சாவி



மனைவி பங்கஜத்துடன் கோயிலில் பிரகாரத்தை சுற்றி வந்த கணேசனின் செல் அடிக்கடி சத்தமிட்டது. எடுத்துக் கூடப் பாராமல் அர்த்தப் புன்னகையோடு அதை நிராகரித்தார் கணேசன்.சாமி கும்பிட்டு முடித்து பிரகாரத்தில் ஒரு ஓரமாக அமர்ந்தபோது மீண்டும் செல் அதிர்ந்தது. இப்போது எடுத்தார்.

‘‘அப்பா, நான் ரகு பேசறேன். கடையை மூடலாம்னு பார்த்தா கடை சாவியைக் காணோம்! எங்க வச்சீங்க?’’‘‘ரகு... சாரிப்பா! கோயிலுக்குப் போகணும்னு உங்கம்மா கடையாண்ட வந்து நச்சரிச்சா. அந்த அவசரத்துல என் சட்டைப் பையில இருந்த சாவியை மறந்தாப்ல கையோட எடுத்துட்டு வந்துட்டேன். இன்னும் அரை மணி நேரத்துல வந்துடுவேன். வெயிட் பண்ணு!’’ என்றார்.

மனைவி பங்கஜம் இதைக் கேட்டு டென்ஷனாகி, ‘‘சாவியை ஞாபகமா கொடுத்துட்டு வரவேண்டியதுதானே. கோயிலுக்கு வந்தும் நிம்மதியில்ல...’’ என புலம்பினாள்.
‘‘பங்கஜம்... நான் வேணும்னுதான் சாவிய எடுத்துட்டு வந்தேன். நாம கோயிலுக்கு வந்ததும் ரகு கடையை மூடிட்டு ஃப்ரெண்ட்ஸ்களோட சுத்தக் கிளம்பிடுவான். அதைத் தவிர்க்கத்தான் சாவியை எடுத்துக்கிட்டு வந்தேன். நாம கடைக்குப் போக இன்னும் ஒரு மணி நேரம் ஆகும். அதுவரை நல்ல வியாபாரம் நடக்கும்!’’ எனக் கூறி கண் சிமிட்டினார் கணேசன்.

ச.மணிவண்ணன்