தண்ணீர், மின்சாரம் போலத்தான் இன்டர்நெட்டும்!



இந்தியாவின் முதல் வைஃபி நகரம்

‘‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால், டெல்லி முழுக்க வைஃபி மூலம் இலவச இன்டர்நெட் வசதி தருவோம்’’ என அறிவித்தார் அரவிந்த் கெஜ்ரிவால். அசுரப் பெரும்பான்மையோடு அவர் முதல்வர் ஆகியும் டெல்லியில் இன்னும் அது நடந்த பாடில்லை. அப்படியெல்லாம் எந்த வாக்குறுதியும் கொடுக்காமலே டெல்லியை முந்திக்கொண்டு இந்தியாவின் முதல் வைஃபி நகரம் ஆகியிருக்கிறது கேரளாவின் மலப்புரம். ‘24 மணி நேரமும் இன்டர்நெட், மாதம் 1 ஜி.பி வரை டவுன்லோடு வசதி’ என அனைத்தையும் மலப்புரம் மக்களுக்கு இலவசமாகத் தந்திருக்கிறது நகராட்சி!

‘‘இப்போ கூகுள் இல்லாமலும் வாட்ஸ்அப் இல்லாமலும் ஒரு வாழ்க்கையை நினைச்சுப் பார்க்க முடியலை சார். உணவு, உடை, இருப்பிடம் மாதிரி இன்டர்நெட்டும் அத்தியாவசியம் ஆகிடுச்சு. குடிமக்களுக்கு தடையில்லாமல் தண்ணீர், மின்சாரம் கிடைக்கச் செய்வது உள்ளாட்சி நிர்வாகத்தின் கடமைதானே? இன்டர்நெட்டும் தருவது விரைவில் கடமை ஆகிடும். அப்படி நினைத்துத்தான் இதையும் செய்தோம்!’’ எனத் துவங்குகிறார் மலப்புரம்   நகராட்சித்    தலைவர்  முகம்மது முஸ்தபா.



கடந்த ஆகஸ்ட் 21 முதல் மலப்புரம் மக்களுக்காக 24 மணி நேர இலவச வைஃபி இணைய சேவை அரசு சார்பாகத் துவங்கப்பட்டிருக்கிறது. இந்தியாவிலேயே முதல்முறையாக இப்படியொரு முயற்சி முன்னெடுக்கப்பட்டதில் முஸ்தபாவின் பங்கு முக்கியமானது. ‘‘இணைய இணைப்புக்காக இந்தியாவில் ஒவ்வொருவரும் மாதம் 200 முதல் 300 ரூபாய் செலவு செய்ய வேண்டியிருக்கிறது. இனி, மலப்புரம் பகுதி மக்களுக்கு அந்த சிரமம் இருக்காது. இங்கே எல்லோருக்கும் இணைய இணைப்பு இலவசம். அவர்கள் மலப்புரம் பகுதியில் வசிப்பவராகவோ, வேலை பார்ப்பவராகவோ இருக்க வேண்டும் என்பதுதான் ஒரே நிபந்தனை. இணைய   இணைப்பு வேண்டுகிறவர்கள் உரிய தகவல்களுடனும் இருப்பிடச் சான்றுடனும் நகராட்சிக்கு விண்ணப்பித்தால் அவர்களுக்கு இலவச வைஃபி பயன்பாட்டுக்கான பாஸ்வேர்டுகளை வழங்குகிறோம். அதன் மூலம் தங்கு தடையின்றி அவர்கள் இணையத்தைப் பயன்படுத்தலாம். மாதம் 1 ஜி.பி வரை டவுன்லோடும் செய்யலாம்!’’ என வழிமுறைகளை விவரிக்கிறார் முகம்மது முஸ்தபா.

இந்த இணைய சேவை, ‘ரயில் டெல்’ என்னும்  மத்திய அரசு நிறுவனத்துடன் இணைந்து  வழங்கப்பட்டிருக்கிறது. இதற்கான ஆண்டுக் கட்டணம் சுமார் 40 லட்சம் ரூபாயை மலப்புரம் நகராட்சியே ஏற்றிருக்கிறது. இந்தத் திட்டத்திற்காக நகரம் முழுவதிலும் வைஃபி சிக்னல் கிடைக்கும் வகையில் இரண்டு டவர்களை அமைத்திருக்கிறார்கள். 15 சக்தி வாய்ந்த ஆன்டெனாக்களைப் பொருத்தியிருக்கிறார்கள். இந்த நிர்மாணச் செலவுகளே ஒன்றரைக் கோடி ரூபாயைத் தாண்டியிருக்கிறது. அதில் மூன்றில்  ஒரு பாகத்தைக் கொடுத்து ஊக்குவித்திருக்கிறது கேரள மாநில அரசு.

