அழியாத கோலங்கள்



சாருஹாசன்/ஓவியங்கள்: மனோகர்

ஆங்கில ஆட்சி பற்றி பேசியவன், அவர்கள் மண்ணில் நான் காலடி வைத்தது பற்றிக் கூறாவிட்டால் என் மண்டை கனத்தில் தலை வெடித்து விடுமல்லவா? இது நடந்தது   1985ம் ஆண்டில்! சரியான வருடமா இல்லையா என்று யாரும் தலையைப் பிய்த்துக்கொள்ள வேண்டாம். 1985ல் லண்டனும் இருந்தது... நானும் இருந்தேன்...  அங்கேதான் ஃபிரான்சிஸ்கா ஹாமில்டன் என்ற பெண்மணியைச் சந்தித்தேன்.

அது லண்டன் திரைப்பட விழா... அங்கே பிரபல மும்பை இயக்குநர் ஆனந்த் பட்வர்த்தனிடம் என் அறைத்தோழர் சூரியபிரகாசம் தொலைபேசி எண்ணைக் கொடுத்திருந்தேன். ஆனந்த் பட்வர்த்தன் அன்று கதைகளற்ற, நடப்பு விளக்கப் படங்கள் மட்டுமே எடுப்பவர். அடூர் கோபாலகிருஷ்ணனுக்கு அடுத்தபடி வெளிநாடுகளில் புகழும் பெயரும் பெற்ற இந்திய இயக்குநர்.  நானோ ஒன்றே முக்கால் அரைக்கால் படங்களில் - அதுவும் ஓடாதவற்றில் - தலையைக் காட்டிவிட்டு, சென்னை இயக்குநர் கழக செலவில், குறுக்கு வழியாக லண்டன் திரைப்பட விழாவுக்குச் சென்றவன்.

ஃபிரான்சிஸ்கா ஹாமில்டன், உலகப் புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் இங்மார் பெர்க்மனின் சீடராம். நான் Directors Council of Great Britainல் வெள்ளையருக்குப் புரியாத ஆங்கிலத்தில் ஒரு லெக்சர் அடித்தது தெரிந்து என்னைச் சந்திக்க ஆனந்த் பட்வர்த்தனிடம் போன் நம்பர் பெற்றிருக்கிறார். நான் அன்று இரவு இந்தியா புறப்படுவதால் ஆக்ஸ்ஃபோர்டு   தெருவில் நம்மூர் ‘நீல்கிரிஸ்’ போன்ற ‘மார்க்ஸ் அண்ட் ஸ்பென்ஸர்ஸ்’ என்ற புகழ்பெற்ற கடை முன் சந்திப்பதாக தொலைபேசி மூலம் ஒப்புக்கொண்டோம்.



போகும்போது என் லண்டன் நண்பர் சூரியா ஒரு ரோஜா மலரை என் கையில் கொடுத்து, ஒரு ஆங்கிலேயப் பெண்ணை எப்படி சந்திக்க வேண்டும் என்று பாடம் எடுத்துத் தோற்று, ‘மேற்கத்திய நாகரிகம் தெரியாத முட்டாள்’ என்ற பட்டத்தையும் என் தலையில் கட்டி அனுப்பி வைத்தார். 30 வருடங்களுக்கு முன் லண்டனின் ஆக்ஸ்ஃபோர்டு ஸ்ட்ரீட் என்பது நமது நேஷனல் ஹைவேக்களை விடவும் அகலம் அதிகம் இருக்கும். தெருவின் இரு மருங்கிலும் கடைகள். நடைபாதை முழுக்க கோட்டும் சூட்டும் அணிந்த மக்கள் ஆயிரக்கணக்கில் நிறைந்திருப்பார்கள். இடையே சாரை சாரையாக தானூர்திகள். Zebra crossingன் இரு பக்கமும் தெருவைக் கடக்கும் கூட்டம் சேர்ந்தவுடன் லண்டன் Bobbies என்று சொல்லப்படும் இரண்டு போலீஸார் வாகனங்களை நிற்க வைத்து, ஒவ்வொரு முறையும் குறைந்தபட்சம் 200 பேர் தெருவைக் கடக்க உதவுவார்கள்.

தொலைபேசியில் அந்தப் பெண்மணி தான் முழுக்க முழுக்க கறுப்பு ஷூ, கறுப்பு உடை, கறுப்பு தொப்பி அணிந்து வருவதாகச் சொல்லியிருந்தார். என்னைக் கேட்டபோது, ‘‘நான் சால்ட் அண்ட் பெப்பர் தாடியுடன் உள்ள இந்தியன்... என்னை சுலபமாகக் கண்டுகொள்ளலாம்’’ என்று சொல்லி இருந்தேன். ஆனால் ஃபிரான்சிஸ்கா ஹாமில்டன் எதிரே ஒரு அரேபிய பைத்தியக்காரன் போல் ரோஜா மலரை நீட்டிக்கொண்டு போன என்னைப் பார்த்து, ‘இது ஒரு இந்தியனாக இருக்க முடியாது’ என்று முடிவு செய்திருக்கிறார்.

