தகுதி



அந்தப் பிரபல ஓட்டலின் ரிசப்ஷனிஸ்ட் வேலைக்கான இன்டர்வியூ. பலரையும் நேர்முகத் தேர்வுக்காக சந்தித்துக் கொண்டிருந்த மேனேஜிங் டைரக்டர், ‘நெக்ஸ்ட்’ என்று மணியைத் தட்டினார். கையில் ஊன்றுகோலுடன் புன்னகை மாறாத முகத்துடன் உள்ளே வந்தாள் சைலஜா. தூக்கிவாரிப் போட்டது அவருக்கு. ‘‘என்னம்மா இது? உன்னோட அப்ளிகேஷன்ல நீ மாற்றுத் திறனாளின்னு குறிப்பிடலையே!’’

‘‘அப்படிக் குறிப்பிட்டிருந்தா நீங்க என்னை இன்டர்வியூவுக்கே கூப்பிட்டிருக்க மாட்டீங்களே சார்! இது ரிசப்ஷனிஸ்ட் போஸ்ட்டுக்கான இன்டர்வியூ. நாளெல்லாம் ஒரே இடத்துல உக்கார்ந்து பார்க்கிற வேலை. கால் நல்லா இருக்கிறவங்க அங்க இங்க எழுந்து போகலாம். ஆனா, என்னை மாதிரி ஆட்கள் எங்கயும் போகாம எப்போதும் உட்கார்ந்து சின்ஸியரா வேலை பார்ப்போம்.

அதனால இந்த போஸ்ட்டுக்கு நான் பொருந்தி வருவேன்ங்கிற நம்பிக்கையில வந்திருக்கேன். என் குவாலிஃபிகேஷனை பாருங்க... தகுதி இருந்தா வேலை கொடுங்க. என்னோட குறை இந்த வேலைக்கு மைனஸ் இல்லை சார், ப்ளஸ்தான்!’’ - சரளமான ஆங்கிலத்தில் பதில் சொன்ன சைலஜாவின் வார்த்தையில் உள்ள உண்மை மேனேஜிங் டைரக்டருக்கு உறைத்தது.‘‘யூ ஆர் அப்பாயின்டெட்... நாளைக்கே வந்து வேலையில சேரும்மா!’’ என்றார் அவர்.

வி.சகிதா முருகன்