ரிஷப லக்னத்துக்கு சுயம்பு சுக்கிரன் தரும் பலன்கள்



கிரகங்கள் தரும் யோகங்கள் 13

கால புருஷனை ஒரு மனித உருவாகக் கொள்வோமாயின் சுக்கிரன் என்பவன் முகத்திற்கு உரியவனாவான். ரிஷப லக்னத்துக்கு அதிபதி சுக்கிரன் என்பதால், இந்த லக்னத்தில் பிறந்தவர்கள் பொதுவாகவே அகத்திலும் புறத்திலும் பளிச்சென்று இருப்பார்கள்.

பெரும் கூட்டத்திலும் தனித்துத் தெரிவார்கள். கண்ணில் வசீகரமும், முகத்தில் ஒரு ஈர்ப்பும், உதட்டில் சிறு முறுவலும் கொண்டிருப்பார்கள். அடிக்கடி முகத்தைக் கழுவியபடியும் இருப்பார்கள். ஆண்களே ஆனாலும் சீப்பும் கையுமாகத்தான் இருப்பார்கள்.

தன்னிடமிருக்கும் சக்திகளை சுக்கிரன் ஸ்பரிசத்தின் மூலமாகவே அளித்துவிடும் ஆற்றல் பெற்றவர். அதுபோல இந்த லக்னத்தில் பிறந்த சிலர், தன் தேகத்தில் இருக்கும் சக்திகளை வேறொரு தேகத்திற்குள் புகுத்தும் சக்தியைப் பெற்றவர்களாக இருப்பார்கள். இதை அறிந்தோ அறியாமலோ அவர்கள் செய்து கொண்டிருப்பார்கள். ‘சுக்கிராச்சாரியார், இறந்தவர்களை எழுப்பும் ம்ருத சஞ்சீவினி’ எனும் மந்திரத்தை ஓதும் வல்லமை பெற்றவர் என்று சொல்லக் கேட்டிருப்போம்.

இந்த ரிஷப லக்னத்திற்கு அதிபதியாக சுக்கிராச்சாரியார் வருவதால், யாராலும் செய்ய முடியாத காரியங்களை இவர்கள் சர்வசாதாரணமாகச் செய்து முடிப்பார்கள். இந்த லக்னத்தில் பிறந்த மருத்துவர்கள், எல்லோராலும் கைவிடப்பட்ட நோயாளிகளைக்கூட காப்பாற்றி விடுவார்கள். சமூகத்தில் யாராலும் எதிர்க்க முடியாதவர்களை எதிர்த்து நிற்பார்கள். ராஜ தந்திரத்தாலும் உழைப்பாலும் சுக்கிரன் முன்னேற வைப்பார். சிறு வயதில் கோயில் காளையைப் போல வளைய வருவார்கள். பின்னர் தங்களின் அனுபவத்தால் கொஞ்சம் அடங்கி வெளிப்படுவார்கள். ஸ்திர லக்னத்தில் முதன்மையானது இது.

பிடித்த பிடியை விடாது இருப்பார்கள். என்ன பேசினாலும், கடைசியாக அவர்கள் என்ன நினைக்கிறார்களோ அதைத்தான் செய்வார்கள். எங்கு தொடங்கினார்களோ அதையேதான் சொல்லிக் கொண்டிருப்பார்கள். மற்றவர்களின் குற்றங்களையும், வேறொரு முகத்தையும் இவர்கள் மிகத் துல்லியமாக அறிந்து வைத்திருப்பார்கள். மற்றவர்களுக்காக ஒரு வேலையைத் திறம்படச் செய்யும் இவர்கள், தனக்கென்று வரும்போது தவித்துப் போவார்கள். படைப்பாற்றல் மிகுந்திருக்கும். சுக்கிரன் என்று வெள்ளிக்கு வேறொரு பெயர் உண்டு. நட்சத்திரக் கூட்டங்களில் வெள்ளி எப்படி தனித்துத் தெரிகிறதோ அதுபோல இவர்களும் தனித்து ஒளிர்வார்கள். 

