தேர்தலில் ஜெயிக்க வைக்கும் நிபுணர்கள்!



பீகார் தேர்தலில் மிக மோசமான தோல்வியை சந்தித்தபோது பிரதமர் மோடி நிச்சயம் வருத்தப்பட்டிருப்பார், பிரசாந்த் கிஷோரை தன்னிடமிருந்து பிரிய அனுமதித்தது மிகப்பெரிய தவறு என்று! தேர்தல் களத்தில் பாரதிய ஜனதாவை வீழ்த்திய காரணகர்த்தா என நிதிஷ் குமார், லாலு பிரசாத் யாதவ் மற்றும் ராகுல் காந்தியை அந்தந்தக் கட்சியினர் கை காட்டுகிறார்கள். ஆனால் இந்த வெற்றியின் நிஜக் காரணம், பிரசாந்த் கிஷோர்.

தேர்தலை ஒரு போர் என வர்ணிக்க முடிந்தால், அந்தப் போரில் வெல்வதற்கான தந்திரோபாயங்களை வகுத்துத் தருபவர்கள் ‘தேர்தல் பிரசார திட்டமிடல் நிபுணர்கள்’ என வர்ணிக்கப்படுகிறார்கள். இந்தியாவில் இப்போதுதான் ஆரம்பித்திருக்கும் இந்தத் தொழிலின் வெற்றிக் குதிரை பிரசாந்த். இரண்டு முறை மோடி ஜெயிக்க பின்னணிக் காரணமாக இருந்த அவர், இம்முறை மோடியை வீழ்த்தக் காரணம், அரசியல்!

‘‘ஓட்டு போடும் பெரும்பாலான மக்கள், கட்சியின் கொள்கைகளைப் பார்ப்பதில்லை. பேச்சுக்களையும் பொருட்படுத்துவதில்லை. தலைவரின் மரியாதையைப் பார்க்கிறார்கள். அவர்கள் சொன்னதைச் செய்கிறார்களா என்று பார்க்கிறார்கள். அதைத் தவிர வேறு எதுவும் முக்கியமில்லை’’ என அதிரடியாக தேர்தல் ஃபார்முலா சொல்லும் பிரசாந்துக்கு 38 வயதாகிறது. சுகாதாரத் துறையில் பணிபுரிந்து, அதில் கவனம் பெற்று ஐ.நா. சபை வரை போன இவர், 4 ஆண்டுகளுக்கு முன்பு தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு இந்தியா வந்தார்.

‘இண்டியன் பொலிடிகல் ஆக்‌ஷன் கமிட்டி’ என்ற அமைப்பை நடத்தும் பிரசாந்திடம் சுமார் 300 பேர் பணிபுரிகிறார்கள். 2012 குஜராத் சட்டமன்றத் தேர்தல்தான் அவரை ஒரு தேர்தல் நிபுணராக அடையாளம் காட்டியது. அதற்கு முந்தைய நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கணிசமான வெற்றிகளைப் பெற்று, நரேந்திர மோடியை வீழ்த்திவிட முடியும் என்ற நம்பிக்கையோடு எழுச்சி பெற்றிருந்தது.

முதல்வர் மோடிக்கு தேர்தல் திட்டமிடல் பணிகளைச் செய்ய அவரது வீட்டிலேயே தங்கினார் பிரசாந்த். ‘வளர்ச்சி’ என்பதை பிரதான கோஷமாக்கியது, மோடி முகமூடி அணிந்த தொண்டர்களை வீதி வீதியாகக் களமிறக்கிவிட்டது என பிரசாந்த் செய்த புதுமைகள் மோடிக்கு மிகவும் பிடித்திருந்தன. நான்காவது முறையாக ஜெயித்தவர், அடுத்து 2014 நாடாளுமன்றத் தேர்தலிலும் பிரசாந்தை தன் பக்கத்தில் வைத்துக்கொண்டார்.

‘‘மோடி எங்காவது போய் டீக்கடை வைக்கட்டும்’’ என மணிசங்கர் அய்யர் பேசிய விஷயத்தைப் பிடித்துக்கொண்டு தன் வியூகங்களை வகுத்தார் பிரசாந்த். நாடெங்கிலும் பாரதிய ஜனதா தலைவர்கள் டீக்கடைகளுக்கு போய் டீ குடித்தார்கள். தனது எளிய பின்னணியை மறக்காத டீக்கடைக்காரராக மோடி ஒவ்வொரு கூட்டத்திலும் பேசினார். அவர் போக முடியாத இடங்களுக்கு அவரது 3டி உருவங்களை உருவாக்கி வாகனங்களை அனுப்பி வைத்தார்கள். மோடி என்ற பெயரை இந்தியர்கள் தினம் தினம் மறக்காமல் உச்சரிக்குமாறு பார்த்துக்கொண்டார் பிரசாந்த். பாரதிய ஜனதா கட்சியினரே எதிர்பார்க்காத தனிப் பெரும்பான்மையோடு மோடி பிரதமர் ஆனார்.

