விஜய்யை வியக்க வைத்த ஸ்ரீதேவி



இந்த வருட தீபாவளி விஜய்யின் ரசிகர்களுக்கு மட்டும் அட்வான்ஸாக வந்துவிடுகிறது. அக்டோபர் முதல் தேதி ‘புலி’ ரிலீஸ்! ‘‘ஒரு ஒளிப்பதிவாளரா என் சினிமா கேரியர்ல ‘புலி’ மறக்க முடியாத படம். இப்படி ஒரு படத்துல நான் இருக்க காரணமா இருந்த விஜய் சாருக்கு என்னோட ஸ்பெஷல் தேங்க்ஸ்..!’’ என சிரம் தாழ்த்துகிறார் நட்டி என்கிற நட்ராஜ் சுப்ரமணியம். ஜெமினி லேப்பில் அவர் ‘புலி’யை செதுக்கிக் கொண்டிருந்தபோது ஒரு சின்ன சந்திப்புக்கு வாய்ப்பிருந்தது!



‘‘எப்படி வந்திருக்கு படம்..?’’


‘‘மிக அருமையா! ஆடியோ ஃபங்ஷன்ல விஜய் சார், ‘‘ ‘சதுரங்க வேட்டை’யாடிய நட்டி சார், இப்போ ‘புலி’ வேட்டையாடியிருக்கார்’னு சொன்னதை ரொம்பப் பெருமையா நினைக்கறேன். கண்டிப்பா படம், ஒரு விஷுவல் ட்ரீட்டா இருக்கும். விஜய் சார் மாதிரியே இயக்குநர் சிம்புதேவன் சாரும் எனக்கு முழு சுதந்திரம் கொடுத்தார். ‘இது ஒரு ஃபேன்டஸி ஆக்‌ஷன் சாகசம். போரும் காதலும் கலந்த கதைன்னு சிம்புதேவனே சொல்லியிருக்கார். படத்துல விஜய் சாருக்கு அடுத்து நான் பிரமிச்சது, தயாரிப்பாளர்கள் பி.டி.செல்வக்குமார் சாரையும் சிபு தமீன்ஸ் சாரையும் பார்த்துதான். ஷூட்டிங்னாலே எல்லாரும் ஒரு தளத்துல செட் போட்டு படம் பண்ணுவாங்க. ஆனா இவங்க அரண்மனை செட்டுக்காக மிகப்பெரிய மைதானத்துல ஒரு ஃப்ளோரையே ரெடி பண்ணிட்டாங்க. 600 ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்கள், கார்பென்டர்கள், லைட்மேன்னு ஒருநாள் ஷூட்டிங்ல குறைஞ்சது ஆயிரம் பேருக்கு மேல வேலை இருக்கும். ஆர்ட் டைரக்டர் முத்துராஜ் சாரோட செட் வொர்க் எல்லாம் எக்ஸலன்ட்டா வந்திருக்கு. ஒரு குதிரையை அலங்கரிக்கவே ஒரு லட்சம் செலவு. ஒரு ஃப்ரேம்ல பத்து குதிரை இருந்தா, பத்து லட்ச ரூபாய் குதிரைக்கே ஆகும். அப்படி பணத்தைக் கொட்டியிருக்காங்க தயாரிப்பாளர்கள். மொத்த படமும் ஷூட்டிங் முடிஞ்சு பார்த்தா, பிரமாதமா வந்திருக்கு!’’

‘‘என்ன சொல்றார் விஜய்?’’

‘‘விஜய் சார் அவ்வளவு எனர்ஜியானவர். அவரோட சின்னதொரு ஸ்மைல் மட்டுமில்ல... செட்ல அவர் சைலன்ட்டா இருந்தா கூட அதுவும் எனர்ஜியாகத்தான் இருக்கும். மேன்லியான ஹேண்ட்சம் லுக் ஹீரோ. நட்புக்கு மரியாதை கொடுக்கறதில அவரை மாதிரி இன்னொருத்தரை நான் பார்த்ததில்லை. ஆந்திரா பக்கம் ஒரு மலை மேல ஷூட்டிங். ஒதுங்குறதுக்கு நிழல் கூட இல்லாத ஸ்பாட். பாறை மீது வெயில் பட்டு தகதகன்னு கொதிக்குது. ஷாட் பிரேக்ல கையில சின்னதா ஒரு குடையோட, அந்த கனமான காஸ்ட்யூம்ஸைப் போட்டுட்டு உட்கார்ந்திட்டு இருந்தார். ‘வெயில் ஓவரா இருக்கு.. சீக்கிரம் ஷாட்டை முடிங்க’ன்னு அவர் சொல்லியிருக்கலாம். ஆனா, எதுவும் சொல்லாம பொறுமை காத்தார்.



