குட்டிச்சுவர் சிந்தனைகள்



ஆல்தோட்ட பூபதி

‘‘மொதல்ல திங்கிறதுக்கு சோறு இருக்காடா, அப்புறம் ஏன்டா கிரிக்கெட் ஸ்கோரு கேட்குறீங்க?’ன்னு மகான் கவுண்டமணி சொல்ற மாதிரி, நாட்டுல அவனவனுக்கு ஆயிரத்தெட்டு பிரச்னை. இதுல இந்த ‘பாகுபலி’ படம் ஹிட்டானாலும் ஆச்சு, அவனவன் ஆயிரத்தி ஒன்பதாவது பிரச்னையா, ‘பாகுபலி’ பிரபாஸ ஏன் கட்டப்பா சத்யராஜ் கொன்னாருன்னு வலைத்தளங்களில் போட்டு அலசிக்கிட்டு இருக்காங்க.



தமிழ்நாடு பட்ஜெட் போடுற அளவு பணத்துல எடுத்த ‘பாகுபலி’ படம், இந்திய அரசு போடுற பட்ஜெட் அளவுக்கு பணத்தை வாரிக் குவிச்சிருக்கு. பல நூறு கோடி வசூல், கின்னஸ் சாதனை போஸ்டர் என ‘பாகுபலி’ படத்தைப் பற்றிப் பேச எத்தனையோ இருக்கு. இருந்தாலும்  வெட்டியா  இருக்கிறதையே வேலையா வச்சிருக்கிற நம்ம இணைய தளபதிகள் ‘பாகுபலி’ய ஏன் கட்டப்பா கொன்னாருன்னு மண்டையப் போட்டு உழப்பிக்கிட்டும் குழப்பிக்கிட்டும் இருக்காங்க. இப்போ உங்களுக்கு ‘பாகுபலி’ய ஏன் கட்டப்பா கொன்னாருன்னு தெரியணும்... அம்புட்டுதானே? இந்தாங்க, நாலஞ்சு காரணம் இருக்கு. எது சரியா தோணுதோ, அதை கப்புன்னு கெட்டியா புடிச்சுக்கோங்க.



* இந்த பாகுபலி பய, அம்பது ரூபா ஹெல்மெட்ட, ஐநூறு ரூபாய்க்கு கட்டப்பாவுக்கு வித்து ஏமாத்தி இருக்காப்ல. போதாக்குறைக்கு அதுல ஐ.எஸ்.ஐ முத்திரை வேற இல்லையாம்.
* த்ரிஷாவுக்கு கல்யாணம், மொய் வைக்க பணமில்லைன்னு கட்டப்பாகிட்ட கெஞ்சி, ஐயாயிரம் கடன் வாங்கி ஏமாத்தி இருக்காப்ல பாகுபலி. அதான் கட்டப்பா கெட்டப்பா ஆகிட்டாரு.
* ‘பாபநாசம்’ கூட்டிப் போறேன்னு பத்தாயிரம் காச லவட்டிட்டு, பாணதீர்த்தம் அருவில குளிக்க தலையில எண்ணெய் தேய்ச்சுக்கிட்டு இருந்த கட்டப்பாவ, கமல் நடிச்ச ‘பாபநாசம்’ படத்துக்கு கூட்டிப் போய் கடுப்பேத்தியிருக்காரு பாகுபலி. அதான் கட்டப்பா பாகுபலிய போட்டுட்டாரு.
* ‘வாலு’ படம் ரிலீஸ் ஆகிடுச்சுன்னு சொல்லி, கட்டப்பாவ ஏப்ரல் ஃபூல் பண்ணி கலாய்ச்சிருக்காரு பாகுபலி. அதனால கோபமான கட்டப்பா கட்டையால போட்டுட்டாரு.
* ஈமு கோழி வளர்த்தா, ஆடி போயி ஆவணி வர்றதுக்குள்ள டாப்புக்கு வந்துடலாம்னு சொல்லி கட்டப்பா டப்புக்கு ஆப்பு வச்சிட்டாரு.
* கேர்ள் ஃப்ரண்டோட பேசணும்னு சொல்லி கட்டப்பா போன வாங்கி, எர்வாமேட்டினுக்கு மிஸ்டு கால் விட்டிருக்காரு பாகுபலி.
* இதை விட முக்கிய காரணம், கொல்லிமலைய தூக்குறேன்னு பாகுபலி சொன்னது. சரி, சிவலிங்கத்தையே தூக்குன பாகுபலி கொல்லி மலையையும் தூக்குவாருன்னு நம்பி போன கட்டப்பாகிட்ட, ‘மலைய தூக்கி தோளுல வை,  சுமக்கிறேன்’னு கவுண்டமணி காமெடி பண்ணி கடுப்பேத்தி இருக்காரு பாகுபலி.

ஆறு மாசம் முடிஞ்சு ஆடி மாசமே பொறந்து போச்சு. இந்த ஆறு மாசத்துல தமிழ் மக்களின் மனதைக் கொள்ளையடித்த, பாக்ஸ் ஆபீஸை வெள்ளையடித்த முக்கியமான சில படங்களைப் பார்ப்போம். உங்கள் பாதுகாப்புக்காகவும், முக்கியமாக எங்கள் பாதுகாப்புக்காகவும் படத்தின் பெயர்களை நீங்கள் கண்டுபிடிக்காதவாறு மாற்றியுள்ளோம்.

