கைம்மண் அளவு



‘கரம் பற்றுதல்’ எனில் நம் மொழியில் ‘வதுவை செய்துகொள்ளுதல்’ என்று பொருள். எளிய தமிழில் சொன்னால், திருமணம் முடித்தல். கைத்தலம் பற்றினான் என்றாலும் கரம் பிடித்தான் என்றாலும் அதுவே பொருள்.

நாராயணன் நம்பி, தன்னைத் திருமணம் செய்து கொள்வதாகக் கனாக் கண்ட அன்னவயல் புதுவை ஆண்டாள்,‘மத்தளம் கொட்ட, வரி சங்கம் நின்று ஊத,
முத்துடைத் தாமம் நிரை தாழ்ந்த பந்தல் கீழ்,மைத்துனன் நம்பி மதுசூதனன் வந்து என்னைக்
கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் தோழீ! நான்’

என்கிறாள். ஆக, கைத்தலம் பற்றுவது என்பது, கடிமணம் புரிவது. கடிமணம் என்பது கடிமுத்தம் போன்றதன்று.கம்ப ராமாயணத்தின் பால காண்டத்தில், கடிமணப் படலத்தில், ராமன் சீதையை மணமுடிக்கும் காட்சியை ‘தையல் தளிர்க்கை தடக்கை பிடித்தான்’ என்கிறான் கம்பன். ‘தையலின் தளிர்க்கரத்தை ராமன் வலிய கையினால் பற்றினான்’ என்பது பொருள்.

மேலும் சுந்தர காண்டத்தில் சீதை அனுமன் வாயிலாகச் சில செய்திகளை நினைவு கூரச் சொல்லுவாள். சூடாமணிப் படலம். ‘வந்து எனைக் கரம் பற்றிய வைகல்வாய், இந்த இப்பிறவிக்கு இரு மாதரைச் சிந்தையாலும் தொடேன் என்ற செவ்வரம் தந்த வார்த்தை திருச்செவி சாற்றுவாய்’ என்பது பாடல். ‘வந்து என்னைக் கரம்பிடித்தபோது, இந்த இப்பிறவியில் இன்னொரு பெண்ணைச் சிந்தையினால் கூடத் தொட மாட்டேன் என்று செம்மையான வரம் ஒன்று தந்தான் ராமன். அந்தச் சொல்லை அவன் திருச்செவியில் சொல்வாய் அனுமனே’ என்பது பொருள்.

கரம் பற்றுதல் என்பதற்கு அத்தனை முக்கியத்துவம். எனவேதான் ‘கையைப் பிடித்து இழுத்தான்’ எனும் தொடருக்கு ‘கலவிக்கு வருமாறு பிற ஆடவன் கட்டாயப்படுத்தினான்’ என்று பொருள் கொள்கிறோம். நமது பாரம்பரியமான திருமணச் சடங்குகளில், தாலி கெட்டு அல்லது திருப்பூட்டு ஆன பின்னால், மணமகன் மற்றும் மணமகளின் வலது இடது கரங்களைச் சேர்த்து பட்டுத் துணியால் கட்டி, மணமேடையை மூன்று முறை வலம் வரச் ெசய்வார்கள். அதுவே அக்னியை வலம் வருவதும் ஆகும்.

கோவலன் - கண்ணகி திருமண நிகழ்ச்சியை விவரிக்கும்போது, ‘நீல விதானத்து, நித்திலப் பூம் பந்தல் கீழ், வான் ஊர் மதியம் சகடு அணைய வானத்துச் சாலி ஒரு மீன் தகையாளைக் கோவலன் மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிட தீ வலம் செய்வது காண்பார் கண் நோன்பு என்னை!’ என்கிறார் இளங்கோவடிகள். நீல விதானம், முத்துக்கள் கோர்த்த பூம்பந்தலின் கீழ், சந்திரனும் ரோகிணியும் சேரும் முகூர்த்தத்தில், அருந்ததி எனும் நாள் மீன் போன்ற கண்ணகியை, பெரிய முதிய அந்தணன் மந்திரம் ஓத, கோவலன் கரம் பற்றித் தீ வலம் வந்தததைக் கண்டவர்கள் செய்த தவம் என்ன? வானத்தில் ஊரும் மதியம், ரோகிணி, அருந்ததி எனும் நட்சத்திரம், மாமுது பார்ப்பான், மறை வழி, தீ வலம், நோன்பு எனும் சொற்களையே பின்னாளில் கருஞ்சட்டைப் படையினர் கேள்வி கேட்பார்கள் என்பதை, பாவம் இளங்கோவடிகள் யோசித்திருக்கவில்லை.

