ரஜினி மிஸ் பண்ணிய சிவப்பு சட்டை!



80’ஸ் ஸ்டார் மீட் ரகசியங்கள்!

அமெரிக்க எஃப்.பி.ஐ.யின் அண்டர்கிரவுண்ட் ஆபரேஷனைவிடவும் ரகசியமானது 80’ஸ் ஸ்டார்களின் பிரைவேட் மீட். நடந்து முடிந்த பிறகுதான் மீடியாவுக்கே தகவல் வரும். இந்த வருடமும் அப்படித்தான்... திடீரென போட்டோக்கள் பரவி பரவசப்படுத்தின. இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் என நான்கு திரையுலகுகள்... சிரஞ்சீவி, மோகன்லால், ஜாக்கி ஷெராஃப் என பங்குபெற்ற 34 பேருமே பெரிய ஆர்ட்டிஸ்ட்கள்... தொடர்ந்து ஆறாவது வருடமாக இதைச் சாதிப்பது சாதாரணமில்லை. இந்த வருட நிகழ்ச்சி ஏற்பாட்டில் கிரெடிட்ஸ் கோஸ் டு சுஹாசினி, லிஸி அண்ட் குஷ்பு!

‘‘1980கள்ல இண்டஸ்ட்ரியைக் கலக்கின நாங்க எல்லாரும் எங்களோட நட்பைப் புதுப்பிச்சுக்கிற சந்திப்பு இது. முதன்முதலா 2009ல இந்த சந்திப்பு நடக்கும்போது எல்லாரும் எமோஷனலா  ஆகிட்டாங்க. பொலபொலன்னு ஆனந்தக் கண்ணீர்.  ஆனா,  இந்த வருஷம் ஒரு கோலாகலமான கல்யாணத்துல கலந்துக்கிற சந்தோஷத்துல  அசெம்பிள் ஆனோம். ‘நடிகர்கள் ஒருத்தருக்கொருத்தர்  இவ்வளவு விட்டுக்கொடுத்து, இப்படி  நட்பா இருப்பாங்களா’ன்னு ரகுமான் கண்கலங்கி சொன்னது மறக்க முடியாதது. முதல்  வருஷத்துல நாங்க என்ன ஃபீல் பண்ணினமோ, இந்த வருஷம் புதுசா வந்தவங்க  அதை ஃபீல் பண்ணினாங்க!’’ - மகிழ்ந்து நெகிழ்கிறார் சுஹாசினி.



‘‘அதென்ன இந்த வருஷ நிகழ்ச்சியோட தீம் ‘மௌலின் ரோக்’?’’

‘‘அதை அப்படி உச்சரிக்கக் கூடாது. ‘மூலான் ரூஷ்’னு சொல்வாங்க. பாரீஸ்ல ஒரு புகழ்பெற்ற நைட் கிளப்போட பெயர் அது. ஒவ்வொரு வருஷமும் ஒவ்வொரு தீம்ல டிரெஸ்ஸிங் பண்ணுவோம். அதுல இந்த வருஷம்தான் ரொம்ப பெஸ்ட். ‘மூலான்’னா அந்தத் தெருவோட பெயர். ரூஷ்னா ரெட் கலரைக் குறிக்கும். அதனாலதான் இந்த வருஷம் எங்களோட காஸ்ட்யூம்ஸ், மேடை அலங்காரம், பேக்டிராப் எல்லாம் சிவப்பு கலர்.