தாய்லாந்து போனப்போ ஒரு மார்ஷல் ஆர்ட் ஸ்பாட். நாங்க்னு ஒரு மாஸ்டர்... வாள் சுழற்றுற ஒரு ரிஸ்க்கான மூவ்மென்ட்டை விஜய் சார்கிட்ட சொல்றார். அதாவது, முதுகை அப்படியே பின் நோக்கி வளைச்சு வாளால தரையைத் தொட்டு பேலன்ஸ் பண்ற ஸ்டெப். பிராக்டீஸ் இல்லாம அதை செய்யறது மிகப் பெரிய ரிஸ்க். ஆனா, விஜய் சார் அதை ஒரே ஒரு தடவை பார்த்துட்டு, ‘டேக் போகலாம்’னு ரெடியாகிட்டார். ஒரே டேக்ல அதை அவர் செய்து காட்டினதும், அந்த மாஸ்டர் திகைச்சுப் போயிட்டார்.

இன்னொரு சம்பவம்... கேரளாவில் ஒரு இடத்தில 20 நாள் ஷூட்டிங். அங்க சாதாரண ஹோட்டல்தான் இருந்தது. அங்கேயே விஜய் சாரும் தங்கினார். ஒரு நாள் ரூம்ல இருந்தப்போ, ‘வாங்க வெளியே அப்படியே அந்த ஆறு வரை நடந்து போயிட்டு வருவோம்’னு கூப்பிட்டார். அவரோட நானும் ஃப்ரெண்ட்ஸ் சிலரும் சேர்ந்து கிளம்பினோம். சின்ன டவலை முகத்தில் சுத்தி மறைச்சிக்கிட்டு வந்த விஜய் சார் எங்களோட சேர்ந்து ரோட்டுக் கடையில டீ கூட குடிச்சார். ஆத்துப் பக்கம் போனா, லைட்மேன்கள் குளிச்சிட்டு இருந்தாங்க. ‘நாங்களும் உங்களோட குளிக்க வரலாமா?’னு கேட்டுக்கிட்டே டவலை விலக்கி முகத்தைக் காட்டினார் விஜய். அந்தப் பரவசத்தைச் சொல்ல வார்த்தைகளே இல்லை. ஷூட்டிங் நடக்கறதைக் கேள்விப்பட்டு விஜய் சாரோட கேரள ரசிகர்கள் தினம் தினம் ஆயிரக்கணக்குல வந்து ஸ்பாட்ல குவிஞ்சிடுவாங்க. முகத்துல மாறாத சிரிப்போட, அத்தனை பேர்கூடவும் நின்னு போட்டோவுக்கு போஸ் கொடுப்பார்! அவர் நல்ல மனிதர்... ரொம்ப நல்ல நண்பர்!’’



‘‘ஸ்ரீதேவி...’’

‘‘ஸ்ரீதேவி மேம் வொர்க் பண்ற படத்துல நானும் வொர்க் பண்ணுவேன்னு கனவுல கூட நினைச்சதில்ல. இந்தியில நான் ஒளிப்பதிவு பண்ணின படங்கள் எல்லாம் தெரிஞ்சு வச்சிருக்காங்க. ‘பிளாக் ஃப்ரைடே’ படம் ரொம்பப் பிடிச்சிருந்ததுன்னு சொன்னாங்க. ஸ்ரீதேவி மேம், சுதீப் சார் ரெண்டு பேருமே படத்தில் ரொம்ப ஹார்டு வொர்க் பண்ணியிருக்காங்க. அவங்களோட காஸ்ட்யூம்ஸ் எல்லாம் எடை அதிகம். ஸ்ரீதேவி மேம் காலையில 8 மணிக்கு ஸ்பாட்டுக்கு வரணும்னா, அதிகாலை மூன்றரை மணிக்கே ரெடியாகணும். அவங்களுக்கான மேக்கப், உடைகள், ஆபரணங்கள்னு எல்லாத்துக்கும் அவ்வளவு நேரம் ஆகும். ஒவ்வொரு காஸ்ட்யூம் சேஞ்சுக்குமே அதே அளவு நேரம் பிடிக்கும். அப்படிப்பட்ட கெட்டப்ல அவங்க மகாராணியா ராஜநடை போட்டு நடந்து வர்ற சீன் கலக்கலா வந்தது. அப்போ ஸ்பாட்ல விஜய் சாரும் இருந்தார். செம மிடுக்கா, ஸ்டைலிஷா நிஜ மகாராணி மாதிரியே அவங்க நடந்து வந்த கம்பீரத்தைப் பார்த்து விஜய் சாரே வியப்பில் உறைஞ்சுட்டார்!’’

