கினார். அந்த சுகுமார் என்கிற இளைஞன்தான் பேசினான். ‘‘சார்... போலீஸ் வந்துடுச்சு. ஃபார்மாலிட்டீசை ஸ்டார்ட் பண்ணிட்டாங்க. உங்க அப்பாவை ஆம்புலன்ஸ்ல ஏத்தி மகாபலிபுரம் ஜி.ஹெச்சுக்கு சிகிச்சைக்காக கூட்டிக்கிட்டு போயிட்டாங்க. அப்புறம் ஒரு முக்கியமான விஷயம்...’’

‘‘சொல்லுங்க?’’

‘‘உங்கப்பா மயங்கறதுக்கு முந்தியே அந்தக் கார்ல இருந்து ஒரு தகரப் பெட்டியை எடுக்கச்சொல்லி என்கிட்ட கொடுத்தாரு. அதை பத்திரமா வெச்சுருக்க சொன்னாரு. ‘யார் என்னைப் பாக்க வராட்டியும் என் பேத்தி ப்ரியா கட்டாயம் வருவா. அவ கைல கொடுத்துடு’ன்னு சொன்னார். இப்ப அந்தப் பெட்டி என்கிட்ட இருக்கு. அது நம்பர்லாக் போட்டு பூட்டப்பட்டு இருக்கு...’’

‘‘ஓ... மைகாட்! தேங்க்யூ மிஸ்டர் சுகுமார். அந்தப் பெட்டியோட நீங்க அங்கேயே இருங்க. நாங்க வந்துக்கிட்டே இருக்கோம். ஆமா,  போலீஸ்காரங்க உங்களை எதுவும் கேட்
கலையா?’’

‘‘கேட்கலையாவா? கொடகொடன்னு கொடஞ்சிட்டாங்க. கெட்டதுல ஒரு நல்லது மாதிரி உங்கப்பாவுக்கு திடீர்னு மயக்கம் தெளிஞ்சுடுச்சு. அவரே எல்லா கேள்விக்கும் பதில் சொல்லி சமாளிச்சிட்டாரு...’’

‘‘ஓ... அப்ப அப்பாவுக்கு பயப்படும்படியா எதுவுமில்ல... அப்படித்தானே?’’

‘‘ஆமாம் சார்... ஆனா உள்காயம் பட்டிருக்கலாம். குறிப்பா தோள்பட்டைல நல்ல அடி!’’

‘‘அவர் ஆம்புலன்ஸ்ல போகும்போது பெட்டியை தன்கிட்ட கொடுன்னு கேட்கலையா?’’

‘‘கேட்கல... ‘தம்பி, இதை ப்ரியாகிட்ட எப்படியாவது ஒப்படைச்சுடு’ன்னு மட்டும் சொன்னார்.’’

‘‘ரொம்ப நன்றி சுகுமார் உங்களுக்கு... நாங்க இப்ப அங்கதான் வந்துக்கிட்டிருக்கோம். எப்படியும் அரை மணி நேரத்துல அங்க இருப்போம். இப்ப திருவான்மியூரைத் தாண்டி, வி.ஜி.பி கோல்டன் பீச்சைத் தொட்டுட்டோம்...’’

‘‘இங்கயும் ஃபார்மாலிட்டீஸ் முடிய கொஞ்சம் டைம் ஆகும் போலத் தெரியுது சார்!’’
‘‘ஓ... உங்களுக்குத்தான் எங்கப்பாவால கஷ்டம்... பாவம் உங்க வேலை எவ்வளவு கெட்டுச்சோ!’’

‘‘பரவால்ல சார்... எனக்கு ஒரு நல்ல காரியம் செஞ்ச திருப்தி. நீங்க நிதானமாவே வாங்க!’’
- அந்த சுகுமார் பேசி முடித்திட, அனந்தகிருஷ்ணன் ப்ரியாவைப் பார்த்தார். அவள் கணபதி சுப்ரமணியன் அவனிடம் பாசத்தோடு சொன்ன வார்த்தைகளில் உருகிப்போயிருந்தாள்.

‘‘என் அப்பாவுக்கு என்னைவிட  நீ எவ்வளவு ஒசத்தியா இருக்கே பாத்தியா?’’ என்று கேட்டார் அனந்தகிருஷ்ணன்.

‘‘அது ப்ரியா ஸ்பெஷல் சார். உங்களவிடவே உங்கப்பாவை இவ அதிகம் புரிஞ்சி வெச்சிருக்கறவ சார்’’ - என்று வக்காலத்து வாங்கினான் வர்ஷன்.

‘‘அதெல்லாம் இருக்கட்டும்... அந்தப் பெட்டி திரும்ப நம்மகிட்டயே வருதே... இப்ப என்ன பண்ணப்போறோம்?’’ என்ற அனந்தாவை இருவருமே திருதிருவென பார்த்து விழிக்க, ‘‘அது போலியான பெட்டிதானே... அதைப் பத்தின பயத்தை விடுங்க. ஆராய்ச்சியாளரய்யா என்ன சொல்றார்னு பார்ப்போம்... இத்தனை பெரிய விபத்துலயும் அய்யாவுக்கு எதுவும் ஆகலைன்னா அவருக்கு இனியும் எதுவும் ஆகாது...’’ என்றார் வள்ளுவர்.

