தனி காமெடி ட்ராக் இனி வொர்க் அவுட் ஆகாது!



டார்லிங் பால சரவணன்

கொஞ்சம் கொழுக் மொழுக் ஃபேஸ் கட்டு... கொஞ்சும் மதுரை ஸ்லாங்... ஜிம் பக்கம் போகாத உடம்பு... இதுதான் பாலசரவணனின் டீட்டெயில். ‘‘நெக்ஸ்ட் இயர் நாம கண்டிப்பா செவன் ஸ்டார் ஹோட்டல்ல மீட் பண்ணிப் பேசலாம். இப்போ, பக்கத்துல எங்கேயாவது ஒரு ஹோட்டல் ஓகேவா?’’ என்றது பாலசரவணனின் எஸ்.எம்.எஸ்.

‘‘அப்போ அடுத்த வருஷமே பேட்டியை வச்சுக்கலாம்னு பதில் அனுப்புங்க!’’ என கலாய்த்ததால் போட்டோகிராபரை கழற்றிவிட்டுக் கிளம்பினோம்... பாலசரவணனின் வொர்க்கிங் ஸ்பாட்டிற்கு!

‘‘முழுப்பெயர் பாலசரவணன். சுருக்கமா பாலா. சொந்த ஊர் மதுரை பக்கம் உள்ள பரவை. அப்பா ரங்கநாதன், அம்மா சாந்தி, ஒரு அக்கா... இவ்ளோதான் என் ஃபேமிலி. மதுரை அழகர்கோவில்ல பி.இ படிக்கிறப்பவே டைமிங் ஜோக்ஸ், கலாய்க்கறதுன்னு எப்பவும் கலகலன்னு  இருப்பேன். என்னைச் சுத்தி நாலஞ்சு பேர் சிரிச்சுக்கிட்டே இருப்பாங்க. ஒரு நாள், முகமது ரபீக்னு காலேஜ் ஃப்ரெண்ட் ஒருத்தன் வந்தான். ‘சென்னையில ஒரு டி.வி சீரியலுக்கு ஆடிஷன் நடக்குது. நடிகர்கள் தேவையாம். உன்னோட மொத்த வித்தையையும் அங்கே போய்க் காட்
டு’ன்னு உசுப்பேத்தினான். அங்க போனேன். அங்கே ரமணகிரி வாசன் சாரால செலக்ட் ஆனேன்.



அந்த சீரியல் இயக்குநர் ஜெரால்ட் சார்.  3வது நாளே என்னை அவர் தனியா கூப்பிட்டு, டைரக்டர் மகேந்திரன் சாரோட ‘நடிப்பு என்பது’ புத்தகத்தைக் கொடுத்தார். ‘இதைப் படி... நீ பெரிய ஆளா வருவே’ன்னு ஆசீர்வதிச்சார். அவரோட ஆபீஸ்லேயே நான் தங்குறதுக்கு ஒரு இடமும் கொடுத்தார். சீரியல்கள்ல நடிச்சிட்டிருந்தப்பவே குறும்பட வாய்ப்புகளும் வர, நிறைய குறும்படங்கள்ல நடிச்சேன். டி.வியில என்னைப் பார்த்து இயக்குநர் சக்திவேல் சார் அவரோட ‘ஈகோ’ படத்துல வாய்ப்புக் கொடுத்தார். ஆனா, அந்தப் படம் ரிலீஸ் ஆகுறதுக்கு முன்பே, ‘குட்டிப்புலி’ ரிலீஸ் ஆகிடுச்சு. ‘குட்டிப்புலி’ இயக்குநர் முத்தையா சாருக்கு என்னை ரொம்பப் பிடிக்கும். என்னோட கேரக்டர் பப்புவை, எனக்காகவே டெவலப் பண்ணி, எனக்கு ஒரு ஸ்ட்ராங் ஓப்பனிங் கொடுத்தார். அதுல இருந்துதான் ‘பாலா’ன்னு நான் வெளிய தெரிய ஆரம்பிச்சேன். அடுத்து ‘ஈகோ’ ரிலீஸ் ஆச்சு. அதுல என் கேரக்டர் சூப்பரா இருந்ததுன்னு ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா சார் போன் பண்ணிப் பாராட்டினதை மறக்க முடியாது. எனக்கு கிடைச்ச முதல் வி.ஐ.பி பாராட்டு அது.

