கைம்மண் அளவுபள்ளிக்கூடம் விட்டு வந்ததும், பெரும்பாலும் நேரடியாகச் சாப்பாடுதான் அன்று எமக்கு. நல்ல பசியும் இருக்கும். மத்தியானம் அரைவயிறு, கால்வயிறு, சோறு வடித்த கஞ்சி அல்லது பைப் தண்ணீர் என்பதால். எமக்காவது மோசமில்லை, எம்மில் சிலருக்கு பள்ளி விட்டு வந்தாலும் விளக்கு வைத்தபின் உலையேற்றி வடித்து இறக்கி, குழம்பு கொதித்த பின்தான் சாப்பாடு.சற்று வசதியான வீட்டுப்பிள்ளைகள், மத்தியானம் நல்ல எடுப்பு எடுத்திருக்கும் என்பதால், மாலை பள்ளி விட்டு வந்ததும், வீட்டில் சிறுதீனி ஏதும் செய்து வைத்திருப்பார்கள். சின்ன பனையோலைக் கொட்டானில் போட்டு, வாசல்படிப் புரையில் உட்கார்ந்து தின்பார்கள். காலையில் நனையப் போட்டு வைத்து, மாலையில் உப்புப் போட்டு அவித்த ெமாச்சை, கடலை, பெரும்பயிறு, சிறுபயிறு, காணம் என்பன. பெரும்பயிறு என்கிற தட்டப்பயிறு என்றால், வேகவைத்துக் கொஞ்சம் அவல் தூவி விரவிக் கொடுப்பார்கள். சிறுபயிறு என்கிற பாசிப்பயிறு என்றால், கொஞ்சம் தேங்காய் துருவிப் போட்டு. நாகரிகமான மொழியில் அதனைச் ‘சுண்டல்’ என்பார்கள்.

உழக்குப் போல, கொட்டானில் வைத்துத் தின்று கொண்டிருப்பார்கள். உழக்கு என்றால் தெரியும்தானே! தமிழ்தான்... ஆழாக்கு, உழக்கு, உரி, நாழி, பக்கா என்பன முகத்தல் அளவுகள். நாழி எனில் ஏகதேசமாக ஒரு லிட்டர். ஒளவை, ‘நாழி முகவுமோ நானாழி?’ என்றாள். ‘நான்கு நாழிகள் கொள்ளும் தானியத்தை ஒரு நாழி முகக்க முடியுமா’ என்ற பொருளில். ‘உண்பது நாழி, உடுப்பது இரண்டு முழம்’ என்பதுவும் ஒளவைதான். உண்பது நாழி அரிசிச் சோறு, உடுப்பது இரண்டு முழம் வேட்டி என்று பொருள். இன்று நாழி அரிசிச் சோறு என்பதைக் கற்பனை கூட செய்ய இயலாது.

சில சமயம் கடித்துக்கொள்ள, கொட்டானில் ஒரு துண்டுக் கருப்பட்டியும் கிடக்கும். இடைப் பயிராக விதைத்து நெற்று எடுத்தபின், உளுந்தும் கிடக்கும். முழு உளுந்து நெற்றாகவே வேக வைத்துத் தருவார்கள். அவித்த முழு நிலக்கடலையும். உரித்து உரித்துத் தின்னலாம். அல்லது மண்சட்டியில் ஆற்று மணலுடன் சேர்த்துப் போட்டு வறுத்த நிலக்கடலை. அந்த வாசத்துக்கே நாசி விடைக்கும். சிலர் கொஞ்சம் போல அவல் நனைத்து, துவர வைத்து, அதில் கருப்பட்டி சீவிப் போட்டு, தேங்காய் துருவிப் போட்டு கலந்து தருவார்கள். கனிந்த பேயம்பழம் ஒன்றும் இருந்தால் உத்தமம். ‘பாபநாசம்’ சினிமாவின் மூலப்பிரதியான, மோகன்லால் - மீனா நடித்த ‘திருஷ்யம்’ பார்த்தவர்கள் கவனித்திருக்கக் கூடும். பள்ளி விட்டு வந்த இரண்டாவது மகளான சிறுமி கேட்பாள், ‘அம்மே! விஷக்குந்துண்டு... எந்தெங்கிலும் தின்னான் தா!’ என்று. ‘அம்மா பசிக்குது, ஏதாவது தின்னத் தா’ என்று பொருள்.