பெரிய பிரபுக்களின் மாளிகைகளில், முன்பு நோய்க்கு வைத்தியம் பார்க்கச் சென்றவர்கள், பெண்களின் கை மீது பட்டுத்துணி போர்த்தித்தான் நாடி பிடித்துப் பார்ப்பார்களாம். ஏனெனில் பிற ஆடவர் தொடுகை, கற்பு கெட்டுப் போகச் செய்யுமாம். இன்னும் சில மரபினர், பிணிப் பெண்ணுக்கும் மருத்துவருக்கும் நடுவே திரைச்சீலை தொங்க விட்டு, மருத்துவரைத் திரைச் சீலையின் மறுபக்கம் அமரச் சொல்லிப் பரிசோதிக்கச் செய்வார்களாம். காலம் மனித குல மரபுகளுக்குள் கணிசமான, தலைகீழான மாற்றங்களைக் கொணர்ந்து இங்கு சேர்த்து விடுகிறது.

கரம் என்ற சொல்லுக்கு அகராதி ‘நஞ்சு’ என்றும் ‘வசிய மருந்து’ என்றும் பொருள் தருகிறது. அன்று கையைத் தொடுதலை அப்படித்தான் சமூகம் பார்த்
திருக்கிறது, ஆண் பெண் நட்பில்.எவரைக் கண்டாலும் இரு கரம் கூப்பி வணங்குவது நம் மரபு. மூத்தார் எனில் கால் ெதாட்டு வணங்குவது வட நாட்டு மரபு. அண்மையில் வட நாட்டு நிர்வாகம் நடத்திய பள்ளி ஒன்றுக்கு சிறப்பு விருந்தினராகப் போயிருந்தேன். எல்லா ஆசிரியர்களும் கரங்கூப்பி வணங்கினார்கள். இரு வட இந்திய ஆசிரியைகள் கால் தொட்டு வந்தித்தனர். அது அடிமைத்தனத்தின் எச்ச சொச்சம் என்று சுயமரியாதை சொன்னவர்கள் நமக்குச் சொன்னார்கள். ஆனால், அதிகாரத்தின் முன்னால் ேமனி தரைபடக் கிடந்து வணங்குவது அவர்களுக்கு அடிமைத்தனம் இல்லை.

ஈராண்டுகள் முன்பு எம் வீட்டுக்கு காவல்துறை உயரதிகாரி வந்தார், தமது அலுவல் ஜீப்பில். வீட்டில் நுழையுமுன் காலில் கிடந்த பூட்ஸ் கழற்றினார். ஜீப்பிலிருந்து காவலர் ஒருவர் ஓடோடி வந்தார், கையில் செருப்புக்களுடன். செருப்பை வீட்டு வாசலில் போட்டு விட்டு, பூட்ஸைத் தூக்கிக்கொண்டு ஓடினார். அது அடிமைத்
தனம் இல்லை. ஆனால் மூத்தாரைக் கால் தொட்டுக் குனிந்து வணங்குவது மூட நம்பிக்கை, பிற்போக்கு, அடிமைத்தனம் என்பார்கள்.