ரிஷப லக்னத்தில் பிறந்தவர்களின் ஜாதகத்தில் லக்னத்திலேயே - அதாவது ஒன்றாம் இடத்திலேயே இதன் ராசியாதிபதியான சுக்கிரன் அமைந்தால், பார்ப்பதற்கு யௌவனம் மிகுந்தவர்களாக இருப்பார்கள். உடம்பெல்லாம் மச்சம் என்பார்களே அதுபோல சகலரையும் வசீகரித்து தங்களின் பக்கம் வைத்திருப்பார்கள்.

அலை அலையாய் தலைமுடி, குழந்தை சிரிப்பு, கொஞ்சும் பேச்சு என்று சுற்றியிருப்போரை தன்வசமாக்குவார்கள். ‘‘ஏதோ அவர்கிட்ட இருக்கு. அதனால ரொம்பப் பிடிக்குது’’ என்பார்கள். இந்த லக்னாதிபதியான சுக்கிரனே நல்ல வீட்டுக்கும், ஆறாம் வீடான எதிரி வீட்டுக்கும் உரியதாகும். அதனால் எவ்வளவு சுகபோகங்களில் ஈடுபாடு கொண்டாலும், மெதுவாக அதிலேயே ஒரு கட்டுப்பாடும் வேண்டும். சொந்த வீடு, வாகனம் போன்றவையெல்லாம் மிக எளிதாக அமைந்து விடும்.

அடுத்ததாக மிதுனத்தில் சுக்கிரன் அமர்ந்தால், இதமான பேச்சும் ஆறுதல் வார்த்தைகளும் எப்போதும் இவர்களிடம் வெளிப்படும். பொதுவாகவே லக்னாதிபதி இரண்டில் இருப்பது விசேஷமாகும். அதுவும் புதன் சுக்கிரனுக்கு நட்பு வீடாகும். இவர்கள் சினிமா, நாடகத் துறையில் மிகச் சிறந்த வசனகர்த்தாவாக வருவார்கள். இயல், இசை என்று சிறந்து விளங்குவார்கள். மிகச் சிறந்த குரல் வளத்தோடு இருப்பார்கள். கடக ராசியான மூன்றில் சுக்கிரன் அமர்ந்திருந்தால் அதுவும் நன்மையையே தரும். ஏனெனில், யோகாதிபதியின் நட்சத்திரம் இந்த ராசிக்குள் இருப்பதால் இவர்களும் கலைத்துறையிலேயே சாதிப்பார்கள்.

ஆர்ட் டைரக்‌ஷன் துறையில் கவனம் செலுத்தினாலும் நன்கு வருவார்கள். அதேசமயம் மூன்றில் சுக்கிரன் மறைவதால் சோம்பேறித்தனம் இருந்து கொண்டேயிருக்கும். ‘‘பார்த்துக்கலாம்... பார்த்துக்கலாம்...’’ என்று தள்ளிப்போட்டுக் கொண்டே இருப்பார்கள். ஒரு வெற்றிக்குப்பிறகு வெகுகாலம் அப்படியே இருந்துவிடுவார்கள். தொடர்ச்சியான உத்வேகம் இருக்காது. ஒரு வெற்றியில் நிறைவடைந்து விடுவார்கள். அதனால் சறுக்குவார்கள். எனவே, ஓரிரு வெற்றிகளுக்குப் பிறகு அலட்சியமாக இருத்தல் கூடாது.

நான்காம் இடமான சிம்மத்தில் சுக்கிரன் அமர்ந்தால் ஆடம்பரம் இல்லாமல் இருப்பார்கள். ஏனெனில், சுக்கிரனுடைய தேவையில்லாத அலட்டல்களை சூரியன் உறிஞ்சிவிடும். அதேசமயம் சில சூட்சுமங்களை உணர்ந்தபடி இருப்பார்கள். வேத மந்திரங்களில் மிகவும் ஈடுபாட்டோடு இருப்பார்கள்.

