கவிதைக்காரர்கள் வீதி



தூக்கத்தில் உளறுவதாய் சொல்லும்
அம்மாவுக்குத் தெரியாது
நான் தினமும் கனவில்
உன்னுடன் பேசிக்கொண்டிருக்கிறேன்
என்று!

நீ ரயிலில் பயணித்தால்
ஒலிவாங்கியில்
இப்படித்தான் அறிவிக்கிறார்கள்
‘‘இதயத்தை  பத்திரப்படுத்திக்
கொள்ளுங்கள்...
இது  பயணிகளின்
கனிவான  கவனத்திற்கு’’
என்று...

உன் கூந்தலில் வேலை கேட்டு
நேர்முகத்  தேர்வுக்கு
தோட்டத்தில் வரிசையாக
பூத்து நிற்கும்
ரோஜாக்களில்
ஒன்றை மட்டும்
எப்படித் தேர்ந்தெடுக்கிறாய்?

நிலவைக் காட்டிச் சோறூட்டும்
இந்த  பூமியில்
நான்  மட்டும்தான்
அந்த  நிலவுக்கே சோறூட்டினேன்,
அவள்  கையில்
மருதாணி  வைத்திருந்தபோது...

உன்னை வைத்து
சுற்றுகையில்
தலை சுற்றி
மயக்கம்  வருகிறது
ராட்டினத்துக்கு...

 தரணி வேந்தன்