கள்ளை மது என்று நிரூபித்தால் 10 கோடி ரூபாய் பரிசு!



டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு எதிரான போராட்டம் கொழுந்து விட்டு எரிகிறது. பெண்கள் தன்னெழுச்சியாக கடைகளுக்குள் புகுந்து அடித்து நொறுக்குகிறார்கள். இந்தச் சூழலில், தமிழக கள் இயக்கம் ‘டாஸ்மாக் மதுக்கடைகளை மூடிவிட்டு கள் விற்பனைக்கு அனுமதி அளிக்கவேண்டும்’ என்று போராட்டக் களத்தில் குதித்திருக்கிறது. ‘டாஸ்மாக் மது, இறக்குமதி மது வகைகளை விட கள் தீமையானது என்று நிரூபித்தால் 10 கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும்’ என்றும் தடாலடியாக அறிவித்திருக்கிறது அந்த அமைப்பு.

பூரண மதுவிலக்கு கோரி அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் போராடி வரும் நிலையில் கள் விற்பனையை அனுமதிக்க வேண்டும் என்று குரல் கொடுப்பது மக்களின் கவனத்தை திசை திருப்பாதா? தமிழக கள் இயக்க கள ஒருங்கிணைப்பாளர் நல்லசாமியிடம் கேட்டோம்.
‘‘முதலில் நம் மக்களும், அரசியல்வாதிகளும் ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ளவேண்டும். கள் என்பது டாஸ்மாக் மதுவைப் போல ஒரு போதை வஸ்து அல்ல. தாய்ப்பாலுக்கு இணையாக சத்துக்கள் அடங்கிய ஒரு இயற்கை பானம். டாஸ்மாக் மதுவில் 42.8% ஆல்கஹால் இருக்கிறது. கள்ளில் வெறும் 4.5% மட்டுமே இருக்கிறது. பழையசோறு, தேன், தயிர், மோர், பழச்சாறு என புளிக்கும் எல்லா உணவுகளிலும் ஆல்கஹால் உண்டுதான். ‘பழைய சோறில் மோர் ஊற்றி சாப்பிட்டு விட்டு வாகனம் ஓட்டாதே’ என்று கிராமங்களில் பெரியவர்கள் சொல்லக் கேட்கலாம். காரணம், தலை சுற்றும்.



கள் விற்பனையை அனுமதிக்க வேண்டும் என்று கேட்பதால் எங்களை மதுவுக்கு ஆதரவானவர்களாகக் கருதக்கூடாது. முழுமையான மதுவிலக்குதான் எங்கள் கொள்கை. ஆனால் கள் என்பது மதுவே அல்ல. விவசாயம் பொய்த்து, வாழ்வாதாரம் இல்லாமல் தவிக்கும் விவசாயிகளுக்கு ஒரு மாற்று வழி கள் இறக்குவதுதான். சுதந்திரத்துக்கு முன், தமிழகத்தில் 50 கோடி பனை, தென்னை மரங்கள் இருந்தன. கள், கருப்பட்டி என கிராமப் பொருளாதாரம் வலுவாக இருந்தது. மது மாபியாக்களின் தலையெடுப்பு மற்றும் அரசியல் சூழ்ச்சிகள் காரணமாக தென்னை, பனை மர வாழ்வாதாரம் நசுக்கப்பட்டது. இப்போது 5 கோடி தென்னை மரங்களும், நான்கரை கோடி பனை மரங்களுமே தமிழகத்தில் மிஞ்சி இருக்கின்றன.