வணக்கம் என்பது வாயினால் மட்டுமே சொல்வதல்ல. அந்தச் சொல்லுக்கே ‘கூப்பு கை’, ‘கை கூப்பு’ போன்ற மாற்றுச் சொற்கள் உண்டு. மிகத் தொன்மையான சொல், ‘வணக்கம்’. வணங்கார் என்று பதிற்றுப் பத்தும், வணங்கார்க்கு என்று புறநானூறும், வணங்கியோர் என்று பரிபாடலும், வணங்கினர் என்று அகநானூறும் வணங்கினேம் என்று பரிபாடலும், வணங்கினை என்று குறுந்தொகையும் பயன்படுத்தியுள்ளன.

வணக்கம் எனும் சொல்லைப் பயன்படுத்திய தமிழன், காய்ந்த மாடு கம்பிலே விழுந்தது போல வந்தனம், நமஸ்தே, நமஸ்காரம் எனும் சொற்களுக்குப் பாய்ந்து விழுந்து இன்று மறுபடியும் வணக்கம் என்று எழுந்து நிற்கிறான். வணக்கம் என்பதற்குத் தொழுதல் என்றும் பொருள் உண்டு. என்ன சங்கடம் என்றால், ‘தொழுத கையுள்ளும் பகை ஒடுங்கும்’ என்றார் வள்ளுவர்.

அதாவது, ‘கும்பிட்ட கைகளின் உள்ளேயும் கொலைக் கருவி ஒளித்து வைத்திருப்பார்கள்’ என்று அர்த்தம்.கூடா நட்பு அதிகாரத்தில் வள்ளுவர் சொல்கிறார். ‘சொல் வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம் தீங்கு குறித்தமை யான்’ என்று. ‘பகைவர் வணங்கிப் பேசுவதில் ஏமாந்துவிடாதே! அவர்களது வணக்கம் என்ற சொல், வில்லில் இருந்து புறப்பட்டுப் பாயும் கணைகள் போல் தீமையே குறிக்கும்’ என்பது பொருள். ‘பகைவர்’ எனும் சொல்லை இன்று நாம் ‘தலைவர்’ எனும் சொல்லால் மாற்றிப் பயன்படுத்தலாம். அவர்கள் வணக்கம் சொல்லும்போது, நமக்கு அடிவயிற்றில் தீப் பாய்கிறது, ‘என்ன தீமை செய்வதற்குக் காத்திருக்கிறானோ?’ என்று.

Good Morning, Good Evening, Good Night போன்ற ஆங்கிலச் சொற்களுக்கு காலை வணக்கம், மாலை வணக்கம், இரவு வணக்கம் என்று மொழி மாற்றிப் பயன்படுத்துவதன் பொருத்தப்பாடு குறித்து எனக்கு ஐயம் உண்டு. Weather is good என்பார்கள் ஆங்கிலத்தில். நாம் காலநிலை வணக்கம் என்போம் போலும். நண்பர்களில் சிலர் பொழுது புலர்ந்ததும் ‘வணக்கம்’ எனும் ஒற்றைச் சொல்லில் குறுஞ்செய்தி அனுப்புவார்கள், நாள் தவறாமல். சுருக்கமாக, ஜனவரி முதல் நாளில்
வணக்கம் X 365 என்றால் அவருக்கும் நமக்கும் அலுப்பில்லை.

வட மாநிலத்தவர் சந்தித்த உடன், ‘நமஸ்தே’, ‘நமஸ்கார்’ என்பார்கள். மேலைநாட்டுப் பிற மரபினர், சந்தித்த உடன் கை குலுக்கிக்கொள்வார்கள், வணக்கத்துக்கு மாற்றாக. நமஸ்காரம் ஆனாலும், வணக்கம் ஆனாலும், இடை வளைத்துக் குனிந்து வணங்கும் சீன, ஜப்பான் மரபானாலும், மேலைநாட்டுக் கை குலுக்கல் என்றாலும், அரேபியத் தோள் தழுவல் என்றாலும், கன்னத்தோடு கன்னம் சேர்த்துத் தழுவுதல் என்றாலும் யாவும் நல் மரபுதான். இன்று குறுஞ்செய்தி உலகில் Hug என்றொரு சொல் காற்றை விடவும் வேகமாக வீசுகிறது.

