கமல் கெட்டப்பில் ஹீரோயின்!



ஒரு ஆச்சரிய ஆல்பம்!

‘‘கமல் சார் மாதிரி கெட்டப் போட்டு சும்மா ஒரு போட்டோ எடுக்கறதுக்குள்ள எங்களுக்கெல்லாம் தலை கிறுகிறுத்துடுச்சு. ஆனா, கமல் சார் எப்படித்தான் படம் ஃபுல்லா அந்த கெட்டப்பை மெயின்டெயின் பண்றாரோ... ஆச்சரியமா இருக்கு. ரியலி கிரேட் கமல் சார்!’’ என ‘வாவ்’ சொல்கிறார் லட்சுமி ப்ரியா சந்திரமௌலி. ‘சுட்ட கதை’ படத்தின் ஹீரோயின்! நடிகைகள் போட்டோஷூட் என்றால், அடக்க ஒடுக்கம், கவர்ச்சி, மாடர்ன் என காஸ்ட்யூம்களுக்கு ஒரு ஃபார்முலா உண்டு. ஆனால், லட்சுமி செய்திருக்கும் ஷூட்டில் கமழக் கமழ கமல் வாசம்!

 ‘‘நான், தக்‌ஷணா ராஜாராம், சுபாஷிணி வணங்காமுடி, லலிதா ராஜமாணிக்கம்னு நாங்க நாலு பேர் ஸ்கூல்மேட்ஸ். இன்னிக்கு காஸ்ட்யூம் டிசைனிங், போட்டோகிராபி, மேக்கப்னு அவங்க ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு ஃபீல்டுல இருக்காங்க.  நான் நடிகையா ஆகிட்டேன். நாங்க எல்லாரும் சேர்ந்து வித்தியாசமா ஒரு போட்டோஷூட் பண்ணலாம்னு ரொம்ப நாளா ப்ளான். நாங்க எல்லாருமே கமல் சாரோட ஃபேன்ஸ். அதிலும் நான் ரொம்ப தீவிரம். அந்த எண்ணத்தோடவே யோசிச்சப்போ, தோணினதுதான் இது.
 


ஐடியா யோசிக்கிறது ஈஸி... ஆனா, அதை செயல்படுத்துறப்போ செம கஷ்டப்பட்டோம். கமல் சார் கெட்டப்னாலே மீசை முக்கியம். பசங்களுக்கு அது மாதிரி மீசை வச்சாலே அவர் அளவுக்கு செட் ஆகாது. பொண்ணுக்கு அந்த மீசை வச்சா காமெடி ஆகிடும். ஸோ, கமல் சார் கெட்டப்பையே ஃபீமேல் வெர்ஷனா மாத்திக்கிட்டோம். மொத்த போட்டோஷூட்டையே நாலரை நாள்ல முடிச்சிட்டோம். ஆனா, ப்ரீ புரொடக்‌ஷன் வேலையே ரெண்டு, மூணு வாரம் போச்சு.

‘விருமாண்டி’ கெட்டப்தான் முதல் ஷூட். ‘அன்பே சிவம்’ல அவர் போட்டிருந்தது ரொம்ப தடிமனான லென்ஸ்... அந்த மாதிரி கண்ணாடி போட்டா, கண்ணே தெரியலை. தடுமாறிப் போயிட்டேன். ‘அபூர்வ சகோதரர்கள்’ அப்பு கேரக்டருக்கு குள்ள கெட்டப்ல ஒரு சர்க்கஸ் பந்து மேல அநாயாசமா ஏறி நிற்பார் கமல். அடிப்படையில் நான் ஒரு அத்லெட். ஜிம்னாஸ்டிக், கிரிக்கெட்னு எல்லாத்திலும் கலக்கற ஸ்போர்ட்ஸ் கேர்ள். கமல் சார் மாதிரி ஏரோபிக்ஸ் பால் மேல நிக்கலாம்னு ட்ரை பண்ணினா, என்னாலயே முடியல. எப்படியோ நான் பேலன்ஸ் பண்ணி நின்ன அந்த ஒரு செகண்ட்ல போட்டோ எடுத்த சுபாஷிணிக்குத்தான் நான் நன்றி சொல்லணும். என் காஸ்ட்யூம்ஸ் எல்லாம் தக்‌ஷணா கவனிச்சுகிட்டாங்க. லலிதா மேக்கப்  பண்ணினாங்க. கமல் சார் ஸ்டில்ஸ்ல இருக்குற அதே லைட்டிங், அதே ஸ்கின் டோன் கொண்டு வர்றதுக்கு எல்லாரும் ரொம்பவே மெனக்கெட்டோம். நாங்க எல்லாருமே கமல் சாரோட ரசிகைகளா இருந்தாலும், அவரை நேர்ல பார்த்துப் பேசினதில்லை. அதுக்கு இந்த போட்டோஷூட் ஒரு விசிட்டிங் கார்டா அமைஞ்சா சந்தோஷம்!’’



‘‘கமல் சார் மாதிரி நடிக்கிற உத்தேசம்..?’’

‘‘கண்டிப்பா இருக்குங்க! அந்த ஆசையிலதானே இவ்வளவு செய்யிறோம். நான் ஹெச்.ஆர். மேனேஜ்மென்ட்ல முதுகலை முடிச்சிருக்கேன். கார்த்திக் குமாரோட ‘ஏவம்’ ஆங்கில நாடகக் குழுவில் அஞ்சு வருஷம் வொர்க் பண்ணியிருக்கேன். டிராமா பார்த்துட்டு, இயக்குநர் மகிழ்திருமேனி அவரோட ‘முன்தினம் பார்த்தேனே’வில் சின்ன ரோல் கொடுத்தார். அப்புறம் சீரியல்கள் பண்ணினேன். அதன் பிறகுதான் ‘சுட்ட கதை’ வந்துச்சு. தொடர்ந்து ‘கள்ளப்படம்’, ‘யாகாவாராயினும் நா காக்க’ன்னு படங்கள்... இப்போ ‘மாயா’, ‘களம்’னு படங்கள் அடுத்தடுத்து இருக்கு. நிறைய வாய்ப்புகள் தேடி வருது. அதில் எனக்கு சரியா வரும்ங்கிற கேரக்டரை மட்டும் செலக்ட் பண்ணி செய்யறேன். பெரிய ஹீரோயினா ஆகணும்னு எய்ம் எல்லாம் இல்ல. நல்ல ரோல்கள் நிறைய பண்ணணும்... ‘நல்ல நடிகை’ன்னு பெயர் வாங்கினாலே போதும். கமல் ரசிகைங்கற பேரைக் காப்பாத்திடுவேன்!’’

- மை.பாரதிராஜா