அளவு கடந்த ஆல்கஹாலை கலந்து மெல்லக் கொல்லும் விஷத்தைப் போன்ற மதுவை அரசே விற்பனை செய்து கொண்டிருக்கும் நிலையில், கள் விற்பனையை அரசு ஏன் தடுக்க வேண்டும்? 2005ம் ஆண்டில், ‘கள்ளுக்கு ஏன் தடை விதிக்கப்பட்டுள்ளது?’ என்று தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி அரசிடம் கேட்டேன். ‘பனைமரத்தில் இருந்து கள் இறக்கப்பட்ட பிறகு, குளோரோ ஹைட்ரேட் என்ற ஆபத்தான ரசாயனத்தைக் கலந்து விற்பனை செய்கிறார்கள். ஒவ்வொரு பனைமரமும் ஒவ்வொரு உற்பத்திச்சாலை என்பதால் இதை கண்காணிப்பது நடைமுறையில் சாத்தியமில்லை. ஆனால் மதுவைப் பொறுத்தவரை 9 நிறுவனங்கள்தான் தயாரித்து சப்ளை செய்கின்றன. அவர்களைக் கண்காணிப்பது எளிது. அதனால் கள்ளுக்குத் தடை; மதுவுக்கு அனுமதி’ என்று பதில் தந்தார்கள். என்றால், கள் இறக்கி விற்பதில் கொள்கை ரீதியாக அரசுக்கு முரண்பாடு இல்லை. அதில் போதை மாத்திரைகள் கலப்பதைத் தடுக்க முடியாது என்பதால்தான் தடை செய்து வைத்திருக்கிறார்கள். சகல அதிகாரங்களும் பொருந்திய ஒரு அரசு இப்படிச் சொல்வது அதன் கையாலாகத்தனத்தை அல்லவா காட்டுகிறது! உலகெங்கும் 108 நாடுகளில் கள் பயன்பாட்டில் இருக்கிறது. இந்தியாவில் தமிழகத்தைச் சுற்றியிருக்கும் எல்லா மாநிலங்களிலும் கள் உண்டு. கேரளா, பாண்டிச்சேரி மாநிலங்களில் அது கலாச்சார பானம். ஆனால் தமிழகத்தில் மட்டும் தடை. சங்க காலத்தில் இருந்து தமிழர்கள் வாழ்க்கையில் கலந்திருந்த பானம், கள்.

சிலரது சுய லாபத்துக்காக அதைத் தடுப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.  கள் என்பது தாய்ப்பாலுக்கு நிகரானது என்பதை எங்களால் ஆதாரபூர்வமாக நிரூபிக்க முடியும். சத்துணவில் மாணவர்களுக்கு கள்ளை ஊட்டச்சத்து பானமாக தரலாம். கள்ளையும், மதுவையும் ஒப்பிடுவது, பசுவையும், பன்றியையும் ஒப்பிடுவதற்குச் சமம். மதுவைக் கொட்டினால் ஈ, எறும்பு, பூச்சிகள் வரும். மதுவைக் கொட்டினால் அந்த இடத்தில் இருக்கும் நுண்ணுயிரிகள் கூட செத்துப்போகும். மதுவால் அரசியல்வாதிகளுக்கு மட்டுமே லாபம். கள் இறக்க அனுமதித்தால் 10 லட்சம் பனைத் தொழிலாளிகளும், 50 லட்சம் விவசாயிகளும் பயன்பெறுவார்கள்.

ஒரு காலத்தில் இனிப்புச் சுவைக்கு பயன்பட்டது கருப்பட்டிதான். இன்று வெள்ளைச் சர்க்கரை கருப்பட்டியைத் தின்று விட்டது. கருப்பட்டி என்பது மருந்து. வெள்ளைச் சர்க்கரை மெல்லக் கொல்லும் விஷம். கள் இறக்க அனுமதி தந்தால் கருப்பட்டி உற்பத்தியை அதிகரிக்லாம்.
அரசு மனது வைத்தால் கள் வணிகத்தை மிகச்சிறப்பாகச் செய்யலாம். பாரம்பரியமாக கலயத்தில் இறக்குவது போல செய்யாமல் ஐஸ் பெட்டிகளில் பாதுகாப்பாக இறக்கி பாட்டிலில் அடைத்து ஏற்றுமதி செய்யலாம். கடந்த 10 ஆண்டுகளாக கள் இறக்கும் உரிமை கேட்டுப் போராடி ஓய்ந்து விட்டோம். இனிமேலும் அமைதியாக இருந்து பயனில்லை. ஜனவரி 21ம் தேதிக்குள் அரசு அனுமதி தரவேண்டும். தராவிட்டால், மாநிலமெங்கும் தடையை மீறி கள் இறக்கி வியாபாரம் செய்வோம். எங்களுடைய கோரிக்கைகளில் நியாயம் இல்லையென்றோ, கள் ஒரு போதைப்பொருள் என்றோ நிரூபித்தால் 10 கோடி ரூபாய் பரிசு தர நாங்கள் தயாராக இருக்கிறோம்...’’ என்கிறார் ஆவேசமாக.

"மதுவால் அரசியல்வாதிகளுக்கு மட்டுமே  லாபம். கள் இறக்க அனுமதித்தால் 10 லட்சம் பனைத் தொழிலாளிகளும், 50 லட்சம்  விவசாயிகளும் பயன்பெறுவார்கள்."

"ஒரு அரசு இப்படிச் சொல்வது அதன் கையாலாகத்தனத்தை அல்லவா காட்டுகிறது!"

- வெ.நீலகண்டன்