சூரிய நமஸ்காரம் - எனர்ஜி தொடர்



ஏயெம்

மிக ஆர்வமாக பலரும் எதிர்பார்க்கும் சூரிய நமஸ்காரத்தின் கடைசி இரண்டு நிலைகளை இப்போது பார்க்கப் போகிறோம். நாம் கடைசியாகப் பார்த்த நிலை, அதோமுக ஸ்வானாசனம். கவிழ்த்துப் போட்ட ‘வி’ போன்ற அந்த நிலையிலிருந்து மூச்சை வெளியே விட்டுக்கொண்டே அடைய வேண்டும். அடுத்த நிலை, ஊர்த்துவ முக ஸ்வானாசனம். இதில்...

* அதோ முக ஸ்வானாசன நிலையிலிருந்து மூச்சை உள்ளிழுத்தபடியே இடுப்புப் பகுதியைக் கீழிறக்கி, மார்புப் பகுதியை பின்புறமாக வளைத்து நேராகப் பார்க்க வேண்டும்.

* இந்த நிலையில் இடுப்பு நன்கு கீழிறங்கி, மார்பு நன்கு பின்புறம் வளைந்து இருக்கும். இந்த நிலையை நன்கு செய்வதற்கு முதுகின் வளைவுத்தன்மை உதவும்.

* கைகள் மற்றும் கால்கள் இரண்டும் நீண்டிருக்க வேண்டும்.

* பார்வை நேராக இருக்கும். கண்கள் திறந்திருக்கும்; முகவாய்ப் பகுதி நன்கு கழுத்துப் பகுதியில் அழுந்தியிருக்கும். இதை ஜாலந்திர பந்தம் என்பார்கள்.

* இரு கால்களும் ஒன்றாக இருக்கும். கால் விரல்களும் உள்ளங்கைகளும் மட்டும் தரையில் பட்டுக்கொண்டிருக்கும். உடலின் எடை கைகளிலும் கால் விரல்களிலும் இருக்கும்.



இந்த நிலையில் பார்வை நேராக இருக்க வேண்டும். ஆனால் பலரும் முதுகை நன்கு பின்புறம் வளைத்து, மேலே பார்க்கும் ஒரு பரவலாகிவிட்ட முறையைச் செய்வர். இதில் வளைந்து மேலே பார்ப்பது ஓர் அனுபவம் என்றும் சிலர் சொல்வர். சிலர் இந்த நிலையில் ஒரு காலை மேல்புறமாகத் தூக்கி எடையைக் கூடுதலாக கைகளுக்குக் கொண்டு செல்ல முயற்சிப்பதும் உண்டு. இது கைகளைப் பலப்படுத்தவும் கவனம் கூட்டவும் உதவும். சிலர் முட்டியைத் தரையில் வைத்துவிடுவார்கள், கால் விரல்களைத் தரையில் ஊன்ற முடியாமல், பாதங்களை தரையில் வைத்துவிடுவார்கள். ஆரம்ப கட்டத்தில் இதைத் தவிர்ப்பது சிரமமாக இருந்தாலும், இதைத் தவிர்க்க வேண்டும்.

சூரிய நமஸ்காரத்தில் திருகிச் செய்யும் (twist) நிலை இல்லை என்பதாலோ என்னவோ, ஒரு யோகா மரபானது இந்த ஊர்த்துவ முக ஸ்வானாசன நிலையில் ஒரு பக்கமாகத் திரும்பி, மேல் உடலைத் திருகுவதை ஏற்படுத்தி உள்ளது. அனுபவம் வாய்ந்த யோகா ஆசிரியர்கள், கூடுதல் பலனுக்காக அல்லது ஒரு குறிப்பிட்ட பலனுக்காக சில மாற்றங்களைச் செய்வர். அது முற்றிலும் புதியதாக இருக்கும். கைகளை வலுவாக்கவும், முதுகை சீராக்கவும், நுரையீரல் பகுதியில் ஆரோக்கியம் கூடவும் உரிய முறையில் இந்த நிலையை இப்படி மாற்றிப் பயன்படுத்துவது உண்டு. ஊர்த்துவ முக ஸ்வானாசனத்திலிருந்து இப்போது...

