1600 கோடியில் ஒரு சினிமா!



வர்றாரு பிரமாண்ட பாண்ட்

சுமார் 1600 கோடி ரூபாய் செலவில் ஒரு சினிமா எடுப்பதென்றால் சும்மாவா? ‘மூணு வார கலெக்‌ஷனில் இந்தக் காசை எடுத்துடலாம்’ என்ற துணிச்சலும் தெனாவெட்டும் புரொடியூசருக்கு வருகிறதென்றால் அது ஜேம்ஸ் பாண்ட் படம் என்பதால்தான்.

அது என்னவோ என்ன மாயமோ தெரியவில்லை... ஜேம்ஸ் பாண்ட் படம் எக்காலமும் வசூலில் ஏமாற்றுவதே இல்லை. இதோ, இந்த வருடத்தின் ப்ளாக் பஸ்டரான ‘ஜுராஸிக் வேர்ல்டு’ கலெக்‌ஷனை கேஷுவலாக முந்தியிருக்கிறது ‘ஸ்பெக்டர்’!

அக்டோபர் 26ல் உலகம் முழுக்க வெளியாகி, கலக்கிக் கொண்டிருந்தாலும் இந்தியாவில் ‘ஸ்பெக்டர்’, நவம்பர் 20ல்தான் ரிலீஸ். ஸோ, ‘அப்படி என்னதான் இந்தப் படத்துல ஸ்பெஷல்?’ என உங்களுக்கு ஆர்வம் பீறிட்டால், சில நாட்களுக்கு அதை அடக்கிக் கொள்ளத்தான் வேண்டும். அதற்கு முன்னால் இந்த பிரமாண்ட பிளாக்பஸ்டர் பற்றி சில இன்சைட்ஸ்...

* கதை ஒன்றும் பெரிதாக இல்லை. நம்ம பாண்டுக்கு மேலதிகாரியாக வரும் பாட்டி கேரக்டரை (ஏஜென்ட் எம்) போன படத்திலேயே சாகடித்து விட்டார்கள். அவர் இறக்கும்போது சொன்ன வார்த்தைகளில் சில க்ளூ கிடைக்க, அதைப் பின்தொடர்கிறார் பாண்ட். கொள்ளைக் கூட்டங்களுக்கெல்லாம் தலைமையாக ‘ஸ்பெக்டர்’ எனும் கொள்ளைக் கூட்டம் இன்னும் இயங்குவதை அங்கே தெரிந்துகொள்கிறார். வழக்கம் போல சில அழகுப் பெண்களின் உதவி யோடு பாண்ட் அந்தக் கூட்டத்தை பெண்டு நிமிர்த்துவதுதான் கதை.

* இதில் வில்லனாக நடித்திருக்கும் கிறிஸ்டோஃப் வால்ட்ஸ் பல தரப்பிலிருந்தும் பாராட்டப்பட்டிருக்கிறார். படத்தில் அவர் பர்ஃபார்மென்ஸ்தான் ஹைலைட்டாம். பாண்ட் அவரை நெருங்கும் தருணத்தில் வில்லனுக்கும் தனக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதை அறிகிறாராம். அதை, படத்தின் பெரிய ட்விஸ்ட் என்கிறார்கள்.

* எந்த ஜேம்ஸ் பாண்ட் படத்துக்கும் இல்லாத சிறப்பம்சமாக, ஒரு கின்னஸ் சாதனையை சொந்தமாக்கிக் கொண்டு வெளியாகியிருக்கிறது ‘ஸ்பெக்டர்’. சினிமாவுக்கான மிகப் பெரிய குண்டு வெடிப்பு செட், இந்தப் படத்துக்காகத்தான் செய்யப்பட்டிருக்கிறது. சுமார் 7500 லிட்டர் பெட்ரோலும் 33 கிலோகிராம் வெடிப்பொருட்களும் இதற்காக பயன்படுத்தப்பட்டுள்ளன. இயக்குநர் சாம் மேண்டிஸும் ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் நிபுணர் கிறிஸ் கார்போல்டும் இந்தச் சாதனையைப் பகிர்ந்துகொண்டிருக்கிறார்கள்.