‘அவரவர் இறையவர் குறைவிலர்; இறையவர் அவரவர் விதி வழி அடைய நின்றனரே’ என்பார் நம்மாழ்வார். எவருடைய இறையவரும் குறையுடையவர்கள் அல்லர். அவரவர் செயல் வழியாக அவரவர் இறையவரை அடைய நின்றார்களே என்பது பொருள்.கை குலுக்குதலோ, கன்னத்தோடு கன்னம் சேர்த்தலோ, தோள் தழுவுதலோ, ஆண் - பெண் செய்யும்போது, அவற்றுள் காமம் காண வேண்டிய கட்டாயம் இல்லை. காமம் காண்பவர் இருக்கக்கூடும்.

அவர்கள் எதில்தான் காமம் காண மாட்டார்கள்? ‘Beauty lies on beholders eyes’ என்பார்கள் ஆங்கிலத்தில். அழகென்பது காண்பவர் பார்வையின் கோணத்தில் இருக்கிறது. ‘வேம்பின் புழு, வேம்பன்றி உண்ணாது’ என்கிறார் திருமங்கை ஆழ்வார். எனவே காமம் காண்பவர்கள் எங்கும் எதிலும் நீக்கமற நின்று காமமே காண்பார்கள்.

இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு, கோவையில் ஒரு ஆன்மிகப் பயிலரங்கில் கலந்து கொண்டு, ஒரு கட்டுரையும் வாசித்தேன். ஆணும் பெண்ணுமாக, முதியவரும் இளையவருமாக ஐம்பது பேர் கலந்துகொண்டோம். பயிற்சியின்போது எங்கள் அனைவரையும் ெபரிய வட்டமாகக் கலந்து உட்காரச் சொன்னார்கள். மலர்த்திய ஒருத்தர் உள்ளங்கை மீது மற்றவர் தனது உள்ளங்கையைக் கவிழ்த்தவாறு பற்றிக் கண்மூடிக் கொள்ள வேண்டும். எனது இடது வசத்தில் ஒரு சிறுவன். வலது வசத்தில் தலை நரைத்த மூதாட்டி. கண் மூடிய பின் உள்ளங்கைகளின் ஒன்றிப்பில், வெப்பம், துடிப்பு. ஏதோவோர் சக்தி பாய்ந்தோடிப் போகும் உணர்ச்சி.

திருச்சியில் வாழ்ந்த என் நண்பர் மோதி ராஜகோபால் அடிக்கடி சொல்வார், ‘நாஞ்சில், அடுத்த முறை அம்மாவைப் பார்க்கப் போகும்போது, பக்கத்தில் அமர்ந்து தோள்களைப் பிடித்துக் கொடுங்கள். கால் முட்டுக்களைப் பிடித்துக் கொடுங்கள்’ என்று. மோதியின் அம்மா இறந்தபோது, அம்மாவுக்கு 95 வயது. என் அம்மை 87 வயதில் இருக்கிறாள். தொடுகையில் பாயும் நேயத்தை அவர்கள் உணர்வார்கள், விரும்புவார்கள் என்பார் மோதி. அறிவார் அறிவார், அறியார் அறியார்.
நமது கைகளைக் கூப்பி, இரு பெரு விரல்களும் நம் நெஞ்சைத் தொட்டுக் கொண்டு இருக்கும்படியாக வணங்குவது ஒரு யோக முத்திரை எனில், நாம் மேற்சொன்ன அனைத்து வணக்கப்பாடுகளும் யோக முத்திரையாகத்தானே இருக்க வேண்டும்!

ஆனால் தமிழ் சினிமாக்களில் முன்னொரு காலத்தில், ஆண் பெண்ணைத் தொட்டால் அவள் கற்பு காணாமற் போய்விடும் காற்றில், கற்பூரம் போலக் கரைந்து. நவ நாகரிகமான நாயகனோ, வில்லனோ கை குலுக்கக் கை நீட்டுவார்கள், நாயகி வெடுக்கென இரு கைகளையும் கூப்புவாள். அதாவது பண்பு வழுவாமல், ஒழுக்கம் கெடாமல், கற்புடன் அவள் வளர்க்கப்பட்டிருக்கிறாளாம். அரை மணி நேரம் சென்று,கனவுக் காட்சிகளில் அவள் அடிக்கிற கூத்து நமக்கு வேறு விதமாகப் பாடம் நடத்தும்.