அவ்வப்போது பணப் பற்றாக்குறை வந்து நீங்கியபடி இருக்கும். மனைவியிடம் நற்பெயர் வாங்க முடியாமல் தவிப்பார்கள். ஒவ்வொரு செயலும் பல தடைகளுக்குப் பிறகே நிறைவேறும். வியாபாரம், உத்யோகத்தைவிட அரசியலில் ஈடுபட்டு புகழ் பெறுவார்கள். இவர்கள் சுயநலத்தோடு இருக்க மாட்டார்கள். எங்கிருந்தாலும் மற்றவர்களின் அனைத்து செலவுகளையும் இவர்களே மனமுவந்து செய்வார்கள்.

ரிஷப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு, ஐந்தாம் வீடான கன்னி ராசியில் சுக்கிரன் நீசமாகிறார். ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற வெறியும், மற்றவர்க
ளிடமிருந்து தான் மிகவும் மாறுபட்டவர் என்கிற எண்ணமும் இவர்களுக்கு இருந்து கொண்டேயிருக்கும். இவர்கள் கண்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். கண்களில் ஏதாவது பிரச்னை வந்தபடி இருக்கும்.

மருத்துவரை அணுகாது கண்ணாடி அணிதல் கூடாது. இவர்களின் பெயரில் வீடு இல்லாமல் இருப்பது நல்லது. உடம்பில் சோம்பல் போல ஒரு மதமதப்பு இருக்கும். பண விஷயத்தில் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும்.

யாரிடமேனும் காசு கொடுத்து ஏமாறுவது என்றெல்லாமும் நடக்கும். மத்திம வயது முதல் நல்ல முன்னேற்றம் இருக்கும். சுக்கிரன் பலமற்று இருப்பதால் தன்னுடைய பொது வாழ்க்கை பலவீனங்களை வெளிக் காட்டிக்கொள்ள மாட்டார்கள். மனைவியின் பேச்சுக்கு மறுபேச்சு பேசமாட்டார்கள்.

லக்னத்திற்கு ஆறாம் இடத்தில் சுக்கிரன் இருந்தால், இவர்கள் தன்னுடைய பெயரில் வாகனம் வாங்கக் கூடாது. மேலும், வாயால் கெடுவார்கள். சுய ஒழுக்கம் இவர்களுக்கு மிகவும் முக்கியமானதாகும். எல்லா விஷயங்களிலும் கொஞ்சம் அதீதமாகவே செயல்படுவார்கள். அதேபோல நிறைய ஊர்களுக்குச் சென்ற வண்ணம் இருப்பார்கள். இவர்கள் ஒரு தேசாந்திரி. யாரை இவர்கள் பெரியாளாக மாற்ற வேண்டுமென்று நினைக்கிறார்களோ அவர்களை வளர்த்து விடுவார்கள்.

பெரியாளாக்குவார்கள். இந்த இடம் கொஞ்சம் கலகத்துவம் கொண்ட இடமாகும். எனவே, பிரச்னைகளால் பெரிய ஆளாக வளருவார்கள். மாறுவார்கள். யார் ஆட்சிக்கு வந்தாலும் எதிர்த்துப் பேசுவார்கள். யாரையுமே அறிவாளி என்று ஒப்புக்கொள்ள மாட்டார்கள். லக்னாதிபதியான சுக்கிரனே எதிரி ஸ்தானமாக இருப்பதால், இவர்களுக்கு எதிரி வெளியாட்களோ, பக்கத்திலுள்ளவர்களோ இல்லை. இவர்களுக்கு இவர்களே எதிரி. ஏனெனில், பேச்சு, செயல்பாடுகள் போன்ற எல்லாவற்றிற்கும் ஒரு எதிர்விளைவு இருக்கும். இது இன்னொரு கோணத்திலும் பொருந்தும். அதாவது, இவர்களால் உருவாக்கப்பட்டவர்கள் இவர்களுக்கு எதிரியாவார்கள்.