 ‘பண்ணையாரும் பத்மினி’ யும் ஷார்ட் ஃபிலிம்ல நான் பண்ணின கேரக்டரைத்தான் படத்துல விஜய்சேதுபதி சார் பண்ணியிருந்தார். நான் அந்தப் படத்துல ‘பீடை’ங்கற கேரக்டர் பண்ணியிருந்தேன். இன்னொரு விஷயம்... அந்தப் படத்துல நான் அசிஸ்டென்ட் டைரக்டராவும் வொர்க் பண்ணினேன். அந்த ‘பீடை’ கேரக்டரைப் பார்த்துதான் ‘திருடன் போலீஸ்’ கிடைச்சது. அந்த கான்ட்ஸ்டபிள் கேரக்டரை எல்லாரும் இன்னிக்கும் பாராட்டுறாங்க. படத்தோட டைரக்டர் கார்த்திக் ராஜு எங்களுக்கு ஃபேமிலி ஃப்ரெண்ட் ஆகிட்டார். ‘டார்லிங்’ சான்ஸ் இன்னும் பெரிய அதிர்ஷடம். ஞானவேல்ராஜா சாரே போன் பண்ணி எனக்கு அந்த சான்ஸைக் கொடுத்தார். ‘டார்லிங்’ முதல் நாள் ஷூட்டிங் போன அன்னிக்கே, பதினைஞ்சு வருஷம் பழகின ஃப்ரெண்ட் மாதிரி என்கிட்ட பழகினார் ஜி.வி.பிரகாஷ்.



இப்போ, 7 படங்கள் பண்றேன்! மேரேஜ் ஆகிடுச்சு. லவ் மேரேஜ்தான். மனைவி பெயர் ஹேமாவதி. என் ஸ்கூல் மேட் சூர்யாவோட காலேஜ் மேட். சூர்யாவுக்கு போன் போட்டப்ப ஒரு நாள் இவங்க எடுத்தாங்க. சின்னதா வம்புக்கு இழுத்து கலாய்ச்சி, அப்புறம் சாரி சொல்லி... இப்படியே வளர்ந்துச்சு நட்பு. கடலை தாங்காம நோக்கியா 1100 போன் கொதிக்கும். ஐ லவ் யூ சொல்ற வரைக்கும் கூட எனக்கு கிலிதான். நேர்ல பார்க்கவே இல்லையே! ஒருவேளை அவங்க அழகா இல்லீன்னா? அவங்க அழகா இருந்து என்னை ஏத்துக்கலைன்னா? இப்படி நிறைய யோசிச்சுட்டுதான் நேர்ல போனேன்... லவ்வை சொன்னேன். அதிகம் யோசிக்காமலேயே அவங்க ஓகே சொன்னாங்க. இப்ப எங்க மக யாழினிக்கு ஒண்ணரை வயசு.

எனக்குன்னு காமெடிகள் உருவாக்க ஒரு டீம் செட் பண்ணி வச்சிருக்கேன். நண்பர்கள் இருக்காங்க. அசிஸ்டென்ட்டா வொர்க் பண்ணின அனுபவம் இருக்குறதால கண்டிப்பா ஒரு நல்ல  இயக்குநரா ஆகணும்னு விரும்புறேன். இங்கே டைரக்டரா எப்போ வேணா ஆக முடியும்.  ஆனா, நடிகன் நிலமை அப்படியில்லையே... வாய்ப்புகள் தேடி வர்றப்பவே ஒரு கை  பார்த்துடணும். அதனாலதான் ஃபர்ஸ்ட் நடிப்பு, அப்புறம் டைரக்‌ஷன்னு ப்ளான். இப்போ தனி காமெடி ட்ராக் எல்லாம் வொர்க் அவுட் ஆகாது. ‘மூடர் கூடம்’, ‘சூது கவ்வும்’ மாதிரி படங்கள் வந்தபிறகு ட்ரெண்ட் வேற மாதிரி இருக்கு.  கதையோடு இணைந்த காமெடிக்குத்தான் இனி வரவேற்பு இருக்கும். இப்போ உள்ள இயக்குநர்களே செம காமெடி ஸ்கிரிப்ட்டோட வர்றாங்க. ஆறேழு மாசமா அந்த காமெடியை செதுக்கி செதுக்கி ரெடி பண்ணி வச்சிருக்காங்க. நாம நேத்து வந்து, சீன் பேப்பரை வாங்கிட்டு நாலு நாள்ல டைரக்டர்களை விட எப்படி பெஸ்ட்டா யோசிக்க முடியும்? கதையோடு ட்ராவல் பண்ணினாலே நாம பாஸ் மார்க்கை தாண்டிடலாம். இதுதான் என் பாலிஸி!’’

"இங்கே டைரக்டரா எப்போ வேணா ஆக முடியும்.  ஆனா, நடிகன் நிலமை அப்படியில்லையே..."

- மை.பாரதிராஜா