மருத்துவத் துறையில் சாதிக்க பாரா மெடிக்கல் படிப்புகள்



“மருத்துவத்துறையில் சாதிக்க நினைக்கும் எல்லோருக்கும் அது சாத்தியமாவதில்லை. பாய்ன்்ட் ஒன் கட் ஆஃப் மதிப்பெண்ணில் கூட அந்த வாய்ப்பு பறிபோய் விடலாம். அப்படி ஒரு சூழல் உருவாகும்போது தங்கள் கனவு கலைந்து விட்டதாக மாணவர்கள் வருந்த வேண்டியதில்லை. இருக்கவே இருக்கின்றன பாரா மெடிக்கல் படிப்புகள். மருத்துவர்களோடு இணைந்து சேவையாற்றக்கூடிய இந்தப் படிப்புகளுக்கு ஏராளமான வேலை வாய்ப்புகள் உண்டு. நல்ல கல்வி நிறுவனத்தில் சிறந்த பாரா மெடிக்கல் படிப்புகளைத் தேர்வு செய்து படிப்பவர்களுக்கு சிறப்பான எதிர்காலம் இருக்கிறது...” என்று நம்பிக்கையூட்டுகிற கல்வியாளர் தமிழரசன். வேலை வாய்ப்பு மிகுந்த சில பாராமெடிக்கல் படிப்புகள் பற்றி விவரிக்கிறார். 

B.Sc.,Nursing

உலகின் மிகச்சிறந்த மருத்துவத் தலைநகரமாக தமிழகம் வளர்ந்து வருகிறது. உலகெங்கும் இருந்து ஏராளமான மக்கள் சிகிச்சை பெற இங்கு வருகிறார்கள். புதிது புதிதாக மருத்துவமனைகளும் உருவாகி வருகின்றன. இச்சூழலில் மருத்துவத்துறையின் உயிர்நாடியாக செவிலியர்களின் தேவை அதிகரித்துக் கொண்டே போகிறது. ஒரு காலத்தில் பெண்கள் மட்டுமே நர்சிங் படிப்பைத் தேர்வு செய்தார்கள். இன்று ஆண்களும் நர்சிங் படிக்கிறார்கள். உள்நாட்டில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் இந்திய செவிலியர்களுக்கு மரியாதையும் நல்ல சம்பளமும் வழங்கப்படுகிறது. தவிர, அரசுப்பணிக்கான வாய்ப்புகளும் அதிகம். அதனால் இந்த படிப்பை மாணவர்கள் தாராளமாக தேர்வு செய்யலாம். 130 கல்லூரிகள் நர்சிங் படிப்பை வழங்கி வருகின்றன.

B.Sc., Medical Imaging Technology

அண்மைக்காலமாக மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுவரும் படிப்பு இது. இப்படிப்பை முடித்த மாணவர்கள் எக்ஸ்ரே டெக்னீசியன், ரேடியாலஜிஸ்ட் டெக்னாலஜிஸ்ட், அல்ட்ரா சவுண்டு டெக்னீசியன், நியூக்ளியர் மெடிசின் டெக்னாலஜிஸ்ட் உள்ளிட்ட பல பணிகளுக்குச் செல்ல முடியும். இப்படிப்பு தமிழகத்தில் பல கல்லூரிகளில் வழங்கப்படுகிறது.

ENT Surgical Training

இதுவும் மருத்துவம் சார்ந்த ஒரு தொழில்நுட்பப் படிப்பாகும். இப்படிப்புக்கும் நிறைய தேவை இருக்கிறது. +2வில் உயிரியல் பிரிவை எடுத்துப் படித்த மாணவர்கள் தாராளமாக இந்தப் படிப்பைப் படிக்கலாம். வேலை வாய்ப்பும் அரசு மற்றும் தனியார் துறைகளில் பெருகிவருகிறது.

Bachelor of Mental Retardation(B.M.R)

சிகிச்சை முடித்தவர்களுக்கு தரப்படும் பயிற்சிகள் மற்றும் மருத்துவ முறைகள் பற்றிய படிப்பு இது. இப்படிப்புக்கும் மிகச்சிறந்த எதிர்காலம் உள்ளது. இன்றைய மருத்துவ உலகம் வளர்ந்து வரும் நிலையில் வீடுகளில் இருந்து சிகிச்சை பெறும் அனைவருக்கும் இந்த மருத்துவ முறை மிகச் சிறப்பான ஒன்றாகும்.