ஏழாம் இடமான விருச்சிகம் உங்களின் வாழ்க்கைத் துணையைக் குறிக்கும் இடமாக வருகிறது. உங்களின் இல்வாழ்க்கைத் துணையாக வருபவர்கள் உங்களைவிட திறமையாக இருப்பார்கள். ராஜதந்திரம் மிக்கவர்களாகவும் இருப்பார்கள். முதலிலேயே எல்லா விஷயங்களையும் தீர்மானித்து விட்டபிறகு புதியதாக கேட்பதுபோல அபிப்ராயம் கேட்பீர்கள். வாழ்க்கைத்துணைவர் உணர்ச்சி வசப்பட்டவராகவும் அமைவார். பெரும்பாலானோருக்கு அழகும், செல்வமும் நிறைந்த வாழ்க்கைத்துணை அமையும்.

அடுத்ததாக தனுசு ராசியில் சுக்கிரன் எட்டில் மறைவதால் ஒரு வகையில் நல்லதுதான். ஏனெனில், லக்னாதிபதியாக இல்லாமல் ஆறுக்குரியவராக வருவதால் எதிரியில்லாத வாழ்க்கையை வாழ வைக்கும். நடைமுறை ஆன்மிகம் என்று ஆன்மிகத்தைக் குறித்து யோசிப்பார்கள்.

மற்றவர்களால் செய்ய முடியாத விஷயங்களையெல்லாம் செய்ய வைக்கும். தொண்டை வலி, தொண்டைப் புகைச்சல் போன்றவை அவ்வப்போது வந்து நீங்கியபடி இருக்கும். பல நேரங்களில் பற்றற்ற மனநிலையோடு இருப்பார்கள். பணத்திற்குப் பின்னால் ஓடுவதில் ஒரு சலிப்பு வந்தபடி இருக்கும். அதனால், பணத்தின் எல்லையை மனதுக்குள் வைத்திருப்பார்கள். திடீர் யோகமெல்லாம் உங்களுக்கு உண்டு. 

ஒன்பதாம் வீடான மகரத்தில் சுக்கிரன் அமைந்தால் கட்டுக்கடங்காத இசை ஞானமுண்டு. இசையில் சாதிப்பவர்கள் பெரும்பாலோர் இந்த அம்சத்தில்தான் பிறந்திருப்பார்கள். இதில் சுக்கிரன் இருப்பதால் பிரபலமாகவும், தந்தையைவிட திறமைமிக்கவராகவும் இருப்பார்கள்.

வெளி மாநிலம், வெளிநாட்டில் இருக்கின்ற கால கட்டங்கள் மிகுந்த திருப்புமுனையாக அமையும். மகரத்திற்கு ஏழாம் வீடு கடகம் அதில் சந்திரன் இருந்து சுக்கிரனைப் பார்த்தால் இரண்டு திருமணங்கள் நடப்பதுண்டு. முன்னோர்கள் பின்பற்றிய தர்ம காரியங்களில் ஆர்வம் காட்டுவார்கள்.

 கும்பத்தில் சுக்கிரன் அமர்ந்தால் சாதாரணமாக எல்லாவித வசதி வாய்ப்புகளையும் பெற்றுவிடுவார்கள். வாழ்க்கையை ரொம்பவும் சிரமமில்லாது வைத்துக்கொள்ளவே விரும்புவார்கள். எப்படியாவது அடிப்படை சிரமங்கள் இல்லாது பார்த்துக் கொள்வார்கள். சிறிய வயதிலேயே சுயநலமாக இருந்து தனக்கு வேண்டியதை சேர்த்துக் கொள்வார்கள். சுயதொழில் தேர்ந்தெடுத்து மேற்கொள்வார்கள்.

தோப்பு, தோட்டம், பண்ணை வீடு போன்றவையெல்லாம் வைத்துக் கொண்டிருப்பார்கள். லக்னாதிபதியான சுக்கிரனே பத்தாம் இடத்தில் இருப்பதால் கன்சல்டன்ட், மனநல மருத்துவர், டிராவல்ஸ், கன்ஸ்ட்ரக்‌ஷன், துணிக்கடை போன்ற துறைகள் நன்றாக அமையும். வயதான பிறகு தான தர்மங்களில் ஈடுபடுவார்கள். 