அம்மா சொல்வாள், ‘அதோ, அவிட அவல் இருப்புண்டு’ என்று. ‘பாபநாசம்’ என்ன தின்னத் தந்தது என்றெனக்குத் தெரியாது. ஆக, கேரளத்தில் பள்ளி விட்டு வரும் சிறாருக்கு நான் மேற்சொன்ன அவல் இன்றும் மாலைச் சிற்றுண்டி. பணக்கார வீடுகளில் முறுக்குச் சுட்டு, பெரிய செம்புப் பானைகளில் போட்டு வைத்திருப்பார்கள். ஒரு மாதம் கிடக்கும். நிக்கர் பாக்கெட்டில் இரண்டு திணித்துக் கொண்டு விளையாட வருவார்கள். ‘கொதி’ போடாமல் இருக்க நமக்கும் சிறு துண்டு கிடைக்கும்.

மாலைச் சிற்றுண்டி, பள்ளி விட்டு வரும் பாலகருக்குச் செய்து தருவது ஒன்றும் மலை மறிக்கும் காரியம் இல்லை. சிறியதோர் திட்டமிடல் வேண்டும், அவ்வளவே! மாலை சுண்டல் செய்ய வேண்டும் என்றால், முதலில் வீட்டில் கடலையோ, பயிறோ இருக்க வேண்டும். அதனை உரிய காலத்தில் நனையப் போட வேண்டும். குக்கர் இல்லாத, கேஸ் அடுப்பு இல்லாத வீடுண்டா இன்று? தோதுப் போல குக்கரில் வைத்து, பயிறுக்கு ஏற்றபடி விசில் விட வேண்டும். பயிறு வெந்து, குக்கர் ஆறியதும், சீனிச் சட்டியில் ஒரு கரண்டி எண்ணெய் ஊற்றி, கடுகு - கறிவேப்பிலை தாளித்து, அரிந்த வெங்காயம், பச்சை மிளகாய் வதக்கி, வத்தல் மிளகாய் கிள்ளிப் போட்டு, அதில் வேகவைத்த பயிறு போட்டு ஒரு புரட்டுப் புரட்டினால் தீர்ந்தது சோலி. மேலே தேங்காய்த் துருவல் போட்டுக்கொள்ளலாம்.

கொழுக்கட்டை செய்வதற்கு என்ன நேரமாகும்? பச்சரிசியோ, புழுங்கல் அரிசியோ முன்னமே ஊறப் போடுதல் ஒன்றுதானே திட்டமிடல்? அரிசி, உப்பு, தேங்காய், வேறென்ன? உப்புக்கு மாற்றாக வெல்லம் போட்டால் சர்க்கரைக் கொழுக்கட்டை. இவைதானே இடுபொருட்கள்? கொழுக்கட்டையிலேயே இருபது, முப்பது தினுசு என்றால் என்ன இடுக்கண் நமக்கு சிறுவருக்குச் செய்து வழங்க?

நீங்கள் கேட்பீர்கள், ‘எல்லாம் சரிதான் ஐயா, அதற்கு பள்ளி விட்டுச் சிறுவர் வரும்போது வீட்டில் பெற்றோர் ஒருவர் இருக்க வேண்டாமா?’ என்று. அதுதானே இங்கு பிரச்னையே! இன்றைய வாழ்க்கைச் சூழலில் இருவர் சம்பாத்தியம் இல்லாமல் தீராது. கணவன் அல்லது மனைவியின் பெற்றோர் கூடவே வாழ்வது என்பது எல்லோர்க்கும் வாய்ப்பதில்லை. அக்கம்பக்கத்து வீட்டார் நிலைமையும் நம் நிலைமைதானே! நகரம் என்பது கிராமம் அல்லவே! நமக்கோ கல்யாணக் கடன், வீடு கட்டக் கடன், ஃபிரிட்ஜ்- டி.வி- வாஷிங் மெஷின் கடன், நகைக் கடன், புடவைக் கடன், வாகனம் வாங்கிய கடன் என்று எத்தனை!

பல வீடுகளில் டைனிங் டேபிள் மேல் பல்வகை உதிரி பிஸ்கெட்கள் கொண்ட டின், பிரட், பட்டர், ஜாம், காலையிலேயே போட்டு பிளாஸ்க்கில் ஊற்றி வைக்கப்பட்ட பால் அல்லது பால் பானங்கள். கொஞ்சம் வளர்ந்த பிள்ளைகள் பள்ளி விட்டுத் திரும்பும்போதே அரை லிட்டர் பால் பாக்கெட், பிஸ்கெட் அல்லது பன் வாங்கி வருகின்றன. டீ போட கற்று வைத்திருக்கின்றன. அல்லது பலகாரக் கடையிலிருந்து தலைக்கு இரண்டு பப்ஸ் அல்லது சமோசா... நவீன இளைஞர்கள் பணி இடைவேளையில் சில பல பப்ஸ்களைத்தான் மதிய உணவாகக் கொள்கிறார்கள்.