ஒவ்வொரு மனிதரும் ஒவ்வொரு விதத்தில் கை கொடுக்கிறார்கள். கூகுளில் தேடிப் பார்த்தால், எத்தனை வகை கை குலுக்கல்கள் உண்டு என்ற தகவல்கள் கிடைக்கக்கூடும். பூப்போலப் பிடிப்பாருண்டு. பாம்பின் கழுத்தைப் பிடிப்பது போல அழுத்திப் பிடிப்பாருண்டு. பிடித்தவுடன் கையை விடுவித்துக்கொள்வார் உண்டு. நெடுநேரம் குரங்குப் பிடியாக வைத்திருப்பார் உண்டு. எப்போதும் வியர்த்து ஈரம் பாய்ந்த மென் கையர் உண்டு. மண்வெட்டி பிடித்த சொரசொரப்புக் கையர் உண்டு. வெப்பக் கைகள் உண்டு. மனமில்லாக் கையர் உண்டு. நட்பு நாடுகளின் தலைவர்கள், புகைப்படம் அல்லது வீடியோ எடுத்துத் தீருகிற வரை, கையைக் குலுக்கிக்கொண்டே நிற்பார்கள். கையுறை அணிந்து கை குலுக்குகிறார்கள். வெறுங்கையால் குலுக்கிய பிறகு ஓடிப் போய் கை கழுவுகிறார்கள்.

கவிதாயினி ஒருவர் சொன்னார், எங்கு சந்தித்தாலும் ஒரு குறிப்பிட்ட கவிஞர், ஓடிப் போய் அவரின் கையைப் பற்றிக் குலுக்குவாராம். சிறந்த மனிதப் பண்பு என்று எடுத்துக் கொள்ளாதீர்கள். குலுக்கும்போதே, தனது ஆட்காட்டி விரலால் கவிதாயினி உள்ளங்கையைச் சுரண்டுவாராம்! நல்லவேளை, கடவுள் அவருக்கு விரல் இடுக்கில் விதைப் பைகள் வைக்கவில்லை என்று எண்ணிக்கொண்டேன். கவிதைகளில் பெண் விடுதலை என்றும் முற்போக்கு என்றும் யுகப் புரட்சி என்றும் பெரும் பேச்சுப் பேசுகிறவர் அவர்.

எனக்கொரு மேலதிகாரி இருந்தார். சொந்த ஊர் பாலராமபுரம் பக்கம் நேமம். கான்பூர் அலுவலகத்திலிருந்து பம்பாய் தலைமை அலுவலகம் மாற்றலாகி வந்தார். ஷ்யாம் நாயர் என்று பெயர். எனக்கு மார்க்கெட்டிங் மற்றும் வணிக ஆங்கிலம் கற்றுத் தந்தவர். அவருடன் நான் போன பயணம் ஒன்றினை ‘செம்பொருள் அங்கதம்’ எனுமோர் சிறுகதையில் பதிவிறக்கியிருக்கிறேன். மத்தியானம் உணவு இடைவேளையின்போது, சாப்பிடும் முன் கை கழுவ வந்தார் எனில், வழியில் கடவுளே எதிர் நின்று கை கொடுக்க நீட்டினாலும் கை கொடுக்க மாட்டார். சில சமயம் இடக்கையை நீட்டுவார். நோய்த் தொற்று தாக்கி விடுமோ என்ற அச்சம்தான். தனது குளிர்பதன கேபின் கதவை, வலது கை முட்டியால்தான் தள்ளித் திறப்பார்.