‘‘இது உங்க தனிப்பட்ட நம்பிக்கையா... இல்லை, ஜோசியமா?’’ என்று வர்ஷன் கேட்க, ‘‘இரண்டும்தான்னு வெச்சுக்குங்களேன்’’ என்றார் வள்ளுவர்.

கார் வேகமெடுத்து சீறியது. ஒருபுறமாய் கடல், மறுபுறமாய் அதன் கரைகளில் கம்பீரமான பங்களாக்கள். சாலைகளில் பஞ்சமில்லாத கார்களின் ஓட்டம். பெரும்பாலும் எவரிடமும் சாலை விதியைப் பற்றிய அறிவோ தெளிவோ இல்லை. ஆடும் மாடும் மேய்ச்சலின்போது விருப்பத்துக்கு முனைந்து செல்வதுபோலத்தான் கார்களிடம் பாய்ச்சல்!

ஆக்சிடென்ட் ஸ்பாட்டை அடைந்தபோது இறந்தவர்களின் சடலங்களை ஏற்றிக்கொண்டு ஆம்புலன்ஸ் ஒன்று புறப்பட்டபடி இருக்க, மரத்தடியில் தனது பைக்கை நிறுத்திக்கொண்டு அதன்மேல் தன் ஜெர்க்கின் கோட்டை பந்துபோல வைத்திருந்தான் அந்த சுகுமார் என்கிற இளைஞன்.

அவனை சில போலீஸ்காரர்கள் அவ்வப்போது பார்த்தபடியே இருந்தனர். காரில் இருந்து அனந்தகிருஷ்ணனும் மற்றவர்களும் இறங்கிய நிலையில் அவனாக அவர்களை நோக்கி முன் வந்தான். அனந்தகிருஷ்ணன் அவனிடம் கை குலுக்கினார். ஒரு போலீஸ் ஆபீசரும் வேகமாக முன் வந்தார்.

‘‘பரவால்ல சார்... சீக்கிரமாவே வந்துட்டீங்க...’’ என்றார்.

‘‘அப்பாவுக்கு எப்படி இருக்கு?’’

‘‘பயப்படும்படியா எதுவுமில்ல. மகாபலிபுரம் ஜி.ஹெச் போனா பாக்கலாம். பை த பை, இறந்து போயிட்ட இவங்களப் பத்தி சாருக்கு எதுவும் தெரியல. என்னை இவங்க கடத்தும்போதுதான் ஆக்சிடென்ட் ஆயிடுச்சின்னார். அப்புறம்தான் சார் எப்படிப்பட்ட ஒரு செலிபிரிட்டின்னு தெரிஞ்சிகிட்டோம். உங்கப்பாகிட்ட எங்களுக்கு ஒரு பெரிய என்கொயரி இருக்கு. முதல்ல அவர் கொஞ்சம் தெளியட்டும்’’ என்று படபடவென்று பேசினார் அந்த ஆபீசர்.

இங்கே அனந்தகிருஷ்ணன் ஆபீசரோடு பேசிக்கொண்டிருக்கும்போது அங்கே சுகுமார் தன் ஜெர்க்கினுக்குள் மறைத்து வைத்திருந்த தகரப் பெட்டியை அப்படியே தூக்கி ப்ரியா வசம் கொடுத்தவனாக... ‘‘சார் இதை யாருக்கும் தெரியாம உங்ககிட்ட கொடுக்கச் சொன்னார்...’’ என்றான். 
வர்ஷனும் ப்ரியாவும் ஜெர்க்கினோடு தங்கள் கார் நோக்கிச் சென்று காருக்குள் பெட்டியை வைத்துவிட்டுத் திரும்பிய நொடி ஒரு போலீஸ் ஆபீசர் மிகக் கூர்மையாகப் பார்த்த
படியே வந்தவராக, ‘‘வாட் ஈஸ் தட்.... இப்ப எதை உள்ள வச்சீங்க?’’ என்று ஆரம்பித்தார். வர்ஷன், ப்ரியா இருவரிடமும் மெல்லிய உதறல்!

‘‘ஒவ்வொரு மீட்டிங்லயும் ‘உங்கள் வாழ்க்கையில் ஒளியேற்றப் பாடுபடுவேன்’னு தலைவர் சொல்ல ஆரம்பிச்சிருக்காரே... என்ன விஷயம்?’’
‘‘இன்வெர்ட்டர் ஹோல்சேல் டீலர்ஷிப் எடுத்து இருக்கார்ல!’’

‘‘மன்னர் மதுவுக்கு அடிமையாகிவிட்டார் என்று சொல்கிறாயே, எப்படி?’’    
‘‘இப்போதெல்லாம் ‘யார் அங்கே’ என்று அழைப்பதற்கு பதில், ‘பார் எங்கே?’ என்றுதான் அடிக்கடி கேட்கிறார்...’’

‘‘உடம்பு சரியில்லை ன்னு டாக்டரைப் பார்க்கப் போன நீ, ஏன் பார்க்காம வந்தே? டாக்டர் இல்லையா...’’
‘‘ம்ஹும்... எனக்குப் பிடிச்ச நர்ஸ் இல்லைடா!’’
- தொடரும்...

இந்திரா சௌந்தர்ராஜன்
ஓவியம்: ஸ்யாம்