கடைசியாக ஒருவரை ஒருவர் கண்டுகொண்டு, முதன் முறையாக அன்று இந்தியாவில் கிடைக்காத பீட்ஸாவை ஒரு இத்தாலிய உணவகத்தில் சுவைத்தோம். ஃபிரான்சிஸ்காவின் இந்திய - சென்னைப் பயணத்தை அப்போதே முடிவு செய்தோம். அவர் 1986ல் சென்னை வந்து, அவருக்குத் தெரிந்த ஒரு பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி வீட்டில் தங்கினார். அவர் பிரான்ஸ் நாட்டில் ஒருவரைக் காதலித்து ஒரு வருட வாழ்வுக்குப் பின் அந்த மனிதன் வேறு பெண் தொடர்பால் இவரைக் கைவிட்ட கதையெல்லாம் சொல்லும் அளவுக்கு இருவரும் நெருக்கமாகி விட்டோம். அவரை இயக்குநர் கழக செலவில், ஐதராபாத்தில் நடைபெற்ற உலகத் திரைப்பட விழாவுக்கு அழைத்துச் சென்றேன். அந்த 27 வயதுப் பெண்மணி இந்த 56 வயது நடிகன் தோளில் கையைப் போட்டுக்கொண்டு ஐதராபாத் தெருக்களில் அலைய நேர்ந்தது. நான் சிறிதே நெளிய, அவள் குலுங்கிக் குலுங்கி நடக்க, ஊர் சிரிக்க விழாவில் பங்கு கொண்டோம். இருவரும் பக்கத்து பக்கத்து அறையில் ஒரே ஹோட்டலில் தங்கினோம். பின்பு நடந்தவை எல்லாம் East-West இரு உலகப் பண்புக் கதை... அதைப் பிறகு சொல்கிறேன்.

இவர் அவர் இல்லை!

திரு கே.பி. மறைவுக்குப் பிறகு எழுதுவதற்கு மூளையில் சரக்கு போதாமலும் அதற்கு ஒண்ணரை அடி கீழே, இரண்டு முறை மருத்துவ சாமுராய்களால் தாக்கப்பட்டு திறன் குறைந்த இதயத்தில் சத்துமில்லாமல் தவித்தவனுக்கு உற்சாகம் ஊட்டியவராக ஒருவர் தொலைபேசியில் பேசித் தொலைத்தார். ‘‘சாருஹாஸன் சார்... உங்க நடிப்பு ‘சோமன துடி’யில்... ஆஹா என்ன பிரமாதம்!’’ அவர் பாவம்... பழைய பஞ்சாங்கம்! இன்றைய புதுப் பஞ்சாங்கங்களுக்கு ஒரு விளக்கம் சொல்லி விடுகிறேன். ‘சோமன துடி’ என்ற படத்தில் நடித்ததும் விருது பெற்றதும் நானல்ல... எம்.வி.வாசுதேவராவ்.

இதே போல நான் சென்னை உயர்நீதிமன்றப் படிகளில் வேலையில்லாமல் காலுக்கு மட்டும் பயிற்சி கொடுத்து ஏறிக் கொண்டிருந்தபோது, ஒருவர் கேட்டார்... ‘‘நீங்கதானே ‘சிகப்பு ரோஜாக்கள்’ படத்தில் அந்தக் கொலைகார தோட்டக்காரனாக நடித்தது?’’ என் தாடியை அவர் கொலைகார ஒப்பனையாக  நினைத்திருக்கலாம். நான் மூச்சு வாங்கிக்கொண்டே ‘‘இல்லை...’’ என்று சொல்லி விட்டு, ‘‘அந்தப் படத்தின் ஹீரோவின் அண்ணன்’’ என்று சொல்வதற்கு முன் அவர் போய்விட்டார்.

இது மனதில் உறுத்திக்கொண்டிருந்த நேரம், இன்னொருவர் என்னை எல்டாம்ஸ் ரோட்டில் நிறுத்தி, ‘‘நீங்கள்தானே சினிமா டைரக்டர் விஜயன்?’’ என்று கேட்டார். எனக்கு முதல் நாள் கோபம் தணியவில்லை. “இல்லை... நான்தான் சிவாஜி கணேசன்!’’ என்றேன்.
அவர் சற்றே தடுமாறி, ‘பாவம், பைத்தியம் போலிருக்கு!’ என்று நினைத்துக்கொண்டு போய்விட்டார். இதைப் பற்றி நாகேஷுடன் அவருக்கு இணையாக நடித்தவரும் பின்னால் கவுண்டமணிக்கு வசனம் எழுதியவருமான வீரப்பனிடம் சொன்னேன். அவர் சொன்னார்... ‘‘உங்க சங்கதி ஒண்ணும் பெரிசில்ல அண்ணே! என்னை ஒரு ஷூட்டிங்ல ஒருத்தர் ரெண்டு நாள் கெஞ்சி வீட்டுக்கு சாப்பிடக் கூட்டிப் போய், தன் மனைவி - மக்களிடம், ‘சார்தான் மிஸ்டர் சோ!’ என்று அறிமுகப்படுத்தினார்!’’ என்றார்.

(நீளும்...)