* மூச்சை வெளியே விட்டபடி மார்புப் பகுதியை முன்புறமாகக் கொண்டு(வளைந்ததை நேராக்கி) சென்று தரையில் வைக்க வேண்டும்.
* இரு கைகளையும் இணைத்து, நமஸ்கார நிலைக்கு வரவேண்டும்.
*  உள்ளங்கைகள் இரண்டையும் சேர்த்து நமஸ்காரம் செய்யவேண்டும்.



நிறைய பேர் இந்த நிலையில் நமஸ்காரம் செய்ய கைகளைச் சேர்க்காமல், உடலை மட்டும் தரையில் இருக்கும்படி செய்து, சில வினாடிகளுக்குப் பிறகு அடுத்த நிலைக்குப் போய்விடுவார்கள்.  நாங்கள் பின்பற்றும் யோக மரபில் இந்த நமஸ்கார நிலைக்குப் பதிலாக சதுரங்க தண்டாசனம் என்ற ஒரு நிலையைச் செய்வதுண்டு. இதில் இரு உள்ளங்கைகளும் கால் விரல்களும் மட்டும் தரையில் இருக்கும். நிறைய பேர் செய்ய விரும்பும் நிலை இது. கை பலத்திலும், வயிற்று பலத்திலும் சாத்தியமாகக் கூடியது. வலிமை கூட்டுவதற்காக சிலர் இதில் சில மூச்சுகள் இருப்பதுண்டு. இன்னும் வலிமையாய் செய்யவேண்டும் என்றால், இந்த நிலையில் இருந்தபடியே, கால்களை மட்டும் சேர்ந்தாற்போல் இடுப்புப்பகுதி வரை தூக்கித் தூக்கி, இடது - வலது என்று பக்கவாட்டில் குதிப்பது போல வைத்து செய்யலாம்.
நாம் பார்த்த அஷ்டாங்க யோகாவில் பல நிலைகள் இந்த சதுரங்க தண்டாசனத்தில் முடியும். ஓர் உதாரணம்: தலையை கீழ் வைத்து முழு உடலையும் மேல் நிறுத்தும் சிரசாசனம் மற்றும் சர்வாங்காசனா போன்றவற்றிலிருந்து நேராக இந்த நிலைக்கு வருவர். வருவதோடு மட்டுமல்லாமல், சதுரங்க தண்டாசனத்தில் உடலைத் திறமாக நிறுத்துவர். இதில் பி.கே.எஸ். ஐயங்கார் அவர்கள் செய்த பயிற்சிகள் பிரபலமானவை. பல நாட்டினரும் யோகாவை நாடி வருவதற்கு, அவர் இந்த மாதிரியான ஆசனங்களை லாவகமாகச் செய்து வியக்க வைத்ததும் ஒரு காரணம்.

சில யோக மரபுகளில் இந்த நிலையை அஷ்டாங்க நமஸ்காரம் என்று சொல்லுவதுண்டு. அதாவது உடலின் எட்டு பகுதிகளும் தரையில் படும்படி இந்த நமஸ்காரம் இருக்கவேண்டும் என்பார்கள். நாம் இப்போது சூரிய நமஸ்காரத்தை இடது காலில் தொடங்கி, ஒவ்வொரு நிலையாகப் பார்த்து இறுதி நிலையான நமஸ்கார நிலைக்கு வந்துள்ளோம். இதிலிருந்து ஒவ்வொரு நிலையாக வந்த வழியே பின்னோக்கி மெல்ல மூச்சுடன் சென்று வலது காலில் முடிக்கப் போகிறோம். பிறகு வலது காலில் தொடங்கி நமஸ்கார நிலையை அடைந்து, இடது காலுடன் முடிக்கவேண்டும். இந்த இரண்டும் சேர்ந்து ஒரு சுற்று ஆகும்.

