தேர்வு



வெளிநாட்டில் இருக்கும் தன் கணவன் சக்திவேலுக்கு போன் செய்தாள் பிரியா.‘‘என்னங்க, மேல் மாடியை வாடகைக்கு விடச் சொல்லி இருந்தீங்கல்ல! அதுக்கு லோக்கல் பேப்பர்ல விளம்பரம் கொடுத்திருந்தோம்.

அதைப் பார்த்துட்டு, இன்னிக்கு ரெண்டு குடும்பம் வந்து வீட்டைப் பார்த்துட்டுப் போனாங்க. ஒருத்தங்க நடுத்தரமான குடும்பம். நல்லவங்களா தெரியுது. மாசம் மூவாயிரம் ரூபாய் வாடகைதான் தர முடியுமாம். இன்னொருத்தங்க புதுமணத் தம்பதிங்க. நல்ல வசதி போல. நாலாயிரம் வாடகை தர்றேங்கிறாங்க. என்ன சொல்வோம்?’’

‘‘அந்தப் புதுமணத் தம்பதிக்கே கொடுப்போமே! வாடகை அதிகம் வருமில்ல..?’’ என்றான் சக்திவேல்.‘‘எனக்கென்னவோ அந்த நடுத்தரக் குடும்பம் பெஸ்ட்னு தோணுதுங்க. வசதியானவங்க, புதுசா கல்யாணம் ஆனவங்கன்னா வாழ்க்கையை ரொம்ப ஜாலியா என்ஜாய் பண்ணுவாங்க. ஒரு நாள் இல்லாட்டி ஒரு நாள்... ‘இப்படி நம்ம குடும்பம் இல்லையே’னு எனக்கு தோணும்.

நம்ம பிள்ளைங்களும் ‘அப்பா நம்ம கூட இல்லையே’னு ஏங்கிப் போயிடுவாங்க. வசதி குறைஞ்சவங்கன்னா, அவங்க படுற கஷ்டத்தையும் சமாளிப்புகளையும் பார்த்து, ‘நாம எவ்வளவோ பரவாயில்ல’னு தோணும். நீங்க வெளிநாட்டுக்குப் போய் சம்பாதிக்கறதுக்காக வருத்தப்படாம பெருமைப்படுற மனநிலை வரும். அவங்களையே வரச் சொல்லிடலாமா?’’ வலியோடு அதை ஆமோதித்தான் சக்திவேல்!

வி.அங்கப்பன்