பொறுப்பு



‘‘வேன் வந்தாச்சு…’’ அம்மா பதறினாள். ‘‘வித்யா, இன்னும் என்ன பண்ணிட்டிருக்கே? டிபன் சாப்பிட்டாச்சு இல்லே, சீக்கிரம் புறப்படு!’’ என்று மகளுக்குக் கேட்கும்படியாகக் கத்திவிட்டு, அவளுக்கான மதிய உணவை டிபன் பாக்ஸில் போட்டு பேக் செய்ய ஆரம்பித்தாள்.‘தினம் தினம் இதே கூப்பாடுதான்.

அக்கம்பக்கத்து ஃப்ளாட்காரர்கள் வெளிப்படையாகவே கேலி செய்கிறார்கள். இவரோ காலை எட்டு மணிக்கெல்லாம் ஆபீஸுக்குப் புறப்பட்டுப் போய்விடுகிறார். அதற்குள் வித்யாவை எழுப்பிவிடவாவது கூடாதா? ஹும்… ஒரே குழந்தையாக, அதுவும் பெண்ணாகப் பிறந்துவிட்டதில் அநியாயத்துக்குச் செல்லம் கொடுக்கிறார்’ என்ற தனது தினசரி பல்லவியோடு இயந்திரமாக இயங்கினாள் அம்மா.

‘இதோ, வாசலில் வேன் இரண்டு முறை ஹாரன் அடித்துவிட்டது. மற்றவர்களெல்லாம் இவளுக்காக தினமுமா காத்திருப்பார்கள்! ஏதேனும் ஒருநாள் பிரச்னை பெரிதாக வெடிக்கப்போகிறது. இந்த வேன்காரன் தெறிக்க ஓடப் போகிறான். அடுத்து ஆட்டோ அல்லது வேறு வேன் என்று மாற்று ஏற்பாட்டுக்கு இப்போதிருந்தே தயாராகிவிடவேண்டும்!’

‘‘அம்மா! பை... பை...’’ என்று உற்சாகமாகக் குரல் கொடுத்தபடி வந்தாள் வித்யா. அம்மா வைத்திருந்த டிபன் டப்பா அடங்கிய தன் கைப்பையை எடுத்துக்கொண்டாள். புடவை சரசரக்கப் படியிறங்கி, தன்னை அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லும் வாடகை வேனை நோக்கி நடந்தாள்.

ரித்விக்