Bachelor of Alternative Medical System (B.A.M.S.)

இது இரண்டு ஆண்டுகள் படிக்க வேண்டிய இளங்கலைப் படிப்பு. இந்தியன் போர்டு ஆஃப் ஆல்டர்நேட்டிவ் மெடிசின்ஸ் என்ற நிறுவனம் வழங்குகிறது. இதை அஞ்சல் வழியிலும் படிக்கலாம். படிப்பை முடித்த மாணவர்கள் சிகிச்சை அளிக்க முடியும். சர்வதேச அளவில் வேலைவாய்ப்பு உண்டு. மாணவர்கள் ‘ஹோலிஸ்டிக் ஹெல்த் பிராக்டிஷனர்’ என அமெரிக்கா, கனடா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய  நாடுகளில் தங்களை பதிவு செய்து கொள்ள முடியும். மருத்துவரின் குழுவில் ஒரு உறுப்பினராக இணைத்துக் கொண்டு சிறப்பாக செயல்பட முடியும். இதில் முதுகலை மற்றும் முனைவர் பட்டப் படிப்பும் படிக்க வாய்ப்புள்ளது.

பிசிசியன் அசிஸ்டென்ட் படிப்பை முடிப்பவர்கள் பல்வேறு துறைகளில் பணியாற்ற முடியும். வெளி நோயாளிகள் பிரிவு, அறுவை சிகிச்சை பிரிவு, கொரோனரி கேர் யூனிட், இன்டன்சிவ் கேர் யூனிட், உறுப்பு மாற்று சிகிச்சை மையம், மகப்பேறு மருத்துவம், ரேடியேஷன் தெரபி மற்றும் நியூக்ளியர் மருத்துவம் என மருத்துவத்தின் அனைத்து துறைகளிலும் கால் பதிக்க முடியும்.  மெடிக்கல் மென்பொருள் நிறுவனங்கள், மருந்துகள் துறை, மற்றும் டெவலப்பிங் மற்றும் மார்க்கெட்டிங் நிறுவனங்கள், மருத்துவ சுற்றுலா, மருத்துவக் காப்பீடு என மருத்துவம் சார்ந்த பல துறைகளிலும் வேலை வாய்ப்புகளைப் பெற முடியும்.

Alternative medicine

இந்திய மருத்துவம் எனப்படும் மாற்று மருத்துவப் படிப்புகளும் எம்பிபிஎஸ் படிப்புக்கு இணையானதுதான். B.S.M.S (சித்தா) B.A.M.S (ஆயுர்வேதம்) B.U.M.S (யுனானி) B.N.Y.S (இயற்கை மருத்துவம்) B.H.M.S (ஹோமியோபதி) உள்ளிட்ட படிப்புகளுக்கு ஏராளமான தேவை உருவாகி இருக்கிறது. மருத்துவமனை தொடங்கலாம். அரசு மருத்துவமனைகளிலும் பணிபுரியலாம். தாராளமாக மாற்று மருத்துவத்தை மாணவர்கள் தேர்வு செய்யலாம்.

இவை தவிர பிசிகல் தெரபி, புரோஸ்தடிக் மற்றும் ஆர்த்தோடிக் இன்ஜினியரிங், ஆடியாலஜி, ஸ்பீச் தெரபி, ஹியூமன் பயாலஜி, ரெஸ்பைரேட்டரி தெரபி டெக்னாலஜி, மெடிக்கல் செக்கரெட்டேரியல் சர்வீஸ், அலைடு ஹெல்த் சர்வீசஸ், மெடிக்கல் டெக்னிக், யோகிக் சயின்ஸ், டென்ட்ல் ஹைஜீன்ஸ்ட், ஆப்தமாலஜி என 50க்கும் மேற்பட்ட மருத்துவம் சார்ந்த இளங்கலை மற்றும் பட்டயப்படிப்புகள் உள்ளன. விருப்பத்துக்கேற்ற படிப்புகளை மாணவர்கள் தேர்வு செய்து வளமான வாழ்க்கையைப் பெறலாம்.

-ஸ்ரீதேவி