* நிறைய கார் விரட்டல் காட்சிகள் படம் முழுக்க வருகின்றன. அந்தப் படப்பிடிப்புக்காக எக்கச்சக்க கார்கள் உடைக்கப்பட்டிருக்கின்றன. எல்லாமே, பென்ஸ், பி.எம்.டபிள்யூ., ஆஷ்லே மேடிசன் உள்ளிட்ட காஸ்ட்லி கார்கள். சுமார் 200 கார்கள் அப்படி உடைக்கப்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள். ‘‘இந்த வருடமே கார் உடைத்தலுக்கான வருடம் போலிருக்கிறது. வருடத் தொடக்கத்தில்தான் ‘ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்’ படத்துக்காக 250 கார்கள் உடைக்கப்பட்டு எங்களிடம் ரிப்பேருக்கு வந்தன. இப்போது அடுத்த இடத்தில் ‘ஸ்பெக்டர்’!’’ என்கிறார்கள் ஹாலிவுட் கார் மெக்கானிக்குகள்!

* இன்று தமிழ் சினிமாவிலேயே கிட்டத்தட்ட ஃபிலிம் வழக்கொழிந்துவிட்டது. எல்லாம் டிஜிட்டல் மயம்தான். ஜேம்ஸ் பாண்ட் வரிசையில் கடைசியாக வந்த ‘ஸ்கை ஃபால்’ படம் 2012ல் வெளியானது. அப்போதே அது முழுமையாய் டிஜிட்டலில் படமாக்கப்பட்டது. அந்தப் படத்தை இயக்கிய அதே சாம் மேண்டிஸ்தான் இந்தப் படத்துக்கும் இயக்கம். ஆனால், இந்த முறை 35 எம்.எம் ஃபிலிமில் ‘ஸ்பெக்டரை’ படமாக்கியிருக்கிறார் அவர். ‘‘என்னதான் டிஜிட்டல் தெள்ளத் தெளிவாக இருந்தாலும் அதில் ஏதோ ஒரு அழகு மிஸ் ஆகிறது. காட்சியில் ஃபிலிம் கொடுக்கும் மேன்மையை டிஜிட்டல் கொடுப்பதில்லை. ஜேம்ஸ் பாண்டின் பழைய படங்கள் போன்ற ஒரு ரிச்னஸ் கிடைப்பதற்காகத்தான் இதை ஃபிலிமில் எடுத்தோம்!’’ என்கிறார் இயக்குநர்.

* பெருமைகளைப் போலவே ஜேம்ஸ் பாண்ட் படங்களில் மிக மிக மோசமாக விமர்சிக்கப்படுவதும் இந்த பிரமாண்ட படைப்புதான். அதற்கு முக்கிய காரணம், படத்தின் நீளம். ‘வெட்டு ஒன்று... துண்டு ரெண்டு’ என இருக்கும் ஒன்றரை மணி நேர ஹாலிவுட் படங்களுக்கு மத்தியில், 2.28 மணி நேரம் இந்த ஜேம்ஸ் பாண்ட் இழுவையாகிறாராம். ‘‘படத்தில் வசனம் மிக அதிகம், ரொமான்ஸ் காட்சிகளும் திகட்டுகிறது’’ என்கிறார்கள் பெரும்பாலான சினிமா விமர்சகர்கள். படத்தின் நீளத்துக்கு ஆக்‌ஷன் குறைவு என்பது ஒட்டுமொத்த யூனிட்டின் ஒப்புதல். கார் சேஸிங் காட்சிகள் 20 நிமிடத்துக்கு ஒருமுறை ஓட்டல் வெயிட்டர் போல வந்து தொந்தரவு கொடுப்பதாக பாண்ட் ரசிகர்களே ட்வீட்டுகிறார்கள்.

ஜேம்ஸ் பாண்ட் படம் ஒவ்வொரு முறை வெளியாகும்போதும், ‘‘இதுவரை வந்ததிலேயே மோசமான படம்’’ என்ற விமர்சனம் வருவது சகஜம்தான். ‘ஸ்கை ஃபால்’ படத்தைக் கூட அப்படித்தான் சொன்னார்கள். ஆனால், இப்போது ஸ்பெக்டரை விமர்சிப்பவர்கள், ‘ஸ்கை ஃபால்’ போல வருமா? என்கிறார்கள். ஆக, விமர்சனங்களை கண்டுகொள்ளாமல், பாண்டுக்காக நாம் காத்திருக்கலாம்!

- ரெமோ