‘வேதாளம்’



தனக்கு எதிரான வில்லன்களை அடுத்தடுத்து தீர்த்துக் கட்டுபவனே ‘வேதாளம்’.அடக்க ஒடுக்கமாய் அருமைத் தங்கையை கொல்கத்தா கல்லூரி யில் சேர்க்க வருகிறார் அஜித். அவருக்கு வீடு கொடுக்கும் மயில்சாமி, அஜித்துக்கு ஒரு வேலையும் பார்த்து வைக்கிறார்.

சும்மா இருக்காமல் அஜித் கடத்தல்காரர்களை போலீஸாருக்குக் காட்டிக் கொடுக்க, அவர்கள் அஜித்துக்கு வலை வீசுகிறார்கள். அவர் எதிரிகளை முந்திரி மாதிரி வறுத்து எடுக்க, அவரைப் பின்தொடர்கிற ஸ்ருதி ஹாசன் அதைப் பார்த்து வைக்க, முன்கதைச் சுருக்கம் சொல்கிறார் ‘வேதாளம்’ அஜித்.

அஜித்தின் ரொம்பவும் எதிர்பார்க்கப்பட்ட படம். அந்த பெப்போடு போனால், பாட்டி வடை சுட்ட கதை மாதிரியே பழைய கதைதான். முடிந்த அளவுக்கு முழு வேகத்தில் அதில் அஜித்தின் புகழ் பாடி இயக்கி வைத்திருக்கிறார் இயக்குநர் சிவா.ரசிகர்களுக்காகவே பின்னி பெடல் எடுக்கிற அறிமுகத்தில் அஜித் அதிரடி காட்டுகிறார்.

வெளியூருக்கு ரயில் ஏறும் அஜித், அங்கே பிரபலமான ரவுடிகளுடன் எல்லாம் மோதுகிறார். அஜித்தின் கண் சிவந்து, ரவுடிகளின் உடல் கீழே விழ, மண் சிவந்து, கொல்கத்தா மண்ணையே சிவக்க வைக்கிறார்கள். அப்புறம் லட்சுமி மேனன் தங்கையானது எப்படி? அஜித் ‘வேதாளம்’ ஆனது எப்படி? எனப் பல துப்பாக்கி வெடி, அரிவாள் குத்துக்குப் பிறகு... க்ளைமேக்ஸ்!

சும்மா சொல்லக் கூடாது... அஜித் ஒரு மாத தலைமுடி, தாடியில் வகையாக மிரட்டி எடுக்கிறார். அவர் அமைதியில் சிரித்தாலும், கோபத்தில் சிவந்தாலும் அதை எங்கேயோ பார்த்த மாதிரிதான் இருக்கிறது.

ஆனாலும், வேதாளமாக ‘தெறிக்கவிடலாமா’ என அவர் கேட்கும்போது நம்மிடம் பயம் பாய்ச்சப்படுவது உண்மை. அமைதியான முன்பாதி அஜித்திற்கும், ஃப்ளாஷ்பேக் அஜித்திற்கும் நிறைய வேறுபாடு.     தங்கை பார்க்காத நேரத்தில் தெறிப்பு காட்டுவதும், பார்க்கும்போது சிரிப்பு காட்டுவதுமாக அஜித்திற்கு கை வருகிறது அதிரடி முக மாற்றம். அஜித்தின் இத்தகைய வித்தியாசம் வழக்கமான படங்களில் விரயமாகிறது... கவனத்தில் எடுங்கள் அஜித் ப்ளீஸ்!

ஆனாலும் வேதாள தோற்றத்திற்கு அஜித்தின் லுக், நடை எல்லாம் பக்கா.கொடுத்த தங்கச்சி கேரக்டரில் அட்டகாசமாகப் பொருந்துகிறார் லட்சுமி மேனன். விழுந்து கிடக்கும் வேதாளத்திற்கு உதவுகிற கட்டங்களில் எல்லாம் நடிப்பில் கூடுதல் கவனம் பளிச்சிடுகிறது. நீளநீளமான வில்லன்கள் ராகுல்தேவ், கபீர் சிங் செமயாய் பயமுறுத்தி, கடைசியில் அஜித் கையால் சாகிறார்கள். அஜித், ‘வேதாளம்’ ஆகும் கதையை அஜித் ரசிகர்களுக்கு மட்டுமே செய்த மாதிரி இருக்கிறது. அஜித் ரசிகர்கள் மட்டுமே பார்க்க வருவார்கள் என அதீத நம்பிக்கையா, இயக்குநர் சிவாவுக்கு?

சூரி, கோவை சரளா, மயில்சாமி என அத்தனை பேர் காமெடிக்கு உதவிக்கு வந்தாலும் அஜித்தின் மாஸ்தான் எடுபடுகிறது. என்ன நடந்தும் போலீஸ் எட்டிப் பார்க்காதது தமிழ் சினிமாவில் நடப்பதுதான்... காமெடி ஸ்ருதி ஹாசனுக்கு வருவதாக நினைத்து எடுத்திருக்கும் காட்சிகள்... நமக்கே சிரிப்பு வருகிறது.

அனிருத்தின் ‘ஆலுமா டோலுமா’ பயங்கர ஹிட் ஆட்டம். அந்த ஒரு பாட்டு போதும்பா எனப் பின்வாங்கி விட்டார் அனிருத். ஆக்‌ஷனில் அதிரடி காட்டுவது வெற்றியின் கேமரா!லாஜிக், மேஜிக் என அவ்வளவாக ஈர்க்காததுதான் ‘வேதாள’த்திற்கு வில்லன். ஆனாலும் அதிரடி ஆக்‌ஷனில் ‘தல’, பிடிபடாத ‘வேதாளம்’தான்!

- குங்குமம் விமர்சனக் குழு