எஞ்சினியரிங்...



ஃபுட் டெக்னாலஜியும் பெட்ரோ கெமிக்கலும் பெஸ்ட் சாய்ஸ்

பொறியியல் படிப்பில் ஏகப்பட்ட பிரிவுகள், படிப்புகள்... எதைத் தேர்வு செய்வது? எந்தப் படிப்புக்கு எதிர்காலம் உண்டு? எனத் தெரியாமல் தவிக்கிறார்கள் மாணவர்கள். மிகுந்த வேலை வாய்ப்பும், வரவேற்பும் கொண்ட உணவுத்தொழில்நுட்பம் மற்றும் பெட்ரோ கெமிக்கல் படிப்புகள் பற்றி விரிவாக விளக்குகிறார் அண்ணா பல்கலைக்கழக நுழைவுத்தேர்வுகள் மற்றும் சேர்க்கைப்பிரிவின் முன்னாள் இயக்குநர் பேராசிரியர் ப.வே. நவநீதகிருஷ்ணன்.

 B.Tech உணவுத் தொழில்நுட்பம் (Food Technology)

உணவு, உடை, உறையுள் என்ற அடிப்படை மனிதத் தேவைகளில் முதன்மையான உணவைப் பற்றிய தொழில்நுட்பவியல் காலம் கடந்துதான் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது என்பது வியக்கத்தக்க உண்மை. உணவுத் தொழில்நுட்பத்தின் ஆரம்பவடிவம் உணவுப் பராமரிப்பில் காட்டப்பட்ட ஆர்வம்தான். காற்றுப் புகாத புட்டிகளிலும், டப்பாக்களிலும் உணவை அடைத்து வைப்பதன் பயனை நிக்கலஸ் அப்பர்ட் 1810ல் கண்டுபிடித்ததும், ஆல்கஹால், பீர், வைன், பால் முதலியவற்றைக் கெட்டுப்போகாமல் காக்க லூயி பாய்ச்சர் செய்த ஆய்வுகளும் நவீன நோய்த்தடுப்பு நுண்ணுயிர் மருத்துவத்துக்கும் உணவுத் தொழில்நுட்பத்துக்கும் முன்னோடிகள். பால்பவுடர், உறைய வைத்துக் காயவைக்கும் மருந்து தயாரிப்பு முறை முதலியவற்றில் தயாரிப்பு முறைகளைச் செப்பனிடுவது (Process Optimization) உணவுத் தொழில்நுட்பத்தின் விளைவே.

தமிழ்நாட்டில் வேளாண்மைப் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகக் கல்லூரிகள், சில நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் உணவுத் தொழில்நுட்பப் பாடப்பிரிவு உண்டு. CRIRன் அங்கமான CFTRI (மத்திய உணவுத் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம், மைசூர்); மைய அரசின் உணவுப் பதனிடு தொழில்துறை அமைப்பின் கீழ்வரும் NIFTEM ஆகியவை இத்துறையில் சிறப்பு நிறுவனங்கள்.பி.டெக் உணவுத் தொழில்நுட்பப் படிப்பில் உணவு வேதியியல், உணவு நுண்ணியிரியியல், மனித உணவியல், உணவுச் செப்பமும் பதப்படுத்தலும், சுற்றுச்சூழலியல், உணவு நொதிப்புமுறை,  மரபணு மாற்றம், உணவுப் பாதுகாப்பு, அறுவடை கடந்த தொழில் நுட்பவியல் முதலியவை கற்பிக்கப்படுகின்றன. உணவு மற்றும் மருந்தியல், உயிரி வேதியியல், உணவுச் சங்கிலி, உணவு நுண்ணுயிரியியல், மனித ஊட்டவுணவு, உயிரிப் பதனிடல், உணவுத் தயாரிப்புத் திட்டத்தில் ஆக்கத்திறம், மரபியல் ஆகியவற்றில் செய்முறை வகுப்புகள் நடத்தப்படும்.

உணவு ஒவ்வாமை, பால் பொருள் தொழில்நுட்பம், உணவு மணங்களின் வேதியியல், காய்கனித் தொழில்நுட்பம், நியூட்ராசூட்டிகல்ஸ், உணவுக் கழிவு, இறைச்சி மற்றும் மீன் தொழில்நுட்பம், பருப்பு மற்றும் எண்ணெய் விதைத் தொழில்நுட்பம், குளிர்பதனம், பாரம்பரிய உணவுகள், நேனோ அறிவியல், பயோ இன்பர்மேடிக்ஸ் முதலியவற்றிலிருந்து விருப்பப்பாடங்களை (Electives) தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.உணவுத் தொழில்நுட்பம் பயின்றவர்கள் Dietetics, Applied Nutrition, உணவு அறிவியலும் காப்பும், நுண்ணுயிரி ஆய்வு, Toxicology, உணவுத்தரக் கட்டுப்பாடு, விநியோகம் ஆகிய பெரும் துறைகளில் பணியாற்றலாம். உணவு ஆய்வுக்கூடங்கள், நட்சத்திர உணவு விடுதிகள், குளிர்பானத் தொழிலகங்கள், நெல் அரைவைக் கூடங்கள், ஆயத்த உணவுத்துறைகள் ஆகியவற்றில் வேலை பெறலாம். சுயதொழில் புரியும் வாய்ப்பும் அதிகம்.பல தனியார் நிறுவனங்களிலும், அரசு நிறுவனங்களிலும் உணவுத் தொழில்நுட்பம் பயின்றவர்களுக்குக் வேலைவாய்ப்பு உண்டு.