காலையில் வீட்டிலிருந்து நீங்கி, வெளி வேலைகள் முடித்து, வீடு திரும்பி, மதிய உணவுக்கு அமரும்முன் சோப்பு போட்டுக் கை கழுவினால் நீரில் பிரியும் அழுக்கு, எனக்கு ஷ்யாம் நாயரை நினைவுபடுத்தும். இன்று திருமண வீடுகளில், குறைந்தது ஐம்பது பேருக்குக் கை கொடுக்கிறோம். நமக்குக் கை கொடுக்கும் ஐம்பதாவது ஆள், ஏற்கனவே ஐம்பது பேருக்குக் கை கொடுத்திருப்பார் என்றாலும், சாப்பிட இலை முன் அமரும்போது, கை கழுவிப் போகத் தோதிருக்காது. சில சமயம் நீரூற்றி இலையைத் துடைக்கிற சாக்கில் தோராயமாகக் கையையும் கழுவிவிடலாம் என்றால், ஏற்கனவே எல்லாம் இலை நிறையப் பரிமாறி வைத்திருப்பார்கள்.

சுகாதாரம் என்பதோர் தப்பான காரியம் இல்லை. என்றாலும் இன்று வரைக்கும் உயிர் வாழ்வது இறையருள்தான். எங்கோ படித்த வரி ஒன்று இப்படிப் போகும். ‘தேவர்கள் எல்லாம் அமுதுண்டும் செத்துப் போனார்கள். ஒருவன் ஆல கால விடம் உண்டும் இருந்து அருள் செய்கிறான்’ என்று.

அண்மையில் நாகர்கோயிலில் ஒரு கல்யாணத்துக்குப் போயிருந்தேன். எனது மாமன் மகளின் மகள் மணப்பெண். மண்டபத்தில் நுழையும்போதே மணப்பெண்ணின் தாயார், ‘‘அத்தான் வாருங்கோ... அக்கா வரல்லியா?’’ என்றாள். சற்று நிதானித்து, மண்டப வரவேற்பு மேசைப் பக்கம் நின்றிருந்த அறுபது பிராயமுள்ள பெண்ணொருத்தியைக் கூப்பிட்டாள். ‘‘யக்கா, நாஞ்சில் நாடனைப் பாக்கணும் பாக்கணும்ணு சொன்னேல்லா!

இன்னா, இவ்வோதான்’’ என்று அறிமுகப்படுத்திவிட்டுப் போனாள். அந்தப் பெண் ஏறக்குறைய எனது எல்லாப் புத்தகங்களையும் வாசித்திருப்பார் போலும். படபடவெனப் பேசிக் கொண்டிருக்கும்போதே கேட்டார், ‘‘ஒங்க கையைப் பிடிச்சுக்கிடட்டுமாண்ணேன்... தப்பா நெனைக்க மாட்டேளே?’’ என்று. கேட்ட மாத்திரத்தில் என் கையை இறுகப் பற்றிக்கொண்டார்.ஒரு எழுத்தாளனாக நான் பெருமிதப்பட்ட கணம் அது!

தமிழன், காய்ந்த மாடு கம்பிலே விழுந்தது போல வந்தனம், நமஸ்தே, நமஸ்காரம் எனும் சொற்களுக்குப் பாய்ந்து விழுந்து இன்று மறுபடியும் வணக்கம் என்று எழுந்து நிற்கிறான்.

கைகுலுக்குதலோ, கன்னத்தோடு கன்னம் சேர்த்தலோ, தோள் தழுவுதலோ ஆண் பெண் செய்யும்போது, அவற்றுள் காமம் காண்பவர் இருக்கக்கூடும். அவர்கள் எதில்தான் காமம் காண மாட்டார்கள்?

நவநாகரிகமான நாயகனோ, வில்லனோ கை குலுக்கக் கை நீட்டுவார்கள், நாயகி வெடுக்கென இரு கைகளையும் கூப்புவாள். பண்பு வழுவாமல், ஒழுக்கம் கெடாமல், கற்புடன் அவள் வளர்க்கப்பட்டிருக்கிறாளாம்.

- கற்போம்...

நாஞ்சில் நாடன்

ஓவியம்: மருது