அமெரிக்கா, துபாய், மும்பைன்னு நிறைய இடங்கள்ல இருந்து ஃப்ரெண்ட்ஸ் வந்திருந்ததால இந்த வருஷம் ரொம்ப ஸ்பெஷலா அமைஞ்சது. ஜாக்கி ஷெராஃப், பூனம் தில்லான் வந்திருந்தாங்க. ஈ.சி.ஆர்ல, பெரிய பீச் ஹவுஸ்ல ஃபங்ஷன் நடந்தது. எல்லாருமே செம ஹேப்பி. மோகன்லால் சார் எங்களுக்காக மேஜிக் பண்ணிக் காட்டினார். ரியலி சூப்பர்ப். எங்க டீம்ல உள்ளவங்க நிறைய பேருக்கு ஆகஸ்ட்லதான் பிறந்த நாள் வருது. சான்ஃபிரான்சிஸ்கோவில இருந்து வந்த ஜெயக்கு ஆகஸ்ட் 10ல பர்த் டே, ஆகஸ்ட் 15 என்னோட பிறந்த நாள், ஆகஸ்ட் 16 அம்பிகா, ஆகஸ்ட் 21 ராதிகா, ஆகஸ்ட் 22 சிரஞ்சீவி, ஆகஸ்ட் 26 சுரேஷ், ஆகஸ்ட் 27 சுமலதான்னு நிறைய பேரோட பிறந்த நாட்கள் வந்ததால, கேக் கட் பண்ணி, கிராண்டா ஒரு பர்த் டே கொண்டாடினோம்.



இந்த மீட் அன்னிக்கு என்னென்ன ஃபுட் இருக்கணும்னு மெனு லிஸ்ட் ரெடி பண்ண ஒரு டீமே இருந்துச்சு. பிரபு, குஷ்பு, பூர்ணிமா, லிஸி இவங்க நாலு பேரும் ஒரு வாரத்துக்கு முன்னாடியே, ஒவ்வொண்ணையும் டேஸ்ட் பார்த்து ஆர்டர் பண்ணினாங்க. கூல் டிரிங்ஸ் கூட ரெட் கலர்ல இருக்கணும்னு ப்ளான் பண்ணினோம். கரோகி செக்மென்ட்ல நானும் மோகன்லாலும் தமிழ், மலையாளப் பாடல்கள் பாடினோம். சுமலதா, ஜாக்கி வெஸ்டர்ன் பாப் ஹிட்ஸ், இந்தி பாடல்கள் பாடினாங்க. டான்ஸ்ல நான், பூர்ணிமா, மேனகான்னு கலக்கினோம். ஜெய, குஷ்புவோட நானும் சேர்ந்து ஃப்ரெஞ்ச் ஸ்டைல்ல டான்ஸ் ஆடினோம். டான்ஸ்ல ஹைலைட் லுங்கி டான்ஸ். லுங்கீஸ்  எல்லாம் குஷ்பு கொண்டு வந்திருந்தாங்க. மிட்நைட் 3 மணி வரை உற்சாகம் ஓயலை. எல்லாருக்குமே புத்துணர்சி கொடுத்த நாள் அது.

ஜாக்கி ஷெராஃப்,  ‘வருஷா வருஷம் இத்தனை பேர் மீட் பண்றீங்க... ஏதாவது சோஷியல் வொர்க் எடுத்து பண்ணலாமே!’னு சொன்னார். நல்ல ஐடியா. இனி எல்லாரும் சேர்ந்து ஏதாவது புதுசா, இன்ட்ரஸ்ட்டிங்கா பண்ணலாம்னு முடிவு பண்ணியிருக்கோம். ‘அடுத்த வருஷம் இதை வெளியூர்ல வைப்போம்... நாங்க எடுத்து நடத்துறோம்’னு சரத்குமாரும், மோகன்லாலும் சொல்லியிருக்காங்க!’’

‘‘கடந்த 5 வருஷமா தொடர்ந்து ரஜினி கலந்துக்கிட்டார். இந்த வருஷம் ஏன் மிஸ்ஸிங்?’’

‘‘ஆமாம். அவரை எல்லாரும் மிஸ் பண்ணினோம். நாங்க இன்வைட் பண்றப்போ ரஜினி சார் ஐதராபாத்ல இருந்தார். ‘எனக்காக ரெட் கலர் ஷர்ட்டும், ஷாலும் எடுத்து வைங்க... கண்டிப்பா கலந்துக்குவேன்’னு சொல்லியிருந்தார். நாங்களும் எடுத்து வச்சிருந்தோம்.  ஆனா, அந்த சட்டைக்கு அந்தக் கொடுப்பினை இல்லாமப் போச்சு. கடைசி நிமிஷத்துல அவருக்கு திடீர்னு உடல்நலமில்லை... வர முடியாத சூழல். ஆனா, கண்டிப்பா அடுத்த வருஷம் வருவார்!’’

- மை.பாரதிராஜா