ஒழுக்கம்



கடையில் புதிதாக வேலைக்கு சேர்ந்த மணியை சோதிக்க விரும்பிய ரத்தினம், பத்தாயிரத்து நூறு ரூபாயை அவனிடம் கொடுத்தார். ‘‘இதுல பத்தாயிரம் ரூபாய் இருக்கு. போய் வங்கியில கட்டிட்டு வா!’’ என்றார்.

வங்கிக்கு போய்விட்டு வந்த மணி, ‘‘சார்! இதுல நூறு ரூபாய் அதிகமா இருக்கு!’’ என்று நூறு ரூபாயை திருப்பிக் கொடுத்தான். அதன்பிறகு சில நாட்கள், கடையில் ஆங்காங்கே ரூபாய் நோட்டுகளைப் போட்டு வைத்து அவனை அடிக்கடி சோதனை செய்தார் ரத்தினம். அனைத்திலும் அவன் தன் நேர்மையை நிரூபித்தான்.

மணி, ரத்தினத்தின் நம்பிக்கைக்கு பாத்திரமானான். அவர் குடும்பத்தில் ஒருவனாக மாறினான்.அன்று ஞாயிறு விடுமுறை... படுக்கையை விட்டு தாமதமாக எழுந்த ரத்தினத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியது அருகில் இருந்த கடிதம்.

‘‘அன்புள்ள அப்பாவுக்கு, மகள் ரேகா எழுதிக்கொள்வது. நான் மணியை விரும்புகிறேன். அவனுடன் செல்கிறேன். நீங்கள் எனக்காக சேர்த்து வைத்திருந்த நகைகள், பணம் எல்லாம் எடுத்துச் செல்கிறேன். என்னைத் தேட வேண்டாம்!’’‘‘அவன் நேர்மைக்கு எக்கச்சக்க சோதனைகள் வச்ச நான், அவன் ஒழுக்கத்தை சோதிக்க மறந்துட்டேனே!’’ எனத் தலையில் கை வைத்தபடி உட்கார்ந்தார் ரத்தினம்.

ஜெ.கண்ணன்