சில வீடுகளில் கைப்பிள்ளைகளை, பாலர் பள்ளி சென்று திரும்பும் குழந்தைகளைக் கவனித்துக்கொள்ள பகற்பொழுதில் ஆயாக்கள் வைத்துக் கொள்வதுண்டு. என் மகள் சில ஆண்டுகளுக்கு முன்பு, பெங்களூரு நாராயணா ஹ்ருதயாலயா மருத்துவமனையில் அனெஸ்தீஸியா எனும் மயக்கவியல் மருத்துவ சிறப்புப் பயிற்சிக்காக ஆறு மாதம் சென்றிருந்தாள். 25 அறுவை சிகிச்சை தியேட்டர்கள் இயங்கும் புகழ்பெற்ற மருத்துவமனை அது. மருத்துவமனையின் அடுக்குமாடிக் குடியிருப்பு சில கிலோமீட்டர் தூரத்திலேயே இருந்தது. மேல் மாடியில் பத்து மாதக் கைக்குழந்தையுடன் மருத்துவர் தம்பதிகள்.

பகல் முழுக்கக் குழந்தையைப் பராமரிக்க ஆயா உண்டு. ஒரு நாள் எதிர்பாராமலும் வழக்கத்துக்கு மாறாகவும் பாதி நாளிலேயே பணி முடிந்து, காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார் தாய். சிக்னலில் கார் நின்றபோது, கைப்பிள்ளையை வைத்து ஒரு பெண் யாசகம் வாங்கிக் கொண்டிருந்தாள். தாய் நினைத்துக் கொண்டாள், நம் பிள்ளையின் பிராயம் இருக்கும் என.

வீட்டுக்கு வந்தால் வீட்டில் குழந்தை இல்லை. ஆயா பதறிப் பதறிப் பேசினாள். ஆயாவையும் கூட்டிக் கொண்டு, சிக்னலுக்குத் திரும்பிப் போய் குழந்தையை மீட்டு வந்தார் தாய். குழந்தை வாடகைக்கு விடப்பட்டிருந்தது. எல்லா வேலைக்காரிகளும் ஆயாவும் அப்படித்தான் என்று சொல்ல வரவில்லை. ஆனால் இப்படியும் நடக்கிறது.

வயல் வேலை, காட்டு வேலை, கட்டிட வேலை நடக்கிற இடங்களில் கவனித்திருப்பீர்கள்... குறைந்தபட்சம் சினிமாக்களிலேனும்! மரக்கிளையில் தொங்கப் போட்ட தூளிகளை... உறங்கும் பிள்ளை கண் விழித்து அழுதால், ஓடிப்போய் வாரி எடுத்து பால் கொடுக்கும் தாய்மாரை. அலுவலகம் போகும் பெண்களுக்கு இந்த வசதிகள் இல்லை. நர்சரிக்குப் போகும் பாலகரை எவர் கவனிப்பது?

மேயப் போயிருக்கும் கறவை மாடுகளின் கன்றுகள் காத்துக் கிடக்கும் தத்தம் தாய்ப்பசுக்களின் வரவு பார்த்து. மாணிக்கவாசகர் பேசுகிறார், ‘நன்றே வருகுவர் நம் தாயர்’ என்று. கவனிக்க வேண்டிய பாவம், நம் தாயர் என்பது. அவரே மற்றோர் பாடலில், ‘கற்றாவின் மனம் போலக் கசிந்து உருக வேண்டுவனே!’ என்கிறார். கன்றினை உடைய தாய்ப்பசுவின் மனம் தனது கன்றுக்காகக் கசிந்து உருகும். மடிக் காம்புகள் விடைத்துப் பால் சொட்டி நிற்க. ‘அதைப் போல நானும் உருகுகிறேன்’ என்றார்.
அது தாய் மனம். காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு. ஆனால், சமகாலத் தாய்மாரின் போராட்டம், நெருக்கடி, சூழல் பலவிதம். என்னதான் செய்வார்கள் பாவம்! அதைப் பயன்படுத்திக் கொண்டார்கள் பன்னாட்டு, இந்நாட்டு முதலாளிகள். அவர்களின் செல்வாக்குடைய அரசியல் தரகர்கள். பல வீடுகளில் இரவு உணவே இரண்டு நிமிட நூடுல்ஸ் என்றாயிற்று.