ஒரு தேர்தல் நிபுணராக அவர் தினமும் பல மணி நேரம் மோடியோடு நெருக்கமாக இருந்தது பல தலைவர்களின் கண்ணை உறுத்தியது. ‘‘நாடெங்கும் மோடி அலை வீசியது, அந்த அலையில் நாங்கள் ஜெயித்தோம். இதில் நீங்கள் என்ன பெரிதாக திட்டம் போட்டுவிட்டீர்கள்?’’ என பிரசாந்தை அவர்கள் மட்டம் தட்ட, அவர் மோடியிடமிருந்து விலக நேர்ந்தது. ஆனால், ‘‘என்னை நினைத்து நீங்கள் வருத்தப்படும் நாள் வரும்’’ என அவர்களிடம் சபதம் போட்டுவிட்டு வந்தார் பிரசாந்த்.

தன்னை பாரதிய ஜனதா கைகழுவியதும் நிதிஷ் குமாரிடம் வந்து அடைக்கலமானார். நாடாளுமன்றத் தேர்தலில் தன் கட்சி பீகாரில் தோற்றதால் கோபத்தில் முதல்வர் பதவியிலிருந்து நிதிஷ் விலகியிருந்த நேரம் அது! ‘‘நீங்கள் மீண்டும் ஜெயிக்க வேண்டும் என்றால் உடனே முதல்வர் நாற்காலியில் உட்காருங்கள்’’ என்றார் பிரசாந்த். முதல்வராக இருந்த ஜிதன்ராம் மஞ்சியை பதவி நீக்கம் செய்து, ‘தலித் விரோதி’ என்ற புதிய அடையாளத்தோடு நிதிஷ் மீண்டும் முதல்வரானார். அவர் கட்சியிலேயே நிறைய பேருக்கு அவர் தேறுவார் என்ற நம்பிக்கை இல்லை. ஆனால், ‘‘இந்தத் தேர்தலில் நிதிஷ் ஜெயிக்கவில்லை என்றால், நான் என் தொழிலையே துறந்துவிடுகிறேன்’’ என உறுதியாகச் சொன்னார் பிரசாந்த்.

10 ஆண்டுகள் பீகாருக்கு வளர்ச்சியைத் தந்தவராக, மண்ணின் மைந்தராக நிதிஷை அடையாளம் காட்டினார் அவர். பீகாரில் கிராமப்புற வாக்காளர்கள் அதிகம். அவர்களைக் கவர்வதற்காக மஞ்சள் மற்றும் சிவப்பு வண்ணங்களில் பிரசார போஸ்டர்கள், சுவர் விளம்பரங்கள் தயாராகின. சைக்கிள் பிரசாரம் இன்னொரு ஹிட் அயிட்டம்! ஒரு தொகுதியில் 30 தொண்டர்களுக்கு விசேஷ பெயின்ட் அடித்த சைக்கிள் தரப்படும். அவர்கள் தினமும் 50 வீடுகளுக்குச் சென்று, நிதிஷ் தன் கைப்பட எழுதியது போல் வடிவமைக்கப்பட்ட கடிதங்களைத் தர வேண்டும். பீகாரின் வளர்ச்சிக்கு தான் செய்த திட்டங்களை அதில் நிதிஷ் விளக்கியிருப்பார். அதோடு, அடுத்து செய்யப் போகிற திட்டங்கள் பற்றி ஏழு உறுதிமொழிகளும் அதில் இருக்கும்.

மோடி மந்திரம் பீகாரில் எடுபடாமல் பார்த்துக்கொண்டது பிரசாந்தின் இன்னொரு டெக்னிக். பீகாரில் தனது முதல் கூட்டத்தில் பேச மோடி வருகிறார். அன்று விமானத்தில் இறங்கி, மோடி மேடைக்குப் போகிற வழி நெடுக இருபுறமும் நிதிஷின் போஸ்டர்களை நிரப்பிவிட்டார் பிரசாந்த். அதோடு மோடிக்கு சில கேள்விகளையும் சமூக வலைத்தளங்களில் நிதிஷ் சார்பாக எழுப்பியிருந்தார்.

அன்று மோடியின் பேச்சு, நிதிஷுக்கு பதில் சொல்வதாகவே இருந்தது. இப்படி மோடி என்பவரை நிதிஷுக்கு பதில் சொல்பவராகவே வைத்து, அவரை அந்நியராக உருவகப்படுத்தி ‘பீகாரில் அந்நியர்களுக்கு இடமில்லை’ என உணர்ச்சியைத் தூண்டச் செய்தார். ‘‘நிதிஷின் மரபணுவில் சந்தேகம் உள்ளது’’ என மோடி பேச, அவருக்கு பீகாரிகள் பலரை மரபணு மாதிரிகளை அனுப்பச் செய்யும் பிரசாரத்தையும் கையில் எடுத்து சங்கடம் கொடுத்தார். எல்லாம் சேர்ந்து பி.ஜே.பியை வீழ்த்தியது.

இப்போது பிரசாந்தை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அழைத்திருக்கிறார். உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ், ஜெரால்டு ஆஸ்டின் என்ற அமெரிக்க தேர்தல் நிபுணரை அணுகியிருக்கிறார். இந்தியாவில் தேர்தல்களும் இனி இன்டர்நேஷனல் ரேஞ்சுக்கு போய்விடும்!

- அகஸ்டஸ்