‘‘ ‘சதுரங்கவேட்டை’க்குப் பிறகு நீங்க ஹீரோவா பண்ணுவீங்கன்னு எதிர்பார்த்தால், கேமரா பக்கம் போயிட்டீங்க!’’

‘‘ஆமாம். ‘புலி’யை முடிச்சிட்டு அதே ஸ்பீடுல ஹீரோவா ஒரு படம் நடிச்சு முடிச்சிட்டேன். படத்தோட பெயர் ‘எங்கிட்ட மோதாதே’. ஆர்.சுந்தர்ராஜன் சார்கிட்ட இந்தப் படத்தோட கதையைச் சொல்லி டைட்டிலை கேட்டப்போ, ‘பொருத்தமான டைட்டில்யா’ன்னு வாழ்த்தி கொடுத்தார். ஈராஸ் நிறுவனம் தயாரிக்கிறாங்க. ராமுசெல்லப்பான்னு அறிமுக இயக்குநர் டைரக்ட் பண்றார். சஞ்சிதா ஷெட்டி, பார்வதி நாயர் ஹீரோயின்கள். ‘கப்பல்’ படத்தோட இசையமைப்பாளர் நடராஜன் சங்கரன் இசை, ‘சலீம்’ கணேஷ் ஒளிப்பதிவு. திருநெல்வேலிக்கு போய் ஒரே ஷெட்யூலா முழுப் படத்தையும் முடிச்சிட்டு வந்துட்டோம். டப்பிங் வொர்க் போய்க்கிட்டு இருக்கு. ‘சதுரங்க வேட்டை’யோட பேரைக் காப்பாத்தும்னு நம்புறேன். இதை முடிச்சிட்டு அடுத்து ஒரு தெலுங்குப் படத்துக்கு ஒளிப்பதிவு பண்ணப் போறேன்!’’

‘‘ஒரு படம் கேமரா... ஒரு படம் ஹீரோ... இதுதான் ப்ளானா?’


‘‘அப்படியெல்லாம் இல்லீங்க. இண்டஸ்ட்ரில நான் சம்பாதிச்ச சொத்துன்னு பெருமையா சொல்லிக்கறது என் நண்பர்களைத்தான். நண்பர்கள் கேட்டுக்கிட்டதால மறுபடியும் கேமரா பண்ண வேண்டியதாச்சு. நண்பர்கள் கேட்டால் எதையும் பண்ணுவேன். வர்ற 2016ல நான் ஹீரோவா நடிச்சு நாலு படங்கள் ரிலீஸ் ஆகி, அது என்னோட வருஷமா இருக்கும்னு நம்புறேன்!’’

‘‘ஒளிப்பதிவாளரா சொல்லுங்க... ‘புலி’யை ‘பாகுபலி’யோடு ஒப்பிடலாமா?’’

‘‘ஒரு விஷயம் சொல்றேன்... டெக்னிக்கல், சி.ஜினு அவங்களோட நாமளும் நேர்க்கோட்டுல நிக்கலாம். ஆனா, அதோட பட்ஜெட் ரொம்பப் பெருசு. 3 வருஷத்துக்கு மேலா உருவான படம் அது. இந்தப் படம் மொத்தமே 150 நாட்கள்ல முடிச்சிருக்கோம். ஒரு எபிக் கிளாசிக்கோட இதை கம்பேர் பண்ணக் கூடாது. ஆனா, இந்தப் படமும் விஷுவல் ட்ரீட்ல மிரட்டும்னு உறுதியா சொல்ல முடியும்!’’

- மை.பாரதிராஜா