 ‘‘இப்போதைக்கு இந்த இணைப்பின் வேகம் 250 kbps  வரை இருக்கும்.  போகப்  போக  வேகத்தை அதிகரிக்க திட்டமிட்டிருக்கிறோம். இந்த நகராட்சி எல்லைக்குள் 68 ஆயிரம் பேர் வசிக்கிறார்கள்.  முதல் ஒரு வாரத்துக்குள்ளாகவே அதில் 10 ஆயிரம் பேர் முறையாக விண்ணப்பித்து இணையத்தைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் 20 ஆயிரம் பேராவது விண்ணப்பிப்பார்கள் என எதிர்பார்க்கிறோம்!’’ என்கிறார் முஸ்தபா



இந்த வைஃபி முயற்சியைப் போலவே இன்னும் பல பெருமைகளைக் கொண்டிருக்கிறது மலப்புரம். வெளிப்படையான மற்றும் துரித சேவையை உறுதி செய்து, இந்தியாவில்  ISO தரச்   சான்றிதழ்  பெற்ற   ஒரே  நகரசபை   மலப்புரம்தான் என்கிறார்கள்.  60   வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு  இலவச உடல்நலப் பரிசோதனை செய்து, மருந்து மற்றும் மாத்திரைகளை  இலவசமாகத் தந்து வரும் நகரசபையும்  மலப்புரம்தான். எல்லாவற்றுக்கும் மேலாக, மலப்புரம் நகரசபை அலுவலகத்தில்  நிலுவையில்  கிடக்கும் கோப்புகள் என்று எதுவும் இல்லையாம். ‘அப்படி  ஏதாவது கோப்புகள் நிலுவையில் இருப்பதாக  சுட்டிக் காட்டுபவர்களுக்கு நகராட்சி நிர்வாகம் பரிசுகள் வழங்கும்!’ என தில்லாக அறிவித்திருக்கிறார்கள். இன்றுவரை அந்தப் பரிசைக் கொள்வாரில்லை. பொதுமக்களிடம் ஏதேனும் புகார்கள் உள்ளதா எனக் கேட்டு நகராட்சி அதிகாரிகளே வீடு வீடாகச் செல்வதும் இந்த ஊரில்தான் நடக்கிறது.

‘‘அதெல்லாம் சரிங்க... ‘இன்டர்நெட்டை எப்படிக் கட்டுப்படுத்தலாம், முடக்கலாம்’ என இந்தியா முழுவதும் அரசியல்வாதிகள் பேசிக் கொண்டிருக்க, அதை இலவசமாக்கும் முயற்சி எப்படி சாத்தியமாச்சு?’’ - கேட்டால் சிரிக்கிறார் முஸ்தபா. ‘‘இணையத்தை எல்லோரும் தவறாகப் பயன்படுத்துவதில்லை. தகவல்கள் தேடவும் வழிகளை அறியவும்தான் அது அதிகம் தேவைப்படுகிறது. பள்ளி, பாடத்  திட்டம்  தொடர்பான   தகவல்களுக்கும் இணையம் அவசியம் தேவைப்படுவதால் நகரில் உள்ள  பள்ளிகளுக்கும்  WiFi  வசதி செய்து தர உத்தேசித்து இருக்கிறோம். இத்தனை நல்ல பயன்பாடுகளுக்கு இடையில் சிலர் தப்பான தளங்களையும் பார்க்கலாம். அதைத் தடுக்க முடியாது. முடிந்தவரை இந்த இணைப்பில் நாங்கள் மோசமான தளங்களுக்காக  சில கட்டுப்பாடுகள் வைத்திருக்கிறோம்.  மக்கள் இந்த இலவச    WiFi   வசதியை  எப்படிப் பயன்படுத்துகிறார்கள் என்பதைக்  கண்காணிக்கும் நடவடிக்கைகளும் உண்டு. எல்லாவற்றையும் தாண்டி சுய ஒழுக்கம்தான் இதற்கு தீர்வே தவிர, சட்ட திட்டம் அல்ல!’’ என்கிறார் அவர் ஒரே போடாக!

"இணைய இணைப்பு வேண்டுகிறவர்கள் உரிய தகவல்களுடனும் இருப்பிடச் சான்றுடனும் நகராட்சிக்கு விண்ணப்பித்தால்  அவர்களுக்கு இலவச வைஃபி பயன்பாட்டுக்கான பாஸ்வேர்டுகளை வழங்குகிறோம்."

- பிஸ்மி பரிணாமன்