coffee with பாம்பு



விநோத ரஸ மஞ்சரி

‘பாம்பு காபி ஷாப்’ இதை டோக்கியோவில் திறந்திருக்கிறார்கள் என்று சொன்னால், ஏதோ பாம்பைத்தான் நசுக்கிப் போட்டு காபி கலந்திருப்பார்களோ என்று சந்தேகம் வரும். ஆனால், இது வேறு வகை. நட்சத்திர பார்களில் வசீகரிக்கும் ஆடல் மகளிர் போலவே இங்கு டேபிளுக்கு டேபிள் ஒரு கண்ணாடிப் பெட்டியில் பாம்புகள் இருக்கும். அதைத் தொட்டுத் தூக்கி விளையாடியபடி நீங்கள் காபியைப் பருகலாம். காபிக்கு தனி பில்; பாம்பு விளையாட்டுக்கும் எக்ஸ்ட்ரா பில்!



‘‘நான் ஒரு இயற்கை ஆர்வலன். பாம்புகள் என்றாலே மோசமானவை என மக்களுக்கு இருக்கும் பொதுப்புத்தியை மாற்றத்தான் இப்படியொரு கபே துவங்கினேன்!’’ என்கிறார் ஹிசாமிட்சு கனேகு. தனது காபி ஷாப்புக்கு ‘டோக்கியோ ஸ்நேக் சென்டர்’ (கவனிக்கவும், ஸ்நாக் அல்ல) என்றே பெயரிட்டிருக்கிறார் இந்த மனிதர். வாடிக்கையாளர்களோடு உறவாட மொத்தம் இங்கே 35 பாம்புகளை வளர்க்கிறார் கனேகு. அனைத்துமே விஷமற்ற பாம்பு வகைகள். சுலபத்தில் யாரையும் கடிக்காது; கடித்தாலும் அப்படி ஒன்றும் ஆபத்தில்லை. இந்தப் பாம்புகள்தான் அங்கே வாடிக்கையாளர் சேவை செய்யும் பணியாள். அட்டெண்டன்ட்ஸ் என்றே அவற்றை அன்போடு அழைக்கிறார்கள் அனைவரும்.

காபியை ஆர்டர் செய்கிறவர்கள், டேபிளில் இருக்கும் பாம்பைப் பார்த்து ரசித்துக்கொண்டே தனது ‘சிப்’பை உறிஞ்சலாம். பாம்பு பற்றிய தகவல்களைப் படித்தறியலாம். தைரியமும் பணமும் இருந்தால் பாம்பை கையில் எடுத்து செல்லமும் கொஞ்சலாம். பெரும்பாலும் கார்ன் ஸ்நேக் எனப்படும் வளர்ப்புப் பாம்பு வகைகளே பல வண்ணங்களில் செயற்கை பிரீடிங் செய்யப்பட்டு இங்கே வைக்கப்பட்டுள்ளன. பல்வேறு கலர் காம்பினேஷன்களில் கலக்கும் இவற்றோடு பழகவும் செல்ஃபி எடுத்துக்கொள்ளவும் இளைஞர்கள் இங்கே படையெடுத்து வருகிறார்களாம். இந்தப் படை இந்தப் பாம்புக்கு அஞ்சாது போல!

- ரெமோ