இடது காலில் தொடங்கி இடது காலில் முடிப்பது, வலது காலில் தொடங்கி வலது காலில் முடிப்பது என்றும் செய்வதுண்டு. ‘‘இது எளிதாகச் செய்யவும், குழப்பத்தைத் தவிர்ப்பதற்காகவும்’’ என்பார் எனது ஆசிரியர். இப்போது நமஸ்கார நிலையிலிருந்து, எப்படிப் பின்னோக்கிப் போய் வலது காலோடு முடிப்பது என்று பார்க்கலாம்... அந்த நமஸ்கார நிலையிலிருந்து ஓரிரு வினாடிகளுக்குப் பின், மூச்சை உள்ளிழுத்தபடி, இதற்கு முந்தைய நிலையான ஊர்த்துவ முக ஸ்வானாசன நிலையை அடையவும். அதாவது மார்பை பின்புறமாக வைத்து உடல் எடையைக் கைகளிலும் கால் விரல்களிலும் கொண்டு வந்து நேராகப் பார்க்கவும். பிறகு அதோ முகஸ்வானாசன நிலைக்கு - அதாவது இடுப்பை மேல்பக்கமாக உயர்த்தி, தலையை தரையைத் தொடச் செய்து, பாதங்களை நன்கு தரையில் படியச் செய்து அடைய வேண்டும். இந்த நிலையில் கால்-கைகள் நீண்டு இருக்கும்.

அதன்பின் வலது காலை மடித்து இரு கைகளுக்கு இடையில் ஒரே வரிசையில் இருக்கும்படி வைக்கவும். இந்த நிலையில் மார்பு பின்புறமாக வளைந்து, மேலே பார்ப்பீர்கள். அந்த நிலையிலிருந்து உத்தானாசன நிலைக்கு - அதாவது, இடது காலை முன்பக்கமாகக் கொண்டு வந்து வலது காலை ஒட்டியபடி, இடது கைக்கு அருகில் வைக்க வேண்டும். ஓரிரு வினாடிகளுக்குப் பிறகு மூச்சை உள்ளிழுத்தபடி இரு கைகளையும், கால்களுக்கு ஒட்டிய இடத்திலிருந்து, முதலில் முன்புறமாக நகர்த்தி, பிறகு அதனோடு மேலுடலையும் சேர்த்து உடலை நேராக நிமிர்த்தி, கைகளை தலைக்கு மேலே கொண்டு வந்து, உடல் நேராக நிற்கும் நிலையில் ஓரிரு வினாடிகள் இருக்கவும்.  சில வினாடிகளுக்குப் பிறகு இரு கைகளையும் மூச்சை வெளியே விட்டபடி முன்புறமாகக் கீழே இறக்கி பாதிச் சுற்றை முடிக்கவும். இதே மாதிரி வலது காலுடன் தொடங்கி அத்தனை நிலைகளையும் செய்து இடது காலுடன் முடிக்கும்போது, சூரிய நமஸ்காரம் ஒரு சுற்று நிறைவு பெறும்.

இவ்வாறு சூரிய நமஸ்காரத்தை தேவையான சுற்றுக்கள் செய்து முடித்ததும், சிறிது நேரம் ஓய்வு எடுக்கலாம்... நின்றோ, உட்கார்ந்தோ அல்லது படுத்தோ உங்கள் வசதிக்கு ஏற்ப! பின் வேறு ஆசனங்களைச் செய்யத் தொடங்கலாம். அல்லது பிராணாயாமம் செய்யலாம். ஒரு கடும் பயிற்சிக்கு இந்த நமஸ்காரப் பயிற்சியை முன் தயாரிப்பாகவும் கொள்ளலாம். சூரிய நமஸ்காரத்தின் பலன்களைப் படித்த பின், பலர் நிச்சயமாக ஆச்சரியப்பட்டிருப்பீர்கள். காரணம், குறுகிய நேரத்தில் இவ்வாறு பல நிலைகளில் வேலை செய்து, நிறைய பலன்களைத் தரும் வேறு ஒரு பயிற்சி இருப்பதாகத் தெரியவில்லை. நிறைய பேருக்கு சூரிய நமஸ்காரம் செய்யும் ஆசை இப்போது தானாக வந்திருக்கும். அப்படியானால் சூரிய நமஸ்காரத்தை யார் வேண்டுமானாலும் செய்யலாமா? குறிப்பாக உடல் - மன அளவில் பாதிப்புக்குள்ளானவர்கள் பயிற்சியில் இறங்கலாமா? இதற்கான விடைகளைத் தேடுவோம்!

(உயர்வோம்...)
படங்கள்: புதூர் சரவணன்
மாடல்: கஸ்தூரி கோஸ்வாமி