 B.E., B.Tech பெட்ரோகெமிக்கல் என்ஜினியரிங்/ தொழில்நுட்பம்

திரும்ப பெறமுடியாத நிலத்தடிச் செல்வங்களில் முக்கியமானது பெட்ரோலியம். பயன்பாட்டுச் சிறப்பினால் திரவத்தங்கம் எனப் போற்றப்படுகிறது. பெட்ரோலியத்தைப் போலவே அதைப்பற்றிய படிப்பும் மிகுந்த வாய்ப்பையும் வளத்தையும் வழங்கக்கூடியது. இப்படிப்பை இரு பகுதிகளாகப் பிரிக்கலாம். எண்ணெய், எரிவாயு உள்ளிட்ட பெட்ரோலியப் பொருட்களின் இருப்பைக் கண்டறிதலும் வெளிக்கொணர்தலும் Upstream sector என்றும், பெட்ரோலியத்தைச் சுத்திகரித்தல், சந்தைப்படுத்துதல், விநியோகித்தல் ஆகியவற்றை Downstream sector என்றும் சொல்வார்கள். இரண்டிலும் உலக அளவில் நல்ல எதிர்காலம் கொண்ட பணிவாய்ப்புகள் உண்டு.

AC Tech உள்ளிட்ட அண்ணா பல்கலைக்கழகக் கல்லூரிகள் சிலவற்றிலும், ரூர்க்கியிலுள்ள குவாண்டம் குளோபஸ் கேம்பஸ், தான்பாடிலுள்ள இந்தியன் ஸ்கூல்
ஆஃப் மைன்ஸ், Institute  of  Petroleum Studies and Chemical Engineering, University of Petroleum Studies, Uttarkhand, Maharashtra Institute of Technology முதலியவற்றில் இத்துறைப் படிப்புகள் வழங்கப்படுகின்றன.பெட்ரோலியம் எஞ்சினியரிங்கில் பி.இ. படிப்பும், அப்ளைடு பெட்ரோலியம் எஞ்சினியரிங், பெட்ரோ கெமிக்கல் எஞ்சினியரிங், பெட்ரோலியம் ரிபைனிங் மற்றும் பெட்ரோ கெமிக்கல்எஞ்சினியரிங், பெட்ரோலியம் ரிசர்வாயர் மற்றும் புரொட்க்‌ஷன் எஞ்சினியரிங் ஆகியவற்றில் பி.டெக் படிப்புகளும் வழங்கப்படுகின்றன. பட்டயப்படிப்புகளும் உண்டு.

இதற்கான பாடத்திட்டத்தில் கற்பிக்கப்படுபவை : ஆர்கானிக் வேதியியல், வேதியியல் முறைக் கணக்கீடு, இன்டஸ்ட்ரியல் வேதியியல் தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் அறிவியல், பெட்ரோலியம் கண்டறிதலும் பயன்படுத்தலும், வேதியியல் எதிர்வினைப் பொறியியல், இயற்கை வாயுப் பொறியியல், ப்ராசஸ் டிசைன் மற்றும் கட்டுப்பாடு, பெட்ரோலியச் சுத்திகரிப்பு, இன்ஸ்ட்ருமென்டேஷன், ேபாக்குவரத்து, பெட்ரோ கெமிக்கல் யூனிட் ப்ராசஸ், சுத்திகரிப்பு வடிவமைப்பு, ப்ராசஸ் எஞ்சினியரிங்  எகனாமிக்ஸ், பாதுகாப்பு இடர் மேலாண்மையும்.

செய்முறை வகுப்புகளில், வெப்ப மற்றும் பொருள் கடத்தல், பெட்ரோலியத்தின் இயற்பியல் தன்மைகள், ப்ராசஸ் டைனமிக்ஸ் மற்றும் கட்டுப்பாடு, ரெட்ரோகெம் அனாலிஸிஸ் முதலியன இடம்பெறும்.ப்ராசஸ் மாடலிங் அண்ட் ஸ்டிமுலேஷன், உரத்தொழில் நுட்பம், பெட்ரோலிய சுத்திகரிப்புத் துணை எந்திரங்கள், இண்டஸ்ட்ரியல் மேனேஜ்மெ்ன்ட், TQM, ஃப்ளுயிடைசேஷன் பொறியியல், புதிய பிரிப்பு முறைகள், பாலிமர் தொழில்நுட்பம், மல்ட்டி காம்போனண்ட் டிஸ்டிலேஷன் முதலியவற்றிலிருந்து விருப்பப்பாடங்களை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.இத்துறை வல்லுநர்கள், பெட்ரோலியம் ஜியாலஜிஸ்ட், நீர்த்தேக்கப் பொறியாளர், புரொடக்‌ஷன் பொறியாளர், டிரில்லிங் எஞ்சினியரிங் முதலிய துறைகளில் பணியாற்றலாம்.
 
இத்துறைப்படிப்புக்குச் செலவு சற்று அதிகம் என்றாலும், வேலையில் பெறக்கூடிய ஊதியமும் அதிகமே. ஆராய்ச்சி, R&D துறைகளிலும் ஈடுபடலாம்.