* நாம முதல்ல பார்க்கப் போற படம் ‘விசை’. இந்தப் படத்துக்கு பிசை, தசைன்னு எந்த டைட்டில் வச்சிருந்தாலும் மாடி வீட்டு அக்காவுக்கு மருதாணி வச்ச மாதிரி பக்காவா பொருந்தியிருக்கும். நடிப்புல ஆரம்பிச்சு இசை, எடிட்டிங், லைட்பாய், மேக்கப்மேன், ஹீரோயின் டச்சப், சமையல்னு சகலகலா வேலைகளையும் நம்ம இயக்குநரே பார்த்துட்டாரு. பாவம், கதைய மட்டும் கோட்டை விட்டுட்டாரு. படத்த உத்தரப்பிரதேசம், ஆந்திரப் பிரதேசம்னு போயி எடுக்க நினைச்சாங்களான்னு தெரில... ஆனா படத்துல பல நேரம் கதாநாயகியோட மத்தியப் பிரதேசம், முதுகுப் பிரதேசம் தாண்டி கேமரா வரவே இல்லை. வெள்ளந்தியான இந்த விவரமில்லா ஹீரோயினுக்காகவே இந்தப் படத்தை பார்க்கும் சந்தர்ப்பம் வாய்ச்சா பாருங்க.

* இந்த வருஷம் எந்த படத்த பார்க்காம மிஸ் பண்ணினாலும், இந்தப் படத்தை மட்டும் மிஸ் பண்ணிடவே கூடாது, அப்படியாப்பட்ட படம்தான் வைஸ் கேப்டன் நடித்த ‘சாப்டோம்’. வழக்கமா இவங்கப்பா பெரிய கேப்டன், செவுத்துல கால வச்சு அடிப்பாருன்னா... நம்ம வைஸ் கேப்டன், முகத்துல எக்ஸ்பிரஷன் வச்சே அடிச்சாரு. இந்தப் படத்துல ஹீரோ வெட்கப்பட்ட சீன்களில் எல்லாம் தமிழ்நாடே துக்கப்பட்டு போச்சுன்னு ‘தின டூப்’ பத்திரிகையில பத்தாம் பக்கத்துல போட்டிருந்தாங்க. கடைசி வரை இவரு ஆடுனது டான்ஸா... இல்ல, உடான்ஸான்னே மொத்த தமிழ்நாட்டு சினிமா விமர்சகர்களாலக்கூட கண்டு பிடிக்க முடியல. கடைசியா வந்த தகவலின்படி, இந்தப் படத்தோட ஹீரோயின்களுக்கு ‘உலக பொறுமைக்கான நோபல் பரிசு’ தரப் போறாங்கன்னு டைரக்டர் பேட்டி கொடுத்திருக்காரு.

* அடுத்து மனதைக் கொள்ளையடித்த படம் ‘பொம்பள’. அம்பது பேர அடிக்கிற எம்.ஜி.ஆரு படம் பார்த்திருப்போம்... ஐந்நூறு பேர அடிக்கிற என்.டி.ஆரு படம் பார்த்திருப்போம். ஆனா, தமிழ்நாட்டு ஜனத்தொகையில பாதிப் பேர அடிக்கிற படம் இந்தப் படம்தான். மும்பை நகரத்து மேல இதுவரை பறந்த விமானங்களை விட, இந்தப் படத்துல வானத்துல ஹீரோ பறந்தது அதிகம்னு ஏர் இந்தியா ஆபீஸ்லயே பேசிக்கிட்டாங்க. அதுலயும், ஒரு காட்சில ஹீரோ ஜீப்புல பறந்து வந்தது, துபாய் பக்கம் டூர் போனவங்களுக்குக் கூட தெரிஞ்சிருக்கு. ‘பாசமலர்’ சாவித்திரி எல்லாம் என்னத்த அத்தை? இதுல பாண்ட்ஸ் பவுடர் போட்டுக்கிட்டு டான்ஸ் ஆடுவாங்க பாருங்க மூணு அத்தைங்க, அவங்கதான் அத்தைங்க. மத்ததெல்லாம் நத்தைங்க. பாட்டுக்கும் ஃபைட்டுக்காகவுமே இந்தப் படத்தை எத்தனை தடவை வேணா பார்க்கலாம்.

* இந்த வருசத்துல என்னைக்குமே மறக்க முடியாத மாதிரி ஒரு படம் வந்துச்சு. அதான் நம்ம சன்ஸ்க்ரீன் ஸ்டார் நடிச்ச ‘சட்டைய மாத்துறோம்’. ஆர்டர் கொடுத்து செஞ்ச ஆறடி கோத்ரெஜ் பீரோவாட்டம் இருக்கிற ஹீரோ... பைல்ஸ் ஆபரேஷன் பண்ணின பேஷன்ட்டுக்கு பால் வாங்கிட்டு வர்ற ஃப்ளாஸ்க் மாதிரி ரெண்டு ஹீரோயின்... காமராஜர் டேம் கட்டுனப்ப வேட்டி கட்ட ஆரம்பிச்ச வயசான வாலிப நண்பர்கள்னு படம் முழுக்க எல்லாமே கலர்ஃபுல் லாலிபாப்தான். அதுலயும் கன்னியாகுமரி வள்ளுவர் சிலையவே கைல தூக்கி கரையோரம் வைக்கிற மாதிரியான ஹீரோவும், மொட்டை மாடில காயப்போட்ட வடாம் மாதிரியான ஹீரோயினும் டூயட் ஆடுறப்ப வால்யூம குறைச்சுட்டு பார்த்தா, ‘ஆனந்த யாழை மீட்டுகிறாய், அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்’ பாடல் பார்ட் டூ போலவே, மனசை பழைய துணிய பக்கெட்ல ஊற வச்சு புழியுற மாதிரி புழியும்!