நான்காண்டுகள் முன்பு 58 நாட்கள் அமெரிக்க ஐக்கிய நாடுகளில், பல மாநிலங்களில் நண்பர்களுடன் தங்கி இருந்தேன். வட கரோலினா மாநிலத்து சார்லெட் நகரில் என் மகனுடன் இரண்டு தவணையாக எட்டு நாட்கள் இருந்தேன். ஒரு நாள் படேல் பிரதர்ஸ் என்ற சங்கிலித் தொடர் பல்பொருள் அங்காடிக்குக் கூட்டிப் போனான். குஜராத்திகள் கடை. தயார் நிலை உணவுப் பிரிவில் பிளாஸ்டிக் டப்பாக்களில் அடைக்கப்பட்டிருந்த மினி இட்லி - சாம்பார், ஆப்பம் - கடலை, மசால் தோசை, சப்பாத்தி - குருமா, பூரி மசாலா, டோக்ளா, தயிர்வடை, மீன்கறியும் சோறும், கோழிக் குழம்பும் சோறும், பொங்கல் - உளுந்த வடை... காண எனக்கு ஆயாசமாக இருந்தது. இந்தியாவில் எங்கோ, எப்போதோ தயாரிக்கப்பட்டு, சீல் செய்யப்பட்டு, உறைய வைக்கப்பட்டு, கப்பல் மூலமோ சரக்கு விமானம் மூலமோ 18,000 மைல்கள் கடந்து வந்து அங்காடியில் காத்துக் கிடந்தன. வாங்கிச் சென்று அவனில் சூடாக்கித் தின்பார்கள்.

மும்பையில் புறநகர் ரயில் நிலையங்களின் வெளிப்புறத்துக் கடைகளில் - விக்ரோலி, முலுண்ட், டோம்பிவிலி, கோரே காவ், போரிவிலி என எந்த ஸ்டேஷன் ஆனாலும் - உணவுக் கடைகளும் இருக்கும். பணி முடிந்து வீடு திரும்புவோர் வாங்கிச் செல்ல என! செய்து, தயார் நிலையில் சப்பாத்தி (மராத்தியர் அதனை ‘போளி’ என்பார்கள்), சப்ஜி வகைகள், பருப்பு, சோறு என்று. வீட்டு உறுப்பினர்களின் தலை எண்ணி, சாப்பாட்டுத் திறன் கருதி, சப்பாத்தி, சப்ஜியாக பெண்டி (வெண்டை), கரேலா (பாகல்), வாங்கி (கத்தரி), தால் (பருப்பு), சாவல் (சோறு) வாங்கிக் கொண்டு வீட்டுக்கு நடப்பார்கள். சூடாகவும் சுகாதாரமாகவும் சுவையாகவும் இருக்கும். எனக்குத் தெரிந்து, நடைபாதைக் கடைகளின் உணவுத்தரம் மும்பையில் உயர்வாக இருக்கும். ஆனால், அதுவல்ல இந்த Frozen Food சமாச்சாரம்.

புகழ்பெற்ற நிறுவனங்களின் பால் தயாரிப்புகளில் புழு இருக்கிறது என்கிறார்கள். புலம்பிப் பயனில்லை. Junk Foodக்கு எதிரான மனோபாவம் வளர்த்துப் பழக வேண்டும். குறிப்பாகக் குழந்தை உணவு எனும்போது. நமது நாரத்தங்காய் ஊறுகாய், ஆவக்காய் ஊறுகாய் ஓராண்டு இருந்தாலும் புழு வருவதில்லை. மலையாளிகள் பருவ காலத்தில் செய்து வைக்கும் பலாப்பழ வறட்டியில் வருவதில்லை. பாரம்பரிய வற்றல், வடகம், காணப் பொடி, பருப்புப் பொடி, தவணைப் புளி, வேப்பிலைக் கட்டியில் வருவதில்லை.
அதி நவீன முறையில், காற்றுப் புகாமல், கைபடாமல் தயாரிக்கப்பட்டு, சீல் வைக்கப்படும் பழரசத்திலும் பழக்கூழிலும் பழ அடையிலும் எப்படிப் புழு வருகிறது? வண்ணப் பெட்டிகளில் அடைக்கப்பட்ட பழச்சாறுகளை, கண்ணால் பார்க்காமல் ஸ்ட்ரா போட்டு உறிஞ்சுகின்றனர் சிறுவர்கள்... மனிதன் உண்ணத் தகுதியற்ற விதவிதமான வேதியியல் பொருட்களின் சேர்மானம் வேறு.

எப்படிக் காப்பாற்றப் போகிறோம் நமது குழந்தைகளை, இம்மாபாவிகளின் பேராசைக் கரங்களில் இருந்து? ஆண்டுக்கு ஒரு தரம் புத்தாடை வாங்கிக் கொடுத்து, பலூன்கள் ஊதிக் கட்டித் தொங்க விட்டு, மூவாயிரம் பணத்துக்கு கேக் வாங்கி, மெழுகுத் திரி ஏற்றி, ஊதி அணைத்து, ‘ஹேப்பி பர்த் டே டு யூ’ எனக் கூவிப் பாடினால் போதுமா?
எல்லாக் குழந்தைகளும் ஐந்தரை அடிதான் வளரும், ‘எமது ஊட்ட பானம் நாளுக்கு இருமுறை பருகினால் ஏழே காலடி வளரலாம்’ என்பதை நம்பினால் தீர்ந்ததா கடமை? எங்கள் பற்பசைக்குக் கிருமிகள் அண்டாது என்றால், ஏன் இத்தனை பல் மருத்துவக் கல்லூரிகளும் பல் ஆஸ்பத்திரிகளும்?

மூதாதையர் சொன்னதை நம்ப மாட்டோம். ஆனால், நூற்றுக்கணக்கான கோடிகள் செலவில் விளம்பரம் செய்யும் கொலைச் சுறாக்களைக் கண்மூடித்தனமாக நம்பிக் கட்டுப்பட்டு நடப்போம். அவர்கள் சொல்லும் பற்பசை தேய்க்கும் சிறுவரை, பல்லால் ஒரு கரும்பைக் கடித்துத் தின்னச் சொல்லுங்கள் பார்ப்போம்!
சற்று விவரமுள்ள பள்ளிகளில், குழந்தைகள் Junk Food எடுத்துவர அனுமதி இல்லை. அறியாமை காரணமாக, நடுத்தர வர்க்கத்துப் பெற்றோர் ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் பார்த்துப் பரவசமடைகிறார்கள். இலவசமாகக் கிடைக்கிறது என்றால் விஷம் வாங்கித் தின்போமா?

பள்ளிக்கூட வாசலில் விற்கப்படும் எளிய பண்டங்கள் வாங்கித் தின்றால் நோய் வரும், ஆனால் நேரடியாகவே புழு மிதக்கும் பானங்கள் பருகலாம்! Ready to eat உணவுப் பண்டங்களில் இத்தனை சுகாதாரக் கட்டுப்பாடுகள், தர வரைமுறைகள் என்றால், மருந்துக் கடைகளில் ஏன் ஆயிரம் தினுசுகளில் மாத்திரைகள்?
குறைந்தபட்சம், ‘பணம் என்ற ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு நஞ்சு விற்கும் முதலாளிகளால் நாம் வஞ்சிக்கப்படுகிறோம்’ என்பதையாவது மனதில் கொள்ளுங்கள் பெற்றோரே! அறத்தின் பகைவர்களிடம் ஏமாறாதீர்கள்!

"வயல் வேலை, காட்டு வேலை, கட்டிட வேலை  நடக்கிற இடங்களில் கவனித்திருப்பீர்கள்... குறைந்தபட்சம்  சினிமாக்களிலேனும்! மரக்கிளையில் தொங்கப் போட்ட தூளிகளை... "

"நமது ஊறுகாய் ஓராண்டு இருந்தாலும் புழு வருவதில்லை. அதி நவீன முறையில், கைபடாமல் தயாரிக்கப்பட்டு, சீல் வைக்கப்படும் பழரசத்திலும் பழக்கூழிலும் பழ அடையிலும் எப்படிப் புழு வருகிறது?"

"எல்லாக் குழந்தைகளும் ஐந்தரை அடிதான்  வளரும், ‘எமது ஊட்ட பானம் நாளுக்கு இருமுறை பருகினால் ஏழே காலடி வளரலாம்’  என்பதை நம்பினால் தீர்ந்ததா கடமை?"
- கற்போம்...

 நாஞ்சில் நாடன்
ஓவியம் மருது