பதினொன்றில் சுக்கிரன் உச்சமாவதால் வித்தியாசமான சிந்தனைகளோடு வளைய வருவார்கள். சமுதாயத்தை தன் பக்கம் திருப்பி ஒரு தாக்கத்தை ஏற்படுத்துவார்கள். இவர்களுக்கு எதிரிகள் இருந்து கொண்டேயிருப்பார்கள். முடிந்தவரை கோர்ட், கேஸ் என்று போகாமல் இருப்பது நல்லது. வாசனைத் திரவியங்கள் மீது மோகமே உண்டு. நகரத்திலுள்ள முக்கிய க்ளப் எல்லாவற்றிலும் உறுப்பினராக இருப்பார்கள்.

மேஷம் பன்னிரெண்டாம் இடமாக வருகிறது. இங்கிருக்கும் சுக்கிரன் ஆறாம் இடத்தைப் பார்த்துக்கொண்டே இருப்பதால் வரவுக்கு மிஞ்சிய செலவுகள். கடன் தொந்தரவு, சின்னச் சின்ன விஷயங்களைக் கூட போராடி முடித்தல் என்றிருக்கும். தன்னுடைய ஜாதி, இனம் என்றெல்லாம் இல்லாமல் தன்னுடைய உறவினர்களிடையே வித்தியாசப்பட்டு நிற்பார்கள்.

படித்த படிப்பும், பார்க்கும் வேலையும் வேறு வேறாக இருக்கும். சொந்த ஊரிலிருந்து வெளியேறி புகழ் பெறுவார்கள். பெற்றோருடன் வெகுகாலம் சேர்ந்து இருக்க முடியாது. பணம் மற்றும் பொருளாதார ஏற்ற இறக்கங்களைத் தவிர்க்க தன் பேரில் வீடு, சொத்துக்களை வைத்துக் கொள்ளாது இருப்பது நல்லது. இந்த அமைப்பில் பிறந்தவர்கள் பெரும்பாலும் காதல் திருமணம் செய்து கொள்வார்கள். மத்திம வயதிற்குப் பின்னர், பெண் தெய்வ வழிபாட்டை மேற்கொண்டு தீவிர ஆன்மிகத்தில் செல்வார்கள்.

ஜாதகத்தில் சுக்கிரன் இவ்வாறு தனித்து நிற்கும்போது சில ராசிக் கட்டங்களில் ஏற்படக் கூடிய பாதிப்பைப் போக்கிக்கொள்வதற்கு கோயில்கள் நிச்சயம் உதவும். மேலும், ஏற்படக் கூடிய யோக பலன்களை முழுமையாகப் பெறுவதற்கும், அதிர்ஷ்டமான வாழ்க்கை வாழ்வதற்கும் ஆலய தரிசனம் நன்மையைத் தரும். எனவே, திருவாரூர் தியாகராஜரையும், கமலாம்பிகையையும் தரிசித்து வாருங்கள். ஏனெனில், சுக்கிரனின் அம்சத்தை தன்னிடையே கொண்டிருக்கும் இந்திரனே இத்தல ஈசனை பூஜித்து நற்பேறு பலவற்றைப் பெற்றான்.

தனித்து நின்ற சுக்கிரன், அதாவது லக்னாதிபதியான சுக்கிரன் ஒவ்வொரு ராசியிலும் நின்ற பலன்களைப் பார்த்தோம். அடுத்த இதழில் சூரியனும் சுக்கிரனும் ஒவ்வொரு ராசிகளிலும் நிற்கும்போது ஏற்படும் யோக பலன்களைப் பார்க்கலாம்.

(கிரகங்கள் சுழலும்...)

ஜோதிடரத்னா கே.பி.வித்யாதரன்

ஓவியம